இப்போது பேயுடன் கூட்டணி, அடுத்து பிசாசுடன் சேரலாம்-சீமான் பேச்சு

seeman_26இப்போது அதிமுக எனும் பேயுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அடுத்து திமுக எனும் பிசாசுடன் சேரும் வாய்ப்பும் வரலாம் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

சீமான் நேற்று கோட்டைப்பட்டினத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அதற்கு வரும் வழியில் அறந்தாங்கியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கேவலமான அரசியல் சூழல்:

இந்த அரசியல் சூழல் கேவலமாக இருக்கிறது. இலவசங்களை கொடுத்து வாக்குகளை பறிக்கும் நிலைதான் உள்ளது. நிரந்தர தீர்வு இல்லை. காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, மீனவர் பிரச்சனைகளூக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சியும் இல்லை.

அதற்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்பதற்காகத்தான் விடியல் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறோம். புரட்சிகளை ஏற்படுத்த வேண்டும்.

ஜெயலலிதா – கருணாநிதி இருவரையும் ஒப்பிட்டுப்பார்த்தால் பேயுடன் கூட்டணி வைப்பதா? பிசாசுடன் கூட்டணி வைப்பதா? என்ற நிலைதான் உள்ளது. இப்போது பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம். அடுத்து பிசாசுடன் கூட்டணி வைக்கும் சூழலும் உருவாகலாம்.

தேர்தலைக் கருதி மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்:

மீனவர்கள் சமீபகாலமாளாக தொடர்ந்து தாக்கப்பட்டுவருகிறார்கள். தேர்தல் காலம் நெருங்கிவிட்டதால் அவர்களுக்கான நிவாரணம் 5 லட்சமாக உயர்ந்துவிட்டது. செல்லப்பன் என்ற மீனவர் கொல்லப்பட்டபோது 3 லட்சமாக இருந்த நிவாரணம் பாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் கொல்லப்பட்டபோது தேர்தலை கருதி 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இனிமேலும் மீனவர்கள் கொல்லப்பட்டால் அவர்களுக்கான நிவாரணம் இன்னும் உயர்த்தப்படலாம். இப்போது நிருபமாராவ் இலங்கை சென்று வந்திருக்கிறார். கொலைக்காரன் ராஜபக்சேவை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்.

அடுத்து பிரதமர் மன்மோகன்சிங் கூட சென்று வர வாய்புள்ளது. இது எல்லாமே தேர்தலுக்கான கண்துடைப்ப்புதான்’’ என்று கூறினார்.

எனது உயிருக்கு ஆபத்து:

என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அரசு உளவுப்பிரிவு இது பற்றி எனக்கு சொல்லவில்லை. ஆனால் தனிப்பட்ட உளவுப்பிரிவுகள் எச்சரித்துள்ளது. அதனால் எங்கு சென்றாலும் எச்சரிக்கையுடனேயே செல்கிறேன்.

தாமரைக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை:

ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனைகள் சொல்வது இயல்பு. மூத்த அரசியல்வாதிகள், அரசியல் சிந்தனையாளர்கள் சொல்வது வழக்கம். அந்த வகையில் சகோதரி தாமரையும் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இன்னும் அந்த கடிதம் என் கைக்கு வந்து கிடைக்கவில்லை. அவர்கள் சொல்லும் கருத்தையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் இல்லை. தேவையானதை ஏற்றுக்கொள்ளலாம் என்றார் சீமான்.

Comments