அதிபர்களான பென் அலி, முபாரக் மற்றும் ராஜபக்ச – ஒத்த பண்புகளைக் கொண்ட மும்மூர்த்திகள்

மகிந்த ராஜபக்சவினது ஆட்சிமுறையினை கூர்ந்து அவதானித்தால் குழம்பம் தருகின்ற சில அம்சங்களையும் பென் அலி மற்றும் முபாரக்கின் ஆகியோரின் ஆரம்பகால ஆட்சிமுறையினை ஒத்த பண்புகளையும் அது கொண்டிருக்கிறது.

அப்பத்தியின் முழுவிபரமாவது,

கடந்த மாதம் துனிசியாவின் தலைநகரில் தொடராக இடம்பெற்ற அரச எதிர்ப்புப் போராட்டங்களின் விளைவாக அதிபர் பென் அலி [President Ben Ali] யின் 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது.

நீண்ட பல ஆண்டுகளாக அமைதியுடன் இருந்த துனிசியாவில் நாடு தழுவிய ரீதியில் திடீரென வெடித்த புரட்சியினைத் தொடர்ந்து அந்த நாட்டினது ஆட்சியினை முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலமைந்த போராட்டங்கள் எங்கும் இடம்பெற்றன.

எவ்வாறிருப்பினும், அரசியல் சுதந்திரத்தினை இலக்காகக் கொண்ட பொருளாதார வளர்ச்சியினையே துனிசிய சமூகத்தினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் துனிசியாவில் குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை தேர்தல் இடம்பெற்றிருந்தாலும் அதிபர் பென் அலி எதிர்வுகூறக்கூடிய வகையில் எவ்வாறோ வென்றுவிடுகிறார். இந்த நிலையில் நாட்டினது பொருளாதார வளர்ச்சி இடைநின்று போனதைத் தொடர்ந்து துனிசியாவின் இளந்தலைமுறையினர் கிளர்ந்தெழுந்தனர். துனிசியாவில் நடந்தது இதுதான்.

இதுபோல அரச எதிர்ப்புக் கிளர்ச்சியினை மேற்கொண்ட துனிசியா அதில் வெற்றியும் பெற்றிருந்ததானது எகிப்தியர்களுக்கும் புது நம்பிக்கையினைக் கொடுத்தது. தங்கள் நாட்டிலும் ஒருமுறை முயன்று பார்ப்போமே என்ற எண்ணத்தில் எகிப்தியர்கள் தற்போது தொடர் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மத்தியகிழக்கு மற்றும் குறிப்பாக வட ஆபிரிக்காவிலுள்ள அரபு நாடுகளைப் பொறுத்தவரையில் அங்கு பெரும்பாலும் நீண்டகால ஆட்சியாளர்களே ஆட்சியில் இருக்கிறார்கள். எகிப்தின் கொஸ்னி முபாரக் [President Hosni Mubarak] தொடக்கம் லிபியாவின் கடாபி President [Mohamed Ghaddafi] வரைக்கும் இதுதான் நிலைமை. துனிசியாவில் நடந்து முடிந்திருக்கும் பிரசித்திபெற்ற இந்த எழுச்சி ஏனைய வட ஆபிரிக்க நாடுகளிலும் தனது செல்வாக்கினைச் செலுத்தத் தவறவில்லை.

துனிசியாவினைத் தொடர்ந்து அதன் அண்டை நாடுகளிலும் இதுபோன்ற அரச எதிர்ப்புப் போராட்டங்கள் முளைவிட்டன. அவற்றில் முதன்மையானது எகிப்தின் அதிபர் கொஸ்னி முபாரக்கினை ஆட்சியிலிருந்து இறக்கும் வகையில் 11வது நாளாகத் தொடரும் தொடர் போராட்டம்தான்.

ஹெய்ரோ நகர வீதிகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் திரண்டு அதிபர் ஹொஸ்னி முபாரக்குக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அவரது அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றே கூறுவேண்டும். அதிபர் முபாரக் உடனடியாகப் பதவியினை விட்டு வெளியேறப் போகிறாரா அல்லது இடைக்கால ஆட்சியெதனையும் ஏற்படுத்தப்போகிறாரா என்பதுதான் இன்றைய பிரச்சினை.

தேசியவாதம் மற்றும் அதிகாரவாதம்

துனிசியாவின் பென் அலியினது ஆட்சியாக இருக்கலாம் அல்லது எகிப்தினது முபாரக்கின் ஆட்சியாக இருக்கலாம் வட ஆபிரிக்காவின் ஆட்சியாளர்களிடத்தே பொதுவான சில ஆட்சிப் பண்புகளையும் அம்சங்களையும் கொண்டிருக்கிறன.

