யாழ் உதயன் பத்திரிக்கையின் தேசவிரோதம் அம்பலம்


தமிழீழ மக்களின் விடுதலைக்காக உன்னதமான தலைவனை தந்த ஈழத்தின் தாயின் இழப்பினால் உலகின் தமிழ் இனம் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் யாழில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை சிறீலங்கா இராணுவ அதிகாரிகளை அழைத்து ஆனந்த திருவிழா நடத்தியுள்ளது.

நேற்றைய நாள் (20) உதயன் பத்திரிகையின் வெள்ளிவிழா நாளாக இருந்தபோதும், தேசத்தின் தாய்க்கு மதிப்பளித்து அதனை பிற்போட்டிருக்கலாம் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கை.

வல்வெட்டித்துறை அமெரிக்க மிசன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெறவிருந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி கூட பிற்போடப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் அழுத்தம், கல்வித்திணைக்களத்திற்கு பதில் வழங்கவேண்டிய தேவை, அரசின் உதவியில் இயங்குதல் போன் அழுத்தங்களின் மத்தியிலும் பாடசாலை நிர்வாகம் துணிச்சலான முடிவை மேற்கொண்டிருந்தது.

ஆனால் உதயன் நிர்வாகம் தமது களியாட்டத்தை நிறுத்த முற்படவில்லை. அது மட்டுமல்லாது சிறீலங்கா இராணுவத்தினராலும், அரசுடன் இணைந்து இயங்கும் துணைஇராணுவக்குழுக்களினாலும் படுகொலை செய்யப்பட்ட உதயன் பத்திரிகை பாணியாளர்களுக்கு சிறீலங்கா இராணுவத்தின் யாழ் நகரப்பகுதி கட்டளை அதிகாரி கேணல் பெரேரா மாலை அணிவித்தது, கொல்லப்பட்டவர்களை அவமரியாதை செய்ததற்கு சமனாகும்.

இந்த செயலைக் கண்டு பணியாளர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் மிகுந்த வேதனையடைந்திருந்தனர்.

நிகழ்விற்கான கௌரவ விருந்தினர்களாக யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துரசிங்கவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரும் குறிப்பிடப்பட்டு அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டமையை காரணமாகக் காட்டி நிகழ்வினை இடை நிறுத்த முடியாது என்று கூறலாம்.

அவ்வாறாயின் தேசியம் எனச் சொல்லிக் கொள்வது எதனை? தேசியத்திற்காக கொடுக்கப்பட்ட அதி உயர் விலைகளுக்கு ஈடாக கௌரவ விருந்தினர்கள் குறித்த நிறுவனத்தால் கருதப்படுகின்றார்களா? போன்ற கேள்விகளுக்கான பதில் தான் என்ன?.

எந்த இராணுவத்தால் தலைவர் அவர்களின் தந்தையாரும், தாயாரும் நிரந்தர நோயாளிகளாக்கப்பட்டு உயிரிழப்பு வரையில் அவர்களைத் தள்ளும் நிலை ஏற்பட்டதோ அதே இராணுவத்தின் அதிகாரி ஒருவருக்கு சிறப்பு மரியாதை கொடுக்கப்பட்டு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

அதேவேளை உடலத்தை பொறுப்பேற்கவோ அதனை பார்வையிடவோ முடியாத அளவிற்கு வல்வெட்டித்துறை வைத்தியசாலையினை முற்றுகையிட்டு இராணுவம் நிலை கொண்டிருக்கின்றது. வைத்தியசாலையின் ஒதுக்குப்புறமான அறை ஒன்றில் அனாதை போல வீரத் தலைவனின் தாயாரின் உடலம் வைக்கப்பட்டிருக்கின்ற அவலம் உதயன் பத்திரகை நிறுவனத்திற்கு தெரியாதா?


பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதுபோல உதயன் நிர்வாகத்தின் தேசியத்திற்கு ஆதரவான நாடகம் நேற்றுடன் அம்பலத்திற்கு வந்துள்ளது.

- சரிதம்.

Comments