ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் தெருவில் இறங்கி எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் மட்டுமல்லாமல் அலெக்சாண்டீரியா உள்ளிட்ட எல்லா நகரங்களின் மையப் பகுதிகளையும் தங்கள் வசப்படுத்தி இருக்கிறார்கள். ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்கள், அரசு தொலைக்காட்சி நிலையங்கள், ஏன், அரசுக்கு ஆதரவான பத்திரிகை அலுவலகங்கள் அனைத்துமே தாக்கப்படுகின்றன.
ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர்ப்புகை வீச்சிலும், தடியடிப் பிரயோகங்களிலும் காயமடைந்திருக்கிறார்கள். இணையதளம், செல்பேசி போன்றவை அரசால் முடக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் வலுத்து வருகிறதே தவிரக் குறைவதாகத் தெரியவில்லை.
இதற்கு முன்பு இதுபோன்ற மக்கள் போராட்டம் ஒன்று 1977-ல் எகிப்தை ஸ்தம்பிக்க வைத்தது. அதற்கு ‘ரொட்டிக் கலவரம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. உணவுப் பஞ்சம்தான் அந்தக் கலவரத்துக்குக் காரணம். அன்றைய அதிபர் அன்வர் சதத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தி, ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலிய அந்தக் கலவரத்தைப் போலவே, இந்த மக்கள் புரட்சியும் ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலக்கூடும்.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தரும் தகவல்களும், அல் ஜஸீரா தொலைக்காட்சி சேனலின் முனைப்புடன் கூடிய மக்கள் புரட்சிக்கு ஆதரவான செய்திகளும், எகிப்தில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சிக்கு வலு சேர்த்திருக்கின்றன என்பது தெளிவு.
மக்கள் வெகுண்டெழுந்து தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கி இருக்கிறார்கள் என்றால் காரணம் இல்லாமல் இல்லை. கட்டுக்கடங்காத விலைவாசி; சராசரி எகிப்து குடிமகனின் கைக்கெட்டாத உணவுப் பொருள்களின் விலையும் தட்டுப்பாடும்; பரவலாகக் காணப்படும் லஞ்ச ஊழல்; அரசின் வேவுத் துறையினரின் அட்டகாசம்; வேலையில்லாத் திண்டாட்டம் என்று உலகின் வேறு பல நாடுகளிலும் காணப்படும் அதே நிலைமைதான் எகிப்திலும்!
எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் கூடிய எகிப்துதான் வட ஆப்பிரிக்காவிலும் மேற்கு ஆசியாவிலும் பெரிய நாடு. போதாக் குறைக்கு, உலகின் கிழக்குப் பகுதியையும், மேற்குப் பகுதியையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் எகிப்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எகிப்தில் புரட்சி, எகிப்தில் ஆட்சிக் குழப்பம் என்றால் அது நிச்சயமாக உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.
இந்த முறை எகிப்தில் ஏற்பட்டிருக்கும் இந்தப் புரட்சியில் தனித்தன்மைகள் பல. எகிப்து நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் 25 வயதுக்கும் குறைவான இளைஞர்கள். அவர்கள்தான் இந்த மக்கள் கிளர்ச்சிக்கு வித்திட்டு, முன்னின்று நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், போராட்டம் வலுத்தபிறகு வந்து சேர்ந்து கொண்டிருக்கிறதே தவிர, இந்தக் கிளர்ச்சியில் அதற்கு முக்கியப் பங்கு கிடையாது.
இளைஞர்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியபோது, அதுவரை மௌனமாக எல்லா அநீதிகளையும் சகித்துக் கொண்டிருந்த சாதாரணப் பொதுமக்கள் அவர்களுடன் தங்களை இணைத்துக்கொண்டு விட்டார்கள். சாதாரணக் கிளர்ச்சி மக்கள் போராட்டமாக வெடித்து விட்டிருக்கிறது.
இதில், அதிசயம் என்னவென்றால், இதுபோன்ற போராட்டங்கள் இஸ்லாமிய நாடுகளில் வெடிக்கும்போது, மதத் தீவிரவாதிகளின் கரம் ஓங்குவது வழக்கம். எகிப்தில் நேர்மாறாக ‘அல்லாஹ் அக்பர்’ கோஷம் எழுப்பப்படவில்லை. ‘ஆட்சி மாற்றம் தேவை’ என்கிற கோரிக்கைதான் எழுப்பப்படுகிறது. போராட்டத்தில் களமிறங்கி இருக்கும் எகிப்து மக்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் தலையீடை விரும்பாதவர்கள். ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பவில்லை.
எகிப்தில் ஏற்பட்டிருக்கும் மக்கள் புரட்சியில் இன்னொரு விசித்திரம்கூட அரங்கேறி இருக்கிறது. போராட்டத்தை அடக்க ராணுவத்துக்குக் கட்டளையிட்டால், நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மக்கள் இயக்கத்தின் மீது அடக்குமுறையை ஏவிவிட நாங்கள் தயாராக இல்லை என்று ராணுவம் மறுக்கிறது. பேச்சுரிமையும், ஜனநாயகமும் கேட்டுப் போராடும் எந்தக் கிளர்ச்சிக்கும் இதுவரை எந்த நாட்டிலும் ராணுவம் ஆதரவு கொடுத்ததாக சரித்திரம் இல்லை. எகிப்தில் அந்த அதிசயம் அரங்கேறி இருக்கிறது.
அதிபர் பராக் ஒபாமா கடந்த ஜூன் மாதம் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பேசும்போது, கூறிய வார்த்தைகள் இவை – »உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் மக்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் தாங்கள் யாரால், எப்படி ஆட்சி செய்யப்பட வேண்டும் என்கிற உரிமையையும் விரும்புகிறார்கள் என்பது எனது கருத்து! ».
இப்படி அறிவித்த அமெரிக்க அதிபர், சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக, நல்லாட்சி கோரி, மக்களாட்சி கேட்டு நடைபெறும் எகிப்து இளைஞர்களின் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன்? அந்த இளைஞர்கள் தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோருகிறார்களே அவர்களை அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் ஆதரிப்பதுதானே நியாயம்!
சிறிது நாள்களுக்கு முன்னர் துனிசியாவில் மக்கள் எழுச்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக எகிப்து, யேமன், ஜோர்டான் நாடுகளில் மக்கள் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டிருக்கிறார்கள். அரபு நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட இருப்பதை இந்தக் கிளர்ச்சிகள் கட்டியம் கூறுகின்றன. அரபு நாடுகளில் மட்டுமா? உலகம் முழுவதும் ஆட்சியாளர்கள் நல்லாட்சி தராமல் போனால் இதுதான் அரங்கேற இருக்கும் காட்சியாக இருக்கும்!
– தினமணி
Comments