ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான தூதுவரின் பரப்புரையை முடக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள்

tgte-savendira-silva

ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சுபா சுந்தரலிங்கம் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கருத்துமோதல் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் வ்றாமிங்கம் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற பொதுநிகழ்வொன்றில், சிறப்பு அதிதியாக சவேந்திரா சில்வா அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

வன்னிப் போரின் போது இடம்பெற்ற போர்குற்றங்கள், மனிதப் படுகொலைகள் குறித்து, விடுதலைப் புலிகள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா சுமத்திக் கொண்டிருந்த வேளை, அரங்குக்குள் நுழைந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சுபா சுந்தரலிங்கம் உட்பட நான்கு தமிழர்கள் அங்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.

பின்னர் கேள்வி நேரத்தின் போது, வன்னிப் போரின் போது வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டமை, இசைப்பிரியாவின் படுகொலை ஆகியனவற்றுக்கு பொறுப்பாக, சவேந்திர சில்வா மீது சுபா சுந்தரலிங்கம் அவர்கள் நேரடியாக குற்றம் சுமத்தினார்.
saventhira_di_silva

இதேவேளை, படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில், சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் சுபா சுந்தரலிங்கம் சுட்டிக்காட்டினார்.

பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சியில் வெளியாகிய போர்குற்றங்கள் தொடர்பிலான ஆதாரங்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்ற போர்குற்ற குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு விடயங்களை தனது கருத்துக்களின் ஆதாரங்களாக சுபா சுந்தரலிங்கம் முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த சவேந்திரசில்வா தான் எந்தவித குற்றத்தையும் செய்யவில்லை எனவும் அவ்வாறு சிலர் செய்திருந்தால் அந்த உண்மை வெளிவரும் என்றும் தெரிவித்தார். தான் நல்லவன் என்பதாலேயே விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதலில் உயிர் தப்பியதாக தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவளை அரங்கிற்கு வெளியிலும் தமிழர்கள் ஒன்றுகூடி தங்களுடை எதிர்பையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

வெள்ளநிவாரண நிதிக்காக, பௌத்த பிக்கு ஒருவரினால் இந்த மண்டபம் எடுக்கப்பட்டு, அரசியல் நோக்கங்களுக்கான பாவிக்கப்பட்டமை குறித்து தேவாலய நிர்வாகம் கடும் விசனம் அடைந்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

Comments