சிறிலங்காவின் கிழக்கில் பெரு வெள்ளம் எதனையும் விட்டுவைக்கவில்லை - பிபிசி

சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் ஆகிய இனக்குழுமங்கள் அருகருகாக வாழும் ஆழிப்பேரலை அனர்த்தமும் கொடுமையான போரும் அரங்கேறிய கிழக்குப் பிராந்தியம் இன்று பெருவெள்ளத்தினால் மீண்டும் தாக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு கிழக்குப் பிராந்தியத்தினது திருகோணமலை நகரிலிருந்த பி.பி.சியினது சாள்ஸ் ஹவிலண்ட் [The BBC's Charles Haviland reports] எழுதுகிறார்.

பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின் பின்னர் புதிதாகத் திருத்தியமைக்கப்பட்டிருந்த கிழக்குக் கரையோரம் வழியாகச் சென்ற பெருந்தெருத்தான் இது. நாட்டினது பின்தங்கிய இந்தப் பிராந்தியத்திற்கு புதிய வாழ்வினைப் பெற்றுக்கொடுத்த பெருந்தெருவாக இது விளங்கியது.

மூன்று மாதங்களுக்கு முன்னர் நான் இந்த வீதியினைப் பயன்படுத்தியிருந்தேன். தற்போது எல்லாமே நீரில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டது. இந்த வீதியினை யாரோ பிழிந்து நொருக்கியதைப் போல அது சிதைந்து கிடக்கிறது. பெரு வெள்ளம் எதனையும் விட்டுவைக்கவில்லை.

பெரும் பூதமொன்று கிளம்பிவந்து இந்த பெருந்தெருவினை ஆங்காங்கே கடித்துத் தின்றதைப் போலத் தோற்றமளிக்கிறது கிழக்குக் கரையோரம் வழியாகச் செல்லும் இந்த வீதி.

அருகேயுள்ள பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருக்கும் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் பசியுடனும் தாகத்துடனும் இருக்கிறார்கள். உழவு இயந்திரமொன்றில் கொண்டுவந்து வழங்கப்படும் உலருணவையும் தண்ணீரையும் பெற்றுவிடவேண்டும் என்ற துடிப்புடன் வரிசையில் நிற்கிறார்கள்.

இந்த இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் குடும்பத்தவர்கள் ஒவ்வொருவரும் வெள்ளத்தினால் பயங்கரமான அனுபவங்களைச் சந்தித்திருக்கிறார்கள். தனது வீட்டுக்குள் ஐந்து அடிக்கும் மேல் வெள்ளநீர் புகுந்துவிட்டதாக ஆசா பானு என்ற இளம் தாய் எங்களிடம் கூறினார்.

"தொழில் எதுவும் இல்லை. எங்களிடம் உணவில்லை. வழங்கப்படும் உலருணவு நிவாரணத்தில் மாத்திரம் நாங்கள் தங்கியிருக்கிறோம். வயல் நிலங்களெல்லாம் அழிந்துவிட்டன, கால்நடைகளும் இறந்துவிட்டன, வீடுகள் கூடச் சேதமடைந்துவிட்டன. நாங்கள் நிற்கதியாகிவிட்டோம்" என்கிறாள் இந்தத் தாய்.

எங்கும் வெள்ளம் நிறைந்திருக்க ஒருவர் வெள்ளத்தின் ஊடாக நடந்துசென்று ஏதோவொன்றைச் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறார். நிச்சயமாக அது அவரது வீடாக இருந்திருக்கவேண்டும்.

இதற்கு அருகாக வெள்ள நீரினுள் அமிழ்திருக்கும் தங்களுக்குப் பழக்கப்பட்ட பாதைகள் வழியாக எருதுகள் இரண்டு வண்டிலை இழுத்துச் செல்கின்றன.

பெரும்பாலான பகுதிகளிலிருந்து வெள்ள நீர் வடிந்துவிட்டாலும் வீடுகள் அனைத்தும் தம்நிலை இழந்து சேதமடைந்து காணப்படுகின்றன.

வெள்ளம் வடிந்து சென்றபின்னரும் மக்கள் ஏன் இன்னமும் தங்களது வீடுகளுக்குத் திரும்பாமல் இருக்கிறார்கள் என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. இவர்களது வீடுகள் அனைத்தும் சேதமடைந்திருக்கின்றன.

நிசாமும் அவரது நண்பனும் தங்களது பொறுப்பின் கீழிருக்கும் அரசாங்கத்தின் கால்நடை மருந்தகத்தினுள் இருந்து எஞ்சியிருக்கும் வெள்ள நீரினை கூட்டி வெளியே தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

கால்நடைகளுக்கு அவசியமான மருத்துகளையும் அவற்றை வைத்துப் பாதுகாக்கும் குளர்சாதனப் பெட்டியினையும் பாதுகாக்கும் வகையில் வெள்ள அனர்த்தம் இடம்பெற்றது முதல் இவர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்.

