சோனியாவின் கொலை வெறிக்கு இந்தியாவுக்கான பாதுகாப்பும் சேர்த்தே பலி கொள்ளப்பட்டுள்ளது!

தமிழீழ விடுதலைத் தளத்தில் சிலரால் சில வார்த்தைகள் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எதிரியின் நலனுடன் தொடர்புபட்ட இந்த வார்த்தைகள் பெரும்பாலும் தமிழ் மக்களது உளவுரணைச் சிதைக்கும் நோக்கோடு எடுத்தாளப்படுகின்றது என்பதில் சந்தேகம் கிடையாது.

‘விடுதலைப் புலிகளது பலம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது, தமிழீழ விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்திற்கான சாத்தியம் இனிமேல் கிடையாது, புதிய உலக ஒழுங்கில் தனித் தமிழீழம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, இந்தியாவின் அனுசரணையின்றி ஈழத் தமிழர்களுக்கான தீர்வு சாத்தியம் இல்லை’ போன்ற தமிழீழ விடுதலைக்கு எதிர்மறையான கருத்துக்கள் இவர்களால் விதைக்கப்பட்டு வருகின்றது.

உலகில் எந்த இன மக்களின் விடுதலைப் போராட்டமும் சாத்தியப்பாடுகளின் உள்ளே நின்று நிகழ்த்தப்படவில்லை. மறுக்கப்பட்ட உரிமைகளைப் போராடிப் பெறுவதே விடுதலைப் போராட்டம் எனும்போது, அங்கே சாத்தியங்கள் பலவீனமாகவே இருக்கும். தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்தை முன் நகர்த்திய காலத்தில் நெல்சன் மண்டேலா அவர்களுக்கான சாத்தியங்கள் அங்கே இருக்கவில்லை. நெல்சன் மாணடேலா அவர்கள் ஒரு பயங்கரவாதியாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தார். ஆனாலும், அவரது நம்பிக்கையின் உச்ச வடிவம் தென்னாபிரிக்காவை விடுவித்தது.

சாத்தியமற்ற கள நிலமையில்தான் இஸ்ரயேல் என்ற தேசம் உருவாக்கப்பட்டது. சாத்தியமே இல்லாததாக உலக மக்கள் எண்ணியிருந்த காலத்தில்தான் சோவியத் யூனியன் துண்டுகளாகச் சிதறியது. முடியாது என்ற காலத்தில் உருவான கற்பனையின் காரணமாக மனிதன் சந்திரனின் தரையில் கால் பதித்தான். சீனாவின் பிரமிக்கத்தக்க பொருளாதார வளர்ச்சியும், துனீசியாவில் நடைபெற்ற மக்கள் புரட்சியும் நம்பிக்கைகளின் வெற்றிகளே.

விடுதலைப் புலிகள் யுத்த கள முனையில் தோல்வியைத் தழுவியதற்கு சிங்கள தேசம் மட்டுமே காரணம் இல்லை. விடுதலைப் புலிகளின் உச்ச கட்ட தன்நம்பிக்கையும், துணிவும் உருவாக்கிய அச்ச நிலையில், தமிழீழ விடுதலைப் போராட்டம் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா என எண்ணிக்கைகளில் அடங்காத நாடுகளின் கூட்டு முயற்சியில் அந்தப் போர்க் களத்தில் சமநிலை மாற்றம் உருவாகியது. அதற்கும் முன்பாகவே, தமிழீழ விடுதலைக்கான போர்க் களம் புலம்பெயர் தமிழர்களிடம் கையளிக்கப்பட்டு விட்டது. அந்த விடுதலைத் தீப்பந்தம் புலம்பெயர் தமிழர்களால் ஏந்தப்பட்டுள்ளது என்பதால், விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டாhகள் என்பது வெறும் உளவியல் வார்த்தை மட்டுமே.

தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கு ஈழத் தமிழர்கள் என்ன ஆயுதத்தை எடுப்பது என்பதைத் தற்போதும் தீர்மானிக்கும் சக்தியாக சிங்கள தேசமே உள்ளது. விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய கட்டாயத்திற்கான அத்தனை காரணங்களும் அப்படியே இருக்க, இன்னும் பல புதிய காரணங்கள் சிங்கள அரசால் திணிக்கப்பட்டு வருகின்றது. சிங்களக் குடியேற்றங்களால் தமிழர் பிரதேசங்கள் சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றது. தமிழர்களுக்கான சட்டப் பாதுகாப்பு தமிழர் பூமியிலும் மறுக்கப்பட்டு வருகின்றது. எனவே, வெறும் படை பல அச்சுறுத்தல் மூலம் ஒரு இனத்தை நிரந்தர அடிமைப்படுத்தலுக்குள் வைத்திருப்பது சாத்தியமே அற்ற நிலையில், அதனை எதிர்கொள்ள தமிழீழ மக்கள் ஆயுதம் ஏந்துவதை சாத்திமற்றதாக மறுதலிக்க முடியாது.

