போர்க் குற்றவாளியின் நியமனத்திற்கு எதிராக அவுஸ்திரேலியாவில் போராட்டம்

சிறீலங்கா முன்னால் கடற்படைத் தளபதியும், போர்க்குற்றவாளியுமான அட்மிரல் திஸரா சமரசிங்காவின் நியமனத்தை எதிர்த்து அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்கள் நேற்று (24) ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமரசிங்காவை அவுஸ்திரேலியாவுக்கான தூதுவராக நியமிப்பதற்கு சிறீலங்கா அரசு முயன்று வருகின்றது.

நேற்றைய போராட்டத்தை அவுஸ்திரேலியா தமிழ் சங்கங்களின் அமைப்புக்களான, சிட்னி ஈழத்தமிழ் அமைப்பு மற்றும் கன்பரா தமிழ் சங்கம் ஆகியன ஏற்படு செய்திருந்தன.

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன அனைத்துலக விசாரணைகள் அவசியம் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அவுஸ்திரேலியாவின் குடியுரிமையை கொண்ட பாலித கோகன்னா மீதான விசாரணைகளையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்காலில் 40,000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் சிறீலங்கா கடற்படையினரின் பங்கும் உள்ளது. எனவே சமரசிங்கா ஒரு போர்க்குற்றவாளி என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“சிறீலங்கா போர்க்குற்றவாளியை கன்பராவின் தூதுவராக அனுமதிக்க வேண்டாம்” “பாலித கோகன்னா ஒரு போர்க்குற்றவாளி” என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளும் போராட்டத்தில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments