தேசத் தாய்க்க்கு எங்கள் இறுதி வணக்கம்!
பார்வதி அம்மாள்!
இது ஒரு தாயின் பெயரல்ல! ஒரு தீயின் பெயர்!
இத் தீயிலிருந்து பறந்த ஒருபெரும் காட்டுத்தீயாகியது! சிங்கள இனவெளி அரசுகளை உலுக்கியது! எதிரிகளை இடியெனத் தாக்கி நடுநடுங்க வைத்தது! தேசத்துரோகிகளைத் தேடி வேட்டையாடியது!
குன்றாத வீரமும், குமுறும் இலட்சிய வேட்களையும், விட்டுக்கொடுக்காத விடுதலை நாட்டமும் சுமந்து தமிழீழ மண்ணெங்கும் வலம் வந்தது! நெருப்பாறுகளை நீந்திக் கடந்து நிமிர்ந்து நடந்தது!
அவன் -
எமது மக்களின் நெஞ்சம் நிறைந்த தலைவனாகினான்! எமது மக்களின் நெஞ்சில் தேசிய உணர்வைப் பட்டை தீட்டினான். விடுதலை இலட்சியத்துக்காக எதையுமே தியாகம் செய்யத் தயாரான போராளிகளை உருவாக்கினான்.
அவன் நாட்டு மக்களுக்குத் தலைவன்!
மூத்த ஆதரவாளர்களுக்குத் தம்பி!
விடுதலைப் போராளிகளுக்கு அண்ணன்!
எதிரிகளுக்கோ அவன் சிம்ம சொப்பனம்!
அடக்கு முறைக்கு முன்பு அவன் ஒரு பெரும் காட்டுத் தீ!
அவன் தான் -
எமது தேசியத் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன்!
அந்த மகத்தான தலைவனைப் பெற்றெடுத்துப் பெருமை பெற்றவர் எமது தேசத் தாய் பார்வதி அம்மாள்!
பாலூட்டிய போதும் நிலாக்காட்டி சோறூட்டிய போதும் அவளுட்டிய நியாயம், தர்மம், சத்தியம் அவனை அநியாயங்களுக்கு எதிரானவையாக, அடக்குமுறைக்கு அடிபணியாதவகையாக, சத்திய நெறியில் நின்று வழுவாதவனாக வழுவாதவனாக, தியாகங்கள் செய்யத் தக்கவனாக, தன்னை விட தான் பிறந்த மண்ணையும், மக்களையும் நேசிப்பவனாக வளர்த்தெடுத்தது.
எனவே -
அவன் பாலக வயதில் போராளியானான்! ஆயுத அடக்குமுறைக்கு ஆயுத வன்முறை மூலமே பதிலளிக்க முடியுமென்பதை எமது மக்களுக்கு உணர்த்தினான். ஆயிரக்கணக்கில் இளைஞர்களைத் திரட்டி பயிற்சி அளித்து விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கினான்.
இலட்சிய வேட்கையும், வீரமும், கட்டுப்பாடும் விடுதலைப்புலிகளை உலகிலேயே சிறந்த விடுதலைப் போராட்ட அமைப்பக உருவாக்கியது.
முதலில் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டது!
அடுத்து – இராணுவ முகாம்கள் ஒவ்வொன்றாகத் தகர்க்கப்பட்டன!
விடுதலைப் பிரதேசங்கள் உருவாகின!
தன்னாட்சிக்கான நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது!
தரைப்படை, கடற்படை, விமானப்படை, புலனாய்வுப்படை, கரும்புலி அணி என ஒரு அரசுக்கேயுரிய படைக்கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.
ஆம்! எமது தலைவன், பார்வதியம்மாள் என்ற தீயிலிருந்து பற்றி பெருங்காட்டுத் தீயாக வியாபித்து விட்ட எமது தலைவன் உலகமே வியக்கும் வண்ணம் நிமிர்ந்து நின்றான்.
எனினும் சமாதானம் எனவும் போர்நிறுத்தம் எனவும் பேச்சுவார்த்தை எனவும் சர்வதேச சமூகம் எம்மீது சதி வலை விரித்தது.
எம்மில் சிலர் அவ்வலையில் வீழ்ந்தனர்.
ஒரு கொடிய இன அழிப்புப் போர் எம்மீது கோரமாக திணிக்கப்பட்டது! எதிரிகளும், துரோகிகளும் இணைந்து எமது மக்களைப் பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்தனர். பல்லாயிரம் உயிர்களின் தியாகத்தில், ஏராளமான உடைமைகள் இழப்பின் மத்தியில் கட்டி வளர்க்கப்பட்ட விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் சதியாலும், துரோகிகளின் கீழ்த்தரமான செயற்பாடுகளாலும் தோற்கடிக்கப்பட்டது!
எமது தலைவனின் தாயும் தந்தையும் கூட சிறைப்படுத்தப்பட்டனர். வயது முதிர்ந்த அவர்களையும் சிங்களம் சிறைப்படுத்தி மகிழ்ந்தது.
பார்வதி அம்மாள் சிறையிலேயே கணவனை இழந்தார்!
தாங்க முடியாத அந்தத் துயரம் அவரைத் தாக்கியது! ஆனாலும் அவர் அதைத் தாங்கினார்!
ஏனெனில் – அவர் பட்ட துயரங்களெல்லாம் அவர் விடுதலைக்குக் கொடுத்த விலைகள்!
இப்போது – காலன் அவரையும் கவர்ந்து கொண்டான்!
ஆனால் -
அவர் ஒரு சாதாரண தாயாக இறக்கவில்லை! ஒரு பெரும் வரலாற்றை எழுதிய ஒரு மகத்தான தலைவனின் தாயாகவே அவர் மரணமாகியுள்ளார்.
எனவே தான் – மீண்டும் சொல்கிறோம்!
அவர் தாயல்ல! ஒரு தீ! தலைவன் என்ற பொறியை பற்றுவித்து பெரும் காட்டுத்தீயாக வலம் வர வைத்த தீ!
தீ அணைந்து விட்டது!
அந்த தீ கக்கிய பொறி காட்டுத்தீயாக மாறி வலம் வந்த போது சிந்திய நெருப்புத் துளிகள் மீண்டும் பெருந்தீயாக எரியும்!
விடுதலை என்ற இலட்சியத்தை அடையும் வரை அணையாது எதியும் என உறுதி கூறி -
எங்கள் தேசத் தாய்க்கு எங்கள் இறுதி வணக்தக்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Comments