புலிகளின் தேசத்தில் பெரும் புயல் ஒன்று அடித்தது. அந்தப் புயலின் சீற்றத்தில், கோபுரங்கள் சாய்ந்து வீழ்ந்தன. அங்கிருந்த மூலவர் காணாமல் போனார். மக்கள் விரக்திக்குள் தள்ளப்பட்டார்கள். அழுதார்கள். புலம்பினார்கள். ஆனாலும் நம்பிக்கை தளராமல், மூலவர் மீண்டும் வருவார் என்ற காத்திருத்தலோடு அவர்கள் தங்கள் பாதையில் பயணித்தார்கள்.
சாய்ந்து வீழ்ந்த கோபுரத்தின் பொந்துகளிலிருந்து சில வெளவால்கள் வெளியே வந்தன. மூலவர் இல்லாத கர்ப்பக்கிரகத்தைப் பார்த்ததும் அவைகளின் சின்னத் தலைகளுக்குள் பெரிய ஆசைகள் உள் நுழைந்தன. துரப் பறந்து சென்று, கூட்டம் போட்டன. கோபுரத்தின் பொந்திலிருந்து ஏற்கனவே கலைத்துவிடப்பட்ட ஒரு மூத்த வெளவால் அதற்குத் தலைமை வகித்தது.
'சூறாவளி மூலவரையும் சிதைத்து விட்டது. அவர் மீண்டும் வரமாட்டார். அந்த இடத்தை நான் நிரப்புகின்றேன்' என்று அந்த மூத்த வெளவால் அறிக்கையிட்டது. கைகளுக்கு எட்டாத தூரத்தில் இருந்து அந்த வெளவால் விட்ட அறிக்கையைப் பார்த்து மக்கள் வேதனையிலும் சிரிக்கவே செய்தார்கள். மூத்த வெளவால் கோபமாகப் பார்த்தது.
'தலைகீழாகத் தொங்கும் உன்னால் எப்படி எங்களுக்குத் தலைவன் ஆக முடியும்?' என்று மக்கள் கேலியாகச் சிரித்தார்கள்.
மூத்த வெளவால் நிமிர்ந்து உட்கார்ந்து நிரூபிக்க முயன்றது. அதனால் முடியவில்லை. தலைகீழாகத் தொங்கியபடியே, 'நான்தான் உங்கள் தலைவன்' என்றது. மக்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. பேரிழப்பிற்கும், பெரும் அழிவுக்கும் உள்ளான அந்த மக்கள் தற்கள் வேதனைகளையும் மறந்து, பெரிதாகவே சிரித்தார்கள்.
'நீங்கள் இப்போது சிரிப்பதற்கு நான்தானே காரணம். என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டால் நீங்கள் இப்படியே மகிழ்ச்சியாக இருக்கலாம்' என்று தலைகீழாகத் தொங்கியபடியே இரஞ்சியது.
'முட்டாள் வெளவாலே, நாங்கள் சிரித்தது மகிழ்ச்சியினால் அல்ல, எங்கள் சூரியத் தேவன் பூமிக்கு நிமிர்ந்தே நிற்க முடியாத நீ தலைவனாக வருவதா...? உன்னுடைய ஆசையின் பரிதாபத்தைப் பார்த்தே நாங்கள் சிரிக்கின்றோம்' என்று மக்கள் கேலியாகக் கூறினார்கள்.
கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற மூத்த வெளவால், மனதுக்குள் கறுவிக்கொண்டது. தன்னை ஏற்காத அந்த மக்களைத் தண்டிக்க எண்ணியது. தன்னுடன் கூட்டுச் சேர்ந்த ஒரு வெளவாலை தலைமைச் செயலகத்திற்குத் தலைவராக்கியது. இன்னும் சில நாடு கடந்த வெளவால்களைக் கொண்டு, 'நாடு கடந்த அரசு' ஒன்றை அமைத்து, தனக்கு நம்பிக்கையான ஒரு மனிதரை அதற்குத் தலைவன் ஆக்கியது. நாடு கடந்த வெளவால்களால் அந்த மனிதன் சிறை பிடிக்கப்பட்டு, மூத்த வெளவாலின் கட்டளைகளை நிறைவேற்றும் பொம்மை ஆக்கப்பட்டான். அப்போதும் மக்கள் வேதனையுடன் சிரித்துக்கொண்டார்கள்.
