மறத்தல் தகுமோ, எங்கள் மாவீரர் கனவுகளை? 'யார் இந்த தலைமைச் செயலகம்- சுபன்?

தற்போது புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கேட்கப்படும் கேள்வி,


இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
-------------

'யார் இந்த சுபன்?' என்பதாகவே உள்ளது. அதற்கான காரணமும் தற்போது அவராலேயே உருவாக்கப்பட்டும் உள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், அவசரம் அவசரமாக கே.பி. அவர்களால் மூன்று முக்கிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டது. முதலாவதாக, விடுதலைப் புலிகளின் தலைவராகத் தன்னைத் தானே அறிவித்த கே.பி., அடுத்த நகர்வாக, தனக்குக் கட்டுப்படக் கூடய விடுதலைப் புலி முக்கியஸ்தர்களைக் கொண்ட ஒரு குழுவினை 'தலைமைச் செயலகம்' என்ற பெயரில் மலேசியாவில் நிறுவினார். மூன்றாவதாக, 'நாடு கடந்த தமிழீழ அரசு' என்றதொரு கருத்துருவாக்கத்தை அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் வழக்கறிஞர் திரு. உருத்திரகுமாரனிடம் கையளித்தது.


விடுதலைப் புலிகளது தலைமையைக் கைப்பற்றுவதையும், அதனை ஜனநாயக முறைமைக்குள் கொண்டு சென்று, சிறிலங்கா அரசின் பேரினவாத தேசிய சிந்தனைக்குள் புதைத்து விடுவதே அவருக்கான இலக்காக இருந்தது. அதற்காகவே, அவர் உருவாக்கிய இரண்டு அமைப்புக்களும், அவர் சார்பானவர்களின் கட்டுப்படுத்தல் வலைக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த இரு அமைப்புக்களில் ஒன்றான தலைமைச் செயலகம் திரு. இராமு சுபன் என்பவரால் கட்டுப்படுத்தப்படுகின்றது. தலைமைச் செயலகம் சார்பான அறிக்கைகளில் அவரே ஒப்பமிடுகின்றார்.

கே.பி. அவர்களது சரணாகதிக்குப் பின்னரும், தலைமைச் செயலகமும், நாடு கடந்த தமிழீழ அரசும் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களுடன் மோதல் போக்கையே தொடர்கின்றன. இது புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பலத்த விசனங்களை உருவாக்கி வருகின்றது. முள்ளிவாய்க்கால் ரேவலத்தின் பின்னர், தமிழீழ விடுதலைக்கான பலம் பொருந்திய சக்தியாக, சிங்கள தேசத்திற்கு அச்சமளிக்கும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்கும் முயற்சியில் இந்த இரு அமைப்புக்களும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றமை வேதனையோடு நோக்கப்படுகின்றது.

அண்மையில், பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு எதிராக 'தமிழர் நடுவம்' என்ற அமைப்பை உருவாக்கியதில், பிரான்சிலுள்ள கே.பி. குழுவினருடன் சுபன் தலைமையிலான தலைமைச் செயலகத்தைச் சேர்ந்தவர்களும், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரான்ஸ் உறுப்பினர்கள் சிலரும் தீவிரமாகப் பங்கேற்றிருந்தனர். அத்துடன், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இதுவரை மக்கள் சக்தியைத் திரட்டிப் பணியாற்றி வரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்குப் போட்டியாக, கேர்ணல் கிட்டு அவர்களது நினைவு நிகழ்வை பாரிஸ் நகரில் முன்னெடுத்தும் இருந்தனர். இந்த நிகழ்வை தமிழ் மக்கள் நிராகரித்த காரணத்தால், கேர்ணல் கிட்டு அவர்களது அர்ப்பணிப்பும் இந்தக் குழுவினரால் கொச்சைப்படுத்தப்பட்டதாகவே மக்களால் உணரப்பட்டது.

பிரான்சில் மக்களால் நிராகரிக்கப்பட்ட 'தமிழர் நடுவம்' என்ற அமைப்பின் மூலமாக விடுதலைப் புலிகளின் தமிழீழ விடுதலைக் கட்டமைப்பைத் தகர்ப்பது என்ற இந்த முயற்சி, சிறிலங்கா அரசின் விருப்பங்களுடன் ஒத்துப் போவதை புலம்பெயர் தமிழ் மக்கள் அச்சத்துடனேயே பார்க்கின்றனர். இந்த மோதல் போக்கை நிறுத்தி, விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களுடன் இணக்கமான அணுகுமுறை ஒன்றினூடாக புலம்பெயர் தமிழர்களின் சக்தியை ஒன்றிணைக்கும்படி தலைமைச் செயலகத்தின் திரு. சுபன் அவர்களுக்கும், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு. உருத்திரகுமாரன் அவர்களுக்கும் புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்தும அழைப்பு விடுத்து வருகின்றார்கள்.

புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளும், அவர்களது புலம்பெயர் கட்டமைப்புக்களும் பலமான செல்வாக்கு நிலையிலேயே இருக்கும் நிலையில், அதற்குப் போட்டியாக ஒரு அமைப்பை உருவாக்குவதும், அதன் மூலம் தமிழீழ விடுதலைத் தளத்தை சிதைப்பது என்பதும் சாத்தியமே இல்லாத முயற்சி. இதன் மூலம், தமிழீழ விடுதலைப் போராட்டம் பின் நகர்த்தப்படும் அபாயமே காணப்படுகின்றது. இதையே சிங்கள அரசும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டத்திற்கு இப்போது தேவைப்படுவது, புலம்பெயர் தமிழர்களது ஒன்றிணைவு மட்டுமே. தனித்தனியான காரணங்களுக்காகவும், தனித்தனியான விருப்பங்களுக்காகவும் தமிழீழ விடுதலைப் போராட்டம் சிதைக்கப்படுவதை புலம்'பெயர் தமிழர்கள் ஒருபோதும் விரும்பப் போவதும் இல்லை. அனுமதிக்கப் போவதும் இல்லை. தேசியத் தலைவரது மீள் ஆணை கிடைக்காதவரை தமிழ்த் தேசியத்திற்கான புலம்பெயர் கட்டமைப்புக்களில் மாற்றம் என்பது சாத்தியமே இல்லாத விடயம் என்பதை தமக்கான மாற்றங்களை எதிர்பார்க்கும் தரப்புக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஐம்பதாயிரத்திற்கும் மேலான மாவீரர்களும், இலட்சக்கணக்கான தமிழ் மக்களும் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துப் போராடிய தமிழீழம் எதிரியின் காலடிக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டுள்ள இந்தக் கணத்திலும் எங்களுக்கான இருப்புக்களுக்காக, புலம்பெயர் தமிழீழ மக்களது மனங்களைச் சிதைப்பதற்கு முற்படுவது எந்த வகையிலும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எதிரியின் விருப்பங்களுக்கு இசைவான பாதையில் நாங்கள் பயணிக்க முற்படுவது மிகப் பெரிய தமிழினத் துரோகமாகவே வரலாறு பதிவு செய்யும்.

எங்களுக்குள் உள்ள முரண்பாடுகள் பேசித் தீர்க்கப்பட வேண்டியவையே தவிர, மோதித் தீர்க்க வேண்டியவை அல்ல. தனித் தனி மனிதர்களாக விடுதலைக் களத்தில் சாதிக்காத எதையும் நாங்கள் புலம்பெயர் தேசங்களில் தனித்து நின்று நிகழ்த்திவிட முடியாது. புலம்பெயர் களத்தில் தமிழர்களது ஒன்றிணைவால் மட்டுமே சாதனைகளை நிகழ்த்த முடியும். அந்த மக்களை ஒன்றிணைப்பதில் மட்டுமே தலைமைகள் தங்களை நிரூபிக்க முடியும். அது மட்டுமே தமிழீழத்திற்கான கதவைத் திறக்க வைக்கும்.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்க முயலும் தலைமைக் கனவுகளே! தயவு செய்து எங்களுக்காக மரணித்த மாவீரர்களையும், அவர்களது அர்ப்பணிப்புக்களை சிறு கணமாவது நினைத்துப் பாருங்கள். இறுதி நாட்களிலும், எஞ்சியிருந்த இரண்டு விமானங்களையும் கிளப்பிச் சென்று சிங்களத்தைக் கிலி கொள்ளச் செய்து பலியாகிய அந்த இரு வான் புலிகளின் மாவீரத்தை நினைத்துப் பாருங்கள். எங்களுக்காகத் தீயை மூட்டி, உணர்வற்றுக்கிடந்த தமிழகத்தைத் தட்டி எழுப்பக் கரியாகிப்போனானே முத்துக்குமாரன், அவனது உணர்வைப் புரிந்துகொள்ளுங்கள். புலம் பெயர்ந்தும், நிறம் மாறாமல் புலியாகி ஜெனிவாவில் எரிதளல் ஆகினானே எங்கள் ஈகைப் பேரொழி முருகதாசன், அவனது ஈகத்தை எண்ணிப் பாருங்கள். நாங்கள் ஒன்றுமே இல்லாதவர்களாக உணர்ந்து கொள்வோம்.

இப்படி எத்தனையோ மறவர்கள் தோன்றிய மண்ணில் பிறந்த நாங்கள், தமிழீழத்தின் விடுதலையை மறந்து, எங்களது விருப்பங்களுக்காகப் போராடலாமா? வேண்டாம், விட்டுவிடுங்கள். எங்கள் மாவீரர் துயிலும் இல்லத்தின் கல்லறைகளும் கண்ணீர் விட்டு அழுகின்றன. எங்களுக்காக கடலிலும், வானிலும், நிலத்திலும் சிதறி எரியுண்டு போன ஆத்மாக்கள் கலங்கி நிற்கின்றன. இறுதிக் கணத்திலும் எங்கள் தாய் நிலத்தில் அசையாமல் நின்று போராடி, புதைப்பதற்கும், எரிப்பதற்கும் யாருமே இல்லாமல், எதிரிகளால் நிர்வாணப்படுத்தப்பட்டு, சிதைக்கப்பட்ட எங்கள் அக்கினிக் குஞ்சுகளின் ஏக்கப் பெருமூச்சு புலம்பெயர் தேசங்களிலும் புயலாக அடிக்கின்றன.

வேண்டாம், எங்களுக்குள் பிளவுகள். வேண்டாம், எங்களுக்குள் மோதல்கள். வேண்டாம், எங்களுக்குள் கதிரைச் சண்டைகள். எல்லோரும் ஒன்றிணைந்து போராடி, தமிழீழத்தை மீட்போம் வாருங்கள், புலம்பெயர் போர்க் களத்திற்கு!

- கரிகாலன்

Comments