புலிகளுக்கு எதிரான போருக்கு சிறிலங்கா கடற்படைக்கு வழங்கிய ‘சயுரால‘ என்ற போர்க்கப்பல்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படைக்கு இந்தியா வழங்கிய ‘சயுரால‘ என்ற போர்க்கப்பல் மீளவும் இந்திய கடலோரக் காவல்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தீவிரமடைந்திருந்த கட்டத்தில் கடல் முற்றுகையைத் தீவிரப்படுத்தி கடற்புலிகளின் விநியோகங்களைத் தடுப்பதற்காக சிறிலங்கா கடற்படைக்கு இந்திய கடலோரக் காவல்படை ஆழ்கடல் ரோந்துக்கப்பல் ஒன்றை வழங்கியிருந்தது.



‘விக்ரகா‘ என்ற பெயருடைய இந்தப் போர்க்கப்பல் 2008ம் ஆண்டு சிறிலங்கா கடற்படையிடம் இந்தியா ஒப்படைத்திருந்தது.

சிறிலங்கா கடற்படையில் இணைக்கப்பட்ட இது திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இருந்து கடல்முற்றுகை மற்றும் ஆழ்கடல் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டது.
கடந்த 29 மாதங்களாக சிறிலங்கா கடற்படையில் ‘சயுரால‘ என்ற பெயருடன் இணைக்கப்பட்டிருந்த இந்தப் போர்க்கப்பலே தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து இந்தப் போர்க்கப்பலை இந்தியா மீளப் பெற்றுள்ளது.

கடந்த மாதம் 23ம் திகதி கொச்சி கடற்படைத் தளத்தில் இந்தக் கப்பல் அதிகாரபூர்வமாக இந்திய கடலோரக் காவல்படையிடம் கையளிக்கப்பட்டது.

சிறிலங்கா கடற்படையின் மேற்குப் பிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் தமயந்த தர்மசிறிவர்த்தன இந்தப் போர்க்கப்பலை இந்திய கடலோரக் காவல்படையின் மேற்குப் பிராந்தியத் தளபதி பஸ்ராவிடம் கையளித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு எந்தவிதமான ஆயுத உதவிகளையும் சிறிலங்காவுக்கு வழங்கவில்லை என்று இந்தியா கூறிவந்தது.

ஆனால் சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த நிலையில் இந்தப் போர்க்கப்பலை இந்தியா மீளப் பெற்றுக் கொண்டதானது, புலிகளுக்கு எதிரான போருக்காகவே இது சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டது என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.

Comments