‘புதிய உலக ஒழுங்கு’ என்ற சொற்பதம் தமிழ்த் தேசிய சிதைவாளர்களால் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் சொற்பதம் அமெரிக்க – மேற்குலக நலன்களோடு இணைந்ததொரு கருத்தியல். இந்தப் புதிய உலக ஒழுங்கு விதியின் நடைமுறை காலத்தில்தான் அதையும் மீறி, தற்போது தென் சூடான் நாடு பிறப்பின் வாயிலில் உள்ளது. தென் சூடானின் எண்ணை வளமும், அங்கு வாழும் கிறிஸ்தவர்களின் மேற்குலக ஆதரவும் அந்த நாட்டின் உருவாக்கத்திற்கான உந்து சக்தியாகத் திகழ்ந்துள்ளது. தமிழீழ நிலப்பரப்பில் எண்ணை வளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், மேற்குலக நாடுகளின் தமிழீழ மக்களது குடி பரம்பலும், அவர்களது கல்வி, பொருளாதார வளங்களும் ‘புதிய உலக ஒழுங்கு’ என்ற கருத்தியலைத் தகர்த்து, தமிழீழம் உருவாக்கும் வல்லமை கொண்டது என்பதை நாம் எமக்கான நம்பிக்கையாகக் கொண்டு முன் நகர்வது சாத்தியமானதே.

அடுத்ததான ஒரு நிரந்தர அச்சுறுத்தல் தமிழீழத்தின் பிறப்பிற்குத் தடங்கலாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. தமிழீழ விடுதலைக்கான ஆயுத போராட்ட கள உருவாக்கத்திற்கும், அது முள்ளிவாய்க்காலில் பாரிய மனிதப் பேரழிவுடன் முடக்கப்பட்டது வரை இந்தியாவின் கைகள் அங்கே பதிந்திருந்ததை நாம் மறந்துவிட முடியாது. இந்தியாவின் தென்னாசிய பிராந்திய வல்லரசுக் கனவுக்குள் அடங்க மறுத்த சிங்கள அரசைத் தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஆயுதமாக ஈழத் தமிழர்களது தாயகக் கனவை இணைத்துக்கொண்ட இந்தியா எடுத்துக்கொண்ட தவறான முடிவின் பலன்கள் சீனா உருவத்தில் இந்தியாவைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிட்டன.

தனது பொறிக்குள் சிங்கள தேசத்தை வீழ்த்த முயன்ற இந்தியா, தற்போது சிங்கள தேசத்தின் வலைக்குள் சிக்கிக் கொண்டது மட்டுமல்லாமல், அச்சப்படவும் ஆரம்பித்துள்ளது. இலங்கைத் தீவில் பெருகிவரும் சீனாவின் பிரசன்னம் இந்தியாவின் தென் பிரதேசங்களின் பாதுகாப்பிற்கு நிரந்தர அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தமிழீழ மக்களது வாழ்வியல் பிரச்சினையை முன் நிறுத்தி சிங்கள தேசத்தை அச்சுறுத்திய இந்தியா, சோனியா காந்தியின் பழிவாங்கல் நடவடிக்கையால் தனக்கான பாதுகாப்புத் தளத்தை இழந்துள்ளது. விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும்வரை சீனாவின் நகர்வு தமிழீழ மண்ணில் சாத்தியமற்றதாகவே இருந்தது. தமிழக மக்களதும், இந்தியாவினதும் பாதுகாப்புக் கருதி, சீனா கை நீட்டிய பொழுதெல்லாம் விடுதலைப் புலிகள் அதனை நிராகரித்தே வந்தனர்.

ராஜீவ் காந்தியின் படுகொலைக்காக விடுதலைப் புலிகளைப் பழிவாங்கியே தீர்வது இத்தாலிப் பெண்ணான சோனியா காந்தியின் கொலை வெறிக்குப் பலியானது தமிழீழ மக்கள் மட்டுமல்ல, இந்தியாவுக்கான பாதுகாப்பும் சேர்த்தே பலி கொள்ளப்பட்டுள்ளது. ஈழத் தமிழினத்தின் அழிவுக்குக் காரணமான இந்திய அதற்கான விலையைச் செலுத்தியே ஆகவேண்டிய தருணம் வெகு விரைவில் உருவாகும் என்பதை இலங்கைத் தீவு மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு உணர்த்துகின்றது. தனி ஒரு மனிதனுக்காக இந்திய தேசத்தின் பாதுகாப்பு அரண் தகர்க்கப்பட்ட குற்றச்சாட்டில் சோனியா காந்தி தண்டிக்கப்படும் நிலையும் உருவாகலாம்!

- இசைப்பிரியா

Comments

varum varum kaalam varum.eezha varum. thevan varuvaan oli valarum.
mahendran