"பெரு வெள்ளத்தினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. கட்டடத்தின் ஒரு பகுதியில் வெள்ள நீர் புகுந்தமையினால் மருந்துகள் அனைத்தும் அழிந்துவிட்டன. கோழிகள், மாடுகள், ஆடுகள் மற்றும் நாய்களுக்கான மருந்துகளையே நாங்கள் இங்கு வைத்து விநியோகிப்போம். தற்போது இவை அனைத்தும் அழிந்துவிட்டன" என்றார் நசீம்.

வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு நாங்கள் சென்றபோது பெண்ணொருத்தி அதி உணர்ச்சிவசப்பட்டவர்களாகக் காணப்பட்டாள்.

வெள்ளத்தினால் சேதமடைந்த தனது வீட்டினை எவரும் வந்து அவதானிக்கவில்லை என்றும் தாங்கள் பசியுடனிருப்பதாகவும் வேண்டுமென்றே தாம் புறக்கணிக்கப்படுவதாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டாள்.

இந்தப் பிராந்தியத்தில் இரண்டு முறை வெள்ளம் ஏற்பட்டமையானது இவளைப் போல பலரை ஏதிலி நிலைக்குத் தள்ளிவிட்டது.

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என குற்றச்சாட்டினை கிழக்கு மாகாணசபையினது தலைவர் எச்.எம்.எம் பௌசி மறுக்கிறார். "வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் தொடர்பாக நாங்கள் அதிக கரிசனையுடன் செயலாற்றுகிறோம்" என்றார் அவர்.

"ஆதலினால் தினமும் 24 மணிநேரமும் நாங்கள் பணிசெய்கிறோம். மக்கள் முறையிடும் போதெல்லாம் நாங்கள் அங்கு சென்று நிலைமையினை அவதானிக்கிறோம். வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் உலருணவு நிவாரணப் பணிகளை நாங்கள்தான் கவனிக்கிறோம்" என்றார் அவர்.

இதுபோன்ற மோசமான சமயங்களில் சில நல்ல விடயங்களும் இடம்பெறத்தான் செய்கிறது.

திருகோணமலையின் மூதூர் நகர வீதிகளில் முஸ்லீம் தொண்டுநிறுவனம் ஒன்றைச் சேர்ந்த இளைய தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று சுற்றாடலில் தொற்று நீக்கிகளை விசிறுகிறார்கள். அத்துடன் குடிநீர் கிணறுகளுக்கு குளோறின் இடுவதோடு தங்களால் முடிந்தவரை அவற்றைச் சுத்தம் செய்கிறார்கள்.

முகமட் கனிபாவின் தலைமையிலான இந்தக் குழுவில் 20 தொண்டர்கள் செயற்படுகிறார்கள். "பெரும்பாலான வீடுகளுக்குள் மூன்று அடிக்கும் மேலாக வெள்ளநீர் காணப்படுகிறது. இதனால் வீட்டுச் சுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன" என்றார் கனீபா.

"சில சமயம் மலசலகூடங்களின் குழிகள் நிறைந்து வழிகின்றன. இதன்விளைவாக தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலக்குழிகளைத் திருத்துவதோடு தொற்று நீக்கிகளையும் நாம் விசிறுகிறோம். எங்களது இந்த அமைப்பு எந்தவிதமான கொடுப்பனவினையும் எதிர்பார்க்காது தொண்டாகத்தான் இந்த நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கிறோம். பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்குத் தேவையான இந்தப் பணியினை நாங்கள் செய்துகொடுக்காவிட்டால் அவர்கள் அதிக பணத்தினைச் செலவிட்டுத்தான்
திருத்தவேண்டியிருக்கும்" என கனீபா தொடர்ந்தார்.

விவசாயிகள் உள்ளிட்ட இந்தப் பிராந்தியத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து நிற்கிறார்கள்.

இரண்டுமுறை ஏற்பட்ட இந்தப் பெருவெள்ளத்தின் விளைவாக சிறிலங்காவினது மொத்த நெல் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி முற்றாக அழிந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அஞ்சுகிறது. ஆனால் இதுபோல சிதைந்துவிட்ட தங்களது வாழ்க்கையினை எப்படியாவது மீளக்கட்டியெழுப்பவேண்டும் என்பதில் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் உறுதியுடன் இருக்கிறார்கள்.

தங்களது வாழ்வாதரத்தினை மீளப்பெறுவதற்கான இந்தப் போராட்டத்தில் தாங்கள் வெற்றிபெறுவோம் என இவர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள்.

மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் ஏதிலிகளாக நிற்கும் இந்த மக்களுக்கு உதவும் வகையில் கொடைவழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து 50 மில்லியன் டொலரினை ஐ.நா கோரியிருக்கிறது.

Comments