மூத்த வெளவால் அந்த மக்களை கருவறுக்க முடிவு செய்தது. அவர்களது பகை நாடான சிங்கங்களின் தேசத்திற்குத் தகவல் அனுப்பியது. அங்குள்ள வெளவால்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. 'புலிகளின் தேசத்தை அடிமைப் படுத்த இதுவே தருணம்' என்று ஆலோசனை கூறியது.
'புலிகளின் தேசத்திலிருந்து புலம்பெயர்ந்த மக்களை 'நாடு கடந்த அரசு' என்ற வெளவால் பொறிக்குள் சிக்க வைக்கலாம். அதற்குள் சிக்க மறுப்பவர்களுக்குள் தலைமைச் செயலகத்தின் பொறுப்பு வெளவால் மூலம் குழப்பங்களை உருவாக்கலாம். அதற்கு நான் பொறுப்பு. எனக்கு என்ன தருவீர்கள்?' என்று கேட்டது.
'புலிகளின் தேசத்திற்கு உன்னையே தலைவனாக நியமிக்கின்றோம். அதுவரை, உனது விசுவாசத்தை எங்கள் சிங்க தேசத்திற்குக் காட்டு' என்று சிங்க தேசத்து வெளவால்கள் கட்டளை இட்டன.
'மூத்த வெளவாலின் சதிகளை உணர்ந்து கொண்ட புலிகளின் தேசத்து மக்கள், அதற்குள் சிக்காமல் தப்பித்துக் கொண்டார்கள். மூத்த வெளவால் கோபத்தின் உச்சிக்கே சென்றது. சிங்க தேசத்திலிருந்து கட்டளைகள் பறந்தன. புலம்பெயர் வெளவால்களும், தலைமைச் செயலக வெளவால்களும், நாடு கடந்த வெளவால்களும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டங்கள் கூடின. 'புலிகள் தேசத்தின் புலம்பெயர் மக்களை கருவறுத்தால் மட்டுமே, மூத்த வெளவாலின் ஆசை நிறைவேறும். எங்களுக்கும் தொங்குவதற்குப் புதிய கோபுரங்கள் கிடைக்கும். எனவே, நாங்கள் இங்கே ஒரு கோபுரத்தை உருவாக்குவோம், அடங்க மறுக்கும் புலிகள் தேசத்து மக்களை அடைத்து, அடக்கி அடிபணிய வைப்போம்' என்று உறுதி எடுத்தன.
வெளவாலகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, 'வெளவால்கள் நடுவம்' என்ற சபையை உருவாக்கின. 'புலிகளின் தேசத்துத் தடைகளைத் தகர்ப்போம்' என்ற கோசத்துடன் புலிகளின் தேசத்துப் புலம்பெயர் மக்களை அழைத்தன. மக்கள் அப்போதும் வேடிக்கையாகச் சிரித்தனர். வெளவால்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
சிங்க தேசத்திலிருந்து கட்டளைகள் பறந்தன. உடனடியாக, புலிகள் தேசத்தின் புலம்பெயர் மக்களைக் குழப்பும்படி தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. 'புலிகள் தேசத்துத் தலைமைச் செயலகத்தை நிராகரிக்கிறோம். வெளவால்களின் தலைமைச் செயலகமே, உங்களுக்கு வழிகாட்டும்' என்று வெளவால்களின் தலைமைச் செயலகத்திலிருந்து அறிக்கைகள் வெளிவந்தன.
புலிகள் தேசத்தின் புலம்பெயர் மக்கள் அப்போதும் சிரித்துக்கொண்டனர். எதுவுமே முடியாத தங்களது நிலையைப் பார்த்து வெளவால்களுக்கே அழுகை வந்தது.
'நாங்கள் நேராக நிற்காதவரை, மனிதர்கள் எவரும் எங்களை மதிக்கப் போவதில்லை. நாங்கள் சொல்வதைக் கேட்கவும் போவதில்லை. எனவே, பைத்தியக்காரத்தனமான இந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு, நாங்களும் சிங்க தேசத்திற்கு வருகின்றோம். எங்களுக்கும் அங்கே தொங்குவதற்கு வசதியான இடத்தைப் பாருங்கள்' என்று தலைகீழாகத் தொங்கியபடியே மிண்டும் சிங்க தேசத்திற்குத் தகவல் அனுப்பியது.
- சிரித்திரன்
Comments