இதன் விவாதம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. அதில் எம்மவர்கள் சிலரின் நடவடிக்கை என்பது இன்னும் வினோதமாக இருக்கின்றது.
சிறிலங்கா அரசாங்கத்தில் தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க விவகார அமைச்சராகப் பதவி வகிப்பவர் வாசுதேவ நாணயக்கார.
இவரை அறியாத தமிழர்கள் மிகக்குறைவு.
முன்னர் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்காக- ஆயுதப் போராட்டத்துக்காக நிறையவே குரல் கொடுத்தவர்.
சிங்களப் பேரினவாதக் கொள்கைகளைத் துணிவோடு எதிர்த்தவர்.
சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அவரை சிங்களப் பேரினவாதியான மகிந்த ராஜபக்ஸவின் அரசில் இணையும் நிலையை ஏற்படுத்தி விட்டது.
பல தசாப்தங்களாக அரசியலில் இருந்தாலும்- முதல் முறையாக இப்போது தான் அவர் அமைச்சராகியிருக்கிறார்.
அண்மையில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமைச்சரவையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர முயன்றார்.
சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் பாட வேண்டும் என்று அமைச்சரவைத் தீர்மானத்தைக் கொண்டு வர அவர் எடுத்த முயற்சிக்குத் தடைபோட்ட இருவரில் வாசுதேவவும் ஒருவர்.
மற்றவர் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் என்று இரண்டு தமிழ் அமைச்சர்கள் இருந்தனர்.
தமிழ்பேசும் முஸ்லிம் அமைச்சர்களும் பலர் இருந்தனர்.
இவர்கள் எவருமே மகிந்தவை எதிர்த்துப் பேசத் துணியவில்லை.
வாசுதேவவும், ராஜிதவும் தான் எதிர்த்தனர்.
இதன் பின்னரே மகிந்த ராஜபக்ஸ அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதைப் பிற்போட்டார்.
இப்போது கூட அந்தத் தீர்மானம் கைவிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
வாசுதேவ நாணயக்கார இருக்கின்ற இடம் தவறாக இருந்தாலும்- தமிழ்மொழியைப் புறக்கணிக்கும் அல்லது அதற்குப் பாரபட்சம் காட்டும் செயற்பாடுகளுக்குத் துணைபோகப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அதனால் தான் அவர் சிறிலங்காவின் தேசிய கீதம் தொடர்பாக அவர் உறுதியான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
சில வாரங்களுக்கு முன்னர் இரத்தினபுரியில் தமிழ்மொழித் தினம் கொண்டாடப்பட்ட போது இவர் தான் அந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் சிங்களத்தில் தேசியகீதம் இசைக்கப்பட அதிர்ந்து போனார் அவர்.
தமிழ்மொழித் தினவிழாவில் சிங்களத்தில் தேசியகீதமா என்று சினந்து கொண்டார்
இதன் பின்னர் கடந்த 3ம் திகதி தனது அமைச்சில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் பேசும் போது - தேசிய கீதத்தை தமிழில் பாடுவதைத் தடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
“சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் அரச கருமமொழிகள் என்ற வகையில் தேசியகீதத்தைத் தமிழ் மொழியில் பாடுவதில் எந்தத் தவறும் இல்லை. அதற்குத் தடையும் இல்லை.
ஒரு சில பிரதேசங்களில் சில அதிகாரிகள் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு தடை விதிப்பதாக கேள்விப்படுகின்றோம்.
அரசாங்கத்தின் மொழிக் கொள்கையின் படி அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்“ என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த எச்சரிக்கை வெளியாகி மறுநாள் சிறிலங்காவின் சுதந்திர தினம்.
அன்றைய தினம் நாட்டின் 25 மாவட்டங்களினது செயலகங்களிலும் சிறிலங்காவின் தேசியக்கொடி தேசியகீதம் இசைக்கப்பட ஏற்றப்பட்டது.
ஆனால் இரண்டே இரண்டு மாவட்டங்களில் தான் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் தான் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது.
தமிழரின் பண்பாட்டுத் தலைநகர் என்று சொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தில் வெறும் இசை மட்டுமே இசைக்கப்பட்டது.
கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது.
இதிலிருந்து எதைப் புரிந்து கொள்ள முடிகிறது?
யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் வற்புறுத்தலின் பேரில் தான் சிங்களத்தில் தேசியகீதம் இசைக்கப்பட்டது.
அப்போது ஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கிய அரச தலைவர்கள் பங்கேற்கும் தேசிய நிகழ்வுகளில் சிங்களத்தில் தான் தேசியகீதம் பாடுவது வழக்கம் என்று அதற்கு நியாயம் கற்பித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
அதேவேளை யாழ்.அரசஅதிபர் இமெல்டா சுகுமாரோ தனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது.
கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகளின் முடிவுப்படி தான் எல்லாமே நடக்கிறது என்று கண்ணைக் கசக்கினார்.
ஆனால் அதே அரசாங்க அதிபர் தமிழல் தேசியகீதம் பாடுவதைப் புறக்கணித்துள்ளார்.
இதன் மூலம் சிங்கள அரசின் விசுவாசி என்று மீளவும் தன்னை நிரூபித்துள்ளார்.
தமிழில் தேசியகீதம் பாடுவது தவறில்லை என்று அரசாங்கமே சொல்லும் போது இவருக்கு மட்டும் ஏன் இந்தப் பண் இசைக்கும் யோசனை வந்ததோ தெரியவில்லை.
இந்த யோசனையை வெளியிட்டிருந்தவர் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் தான்.
அதேவேளை கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் அரசாங்க அதிபர்களாக இருக்கின்ற பெண்கள் கூட சிங்களப் பேரினவாதத்துக்கு விசுவாசம் காட்டத் தவறவில்லை.
இவர்களோடு ஒப்பிட்டால் யாழ்ப்பாணத்தின் நிலை கொஞ்சம் பரவாயில்லை.
இந்தநிலையில் முல்லைத்தீவு, மன்னார் அரசாங்க அதிபர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
தமிழ்மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில், தமிழில் கருமம் ஆற்றும் செயலகங்களில், தமிழில் தேசியகீதம் பாட அரசாங்கம் - வெளிப்படையாக - தடை விதிக்காத போது, இவர்கள் மட்டும் ஏன் இவ்வளவு அக்கறைப்படுகின்றார்கள் என்பது புரிந்துகொள்வது கடினமானதுதான்.
இதை வாசுதேவ போன்ற சிங்களத் தலைவர்கள் உணர்ந்துள்ள அளவுக்கேனும் வடக்கிலுள்ள தமிழ் அரசாங்க அதிபர்கள் - அரசஅதிகாரிகள் சிலர் உணரவில்லை.
இங்கு வாசுதேவ நாணயக்காரவும் சரி அஸ்கிரிய பீடாதிபதியும் சரி சிறிலங்கா என்ற நாட்டின் தேசிய அரசியலுக்குள் விழுத்திவிடவேண்டும் என்பது அவர்கள் விருப்பம்.
தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது என்பதை விட சிங்களத்தில் தேசியகீதம் பாடமட்டுமே அனுமதித்தால் அதன்மூலம் தமிழ்தேசியவாதம் முனைப்பு பெற்றுவிடும் என்பதும் அதனால்தான் தமிழில் பாடவேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்.
ஆனால் இதன் இன்னொரு முனையில் எமது தமிழ் அரச அதிகாரிகள் சிங்களத்தில் தேசியகீதம் பாடவேண்டும் என துள்ளிக்குதிப்பது ஏன் என்பதை வாசுதேவ நாணயக்காரவிடமோ அல்லது அஸ்கிரிய பீடாதிபதியிடமோதான் கேட்கவேண்டும்.
முகிலன்
சிறிலங்காவின் தேசியகீதம் சர்ச்சை உலகின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை சென்றடைந்துவிட்டது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான தேடலுக்கான அவசியத்தை மீண்டுமொருமுறை அறிவுறுத்திய நிகழ்வாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது.
Comments