முள்ளி வாய்க்கால் நினைவு தினமும் தமிழினத்தின் மீள் எழுச்சியும்

மே 18முள்ளி வாய்க்கால் பேரழிவுகளை நினைவு கூரும் தினம். அன்று கருக்கப்பட்டும், பிணங்களாக அடுக்கப்பட்டும், எதிர்காலம் நொருக்கப்பட்டும், சிதைந்து போன எம் மக்களின் அவலங்களை நினைவு கூருவது மட்டுமல்ல, அவர்களுக்கு நீதியான ஒரு எதிர் காலத்தை அமைப்பதற்கான அடித்தளம் போடும் தினமாகவும் மாற்றுவோம்.


கூட்டாக சோகத்தினை நினைவு கூருதல்

எம் தமிழர் மரபுப்படி இழப்பு நடந்த வீட்டில் ஊர் கூடி திரண்டு, சோகத்தை பகிர்ந்து கொள்வது வழமை. படுபயங்கரமான சம்பவங்களை நேரடியாகவோ அல்லது நிழற்பதிவுகளுடாகவோ பார்த்த அனைவரும் மனதில் புதைத்து வைத்துள்ள ஆழமான துயரங்களை, மனதிற்குள் வைத்து புளுங்குவதன் மூலம் சோகம் வெளியே வராது. அதன் பிரதிபலிப்பு ஆழமான உளவியல் காயங்களாக பலரை வருத்துகின்றது. அந்த மனப்பதிவுகளின் துயரத்தை எல்லோரும் பகிர்ந்து கொள்ளும் தினமாக ஆக்குவோம்.

அது மட்டுமல்ல மே 2009 ல், 40,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், பல்லாயிரக்கணக்கான, மக்கள் அங்கவீனர்களாக்கப்பட்டும் 3,00,000 இற்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பு முகாங்களிலும் சித்திரவதைக் கூடங்களிலும், அடைக்கப்பட்டு வதைபட்டனர். சுதந்திரக் காற்றை சுவாசிக்கப் புறப்பட்டவர்கள் நடைப்பிணங்களாக மாற்றப்பட்டனர். நாம் அனைவருமே எமது உற்றார் உறவினர்களை இழந்ததுடன், தாயகத்தின் எதிர் காலத்தையும் முழுமையாக பறிகொடுத்தோம்.

இவ்வாறு பேரழிவிற்கு உட்பட்ட எந்த ஒரு இனமுமே அழிவிலிருந்தும் அதிர்ச்சியிலிருந்தும் விடுபடவும் தம்மைத் தாமே மீளக் கட்டி எழுப்பவும் பல ஆண்டுகள் எடுத்தது வரலாற்றுப் பதிவு. ஆயினும் தமிழீழத் தாயகத்தில் பேச்சை இழந்தவர்களின் குரலாக, விடுதலையின் முதுகெலும்பாக புலம் பெயர் தமிழர்கள் இந்த குறுகிய 18 மாதத்திற்குள் நிதானித்து, மக்கள் கட்டுமானங்களை எழுப்பி உள்ளதுடன், மனிதாபிமானம், ஜனநாயகம், சமத்துவம் போன்ற விழுமியங்களை, காலடியில் மிதித்துவைத்திருக்கும் சிறீ லங்கா அரசிற்கு எதிராக, வீச்சாக எழுந்து நிற்பது மனித வரலாற்றில் ஒரு விதி விலக்கு.

எங்கள் குறைகளை களைந்து தமிழினத்தின் பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்பட்டு, தமிழ் மக்களின் விடுதலையை சிதைத்த சிறீ லங்கா அரசிற்கு எதிரான பலமான சவாலை விடுக்கும் நிகழ்வாக இந்த முள்ளி வாய்க்கால்தினம் அமையவுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையானது மக்களின் நல்வாழ்வு நோக்கிச் செயற்படும் பிரித்தானியாவில் உள்ள அனைத்து அமைப்புகளுடனும், மக்களுடனும் இணைந்து, இதற்கான சகல ஏற்பாடுகளையும் துரித கதியில் செய்து வருகின்றது.

வருகின்ற முள்ளி வாய்க்கால் நிகழ்வு எவ்வாறு அமைய வேண்டும் என்ற ஆக்க பூர்வமான கருத்துகளை மக்களிடம் இருந்து பிரித்தானிய தமிழர் பேரவை எதிர்பார்க்கின்றது. பல்லாயிரம் மக்களின் செயற்பாட்டு சக்தியாக, ஒரு உறுதியான எதிர் காலத்தினை நோக்கி எம்மை புதுப்பிக்கும் உணர்வு பூர்வமான நிகழ்வாக அமையவிருக்கின்றது. எறிகணைகளினாலும், சுடுகலங்களினாலும் சிதைக்கப்பட்டு, வெந்தணலால் கருக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் மண்ணை நினைவு கூரும் நாள், இனி வரும் தமிழரின் வரலாற்றில் புத்தெழுச்சியை கொடுக்கவுள்ளது.

மேலதிக விபரங்கள் கட்டம் கட்டமாக பிரித்தானிய தமிழர் பேரவையினால் வெளியிடப்படும்.

இது தொடர்பான கலத்துரையாடல் 05.03.2011 சனிக் கிழமை அன்று பி.ப 18.30 தொடக்கம் 21.00 வரை Lewisham சிவன் கோயில் மண்டபத்தில், 4a Clarendon Rise, London, SE13 5ES. என்னும் இடத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

ஆர்வமுள்ள அனைத்து மக்களையும், அமைப்புக்களையும், ஊடகவியலாளர்களையும், மற்றும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்

020 8808 0465 | 074 0475 9029

மின்னஞ்சல் மூலம் தொடர்புகளுக்கு: mail@tamilsforum.com or admin@tamilsforum.com
தொடரும் நீதிக்கான போராட்டம் நிச்சயம் வெல்லும்.

பிரித்தானிய தமிழர் பேரவை.

Comments