• முதலாவது இந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் நீண்ட பல ஆண்டுகளாகத் தொடர்ந்தும் பதவியில் இருக்கிறார்கள். தங்களை ஆட்சியில் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் இவர்கள் குறிப்பிட்டுக் கூறக்கூடியவகையில் வாக்கு வங்கிகளைத் தயார்ப்படுத்திவிடுவார்கள். எவ்வாறிருப்பினும் இவர்களது முறைதவறிய ஆட்சியின் விளைவாக அரசாங்கம் ஆட்டம்கண்டு வீழ்ச்சியடைகிறது.

• இரண்டாவதாக இந்த ஆட்சியாளர்கள் ஆட்சியினைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளுவதற்கான ஒரு கருவியாக அல்லது ஒரு தளமாக அராபியத் தேசியவாதத்தினையும் பாலஸ்தீனப் பிரச்சினையினையும் கையில் எடுக்கிறார்கள்.

• மூன்றாவதாக இந்த அரசாங்கங்கள் அனைத்தும் அதிகாரவாதத்தினைக் கொண்டமையாகவே இருக்கின்றன. மாற்றுக்கருத்துவடையவர்களை அடக்குதல், அரசியல் எதிராளிகளைத் துன்புறுத்துதல், ஒருகட்சி ஆட்சிமுறை என்பவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பண்புகளை இவை கொண்டிருக்கின்றன.

• நான்காவதாக இந்த நாடுகளில் ஆட்சியாளர்களின் குடும்ப அங்கத்தவர்கள் நாட்டினது முக்கிய கட்டமைப்புகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் குடும்ப ஆட்சியாகவே இது அமைகிறது.

• ஐந்தாவதாக இந்த நாடுகளில் தேர்தல்கள் இடம்பெறும். ஆனாலும் அனைத்துத் தேர்தல்களிபோதும் குறிப்பிட்ட ஆட்சியாளர்தான் அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவார். இவர்களது ஆட்சிக்கு அச்சுறுத்தலாக அமையாதவாறு எதிர்க்கட்சிகள் அமைவதை இந்த ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்திக்கொள்வார்கள்.

சிறிலங்காவில் கற்றுத்தந்த பாடம்

துனிசியாவின் பென் அலி அல்லது எகிப்தின் முபாரக் அல்லது சூடானின் அல் பசீரிலிருந்து [Al Basheer] தாங்கள் வேறுபட்டிருப்பதாக சிறிலங்காவினது ஆட்சியாளர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள முனையலாம். மேற்குறித்த இந்த ஆட்சியாளர்களிலிருந்து ஒரே ஒரு விடயத்தில் மாத்திரம் அதிபர் ராஜபக்ச வேறுபடுகிறார்.

இரண்டு அதிபர் தேர்தல்களிலும் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றிருக்கிறார். இறுதியாக இடம்பெற்ற தேர்தலின் போது அதிக பெரும்பான்மையினைத் தனதாக்கியிருந்தார்.

சிறிலங்காவினது தேர்தல் முறைமையினைப் பொறுத்தவரையில் ஒப்பீட்டு ரீதியில் அது சனநாயகப் பண்புகளின் அடிப்படையில் முறைகேடுகள் எதுவுமற்ற நிலையில் இடம்பெற்று வருவதும் இங்கு குறிப்பிடத்தகது.

ஆனால் வட ஆபிரிக்க நாடுகளைப் பொறுத்தவரையில் அங்கு இடம்பெறும் தேர்தல்கள் உண்மைத்தன்மையோ அல்லது நேர்மைத்தன்மையோ இருப்பதில்லை. மியான்மாரில்
அண்மையில் இடம்பெற்ற தேர்தலைப் போன்றுதான் வட ஆபிரிக்க நாடுகளின் தேர்தல்களும் அமையும்.

மகிந்த ராஜபக்சவினது ஆட்சிமுறையினை கூர்ந்து அவதானித்தால் குழம்பம் தருகின்ற சில அம்சங்களையும் பென் அலி மற்றும் முபாரக்கின் ஆகியோரின் ஆரம்பகால ஆட்சிமுறையினை ஒத்த பண்புகளையும் அது கொண்டிருக்கிறது.

அதிபர் ராஜபக்ச தொடர்ந்தும் ஆட்சியிலிருப்பதற்கு வழிசெய்யும் வகையில் 18வது அரசியலமைப்புச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதோடு குறிப்பிட்ட ஒருவர் இரண்டு முறைதான் ஆட்சியில் தொடரலாம் என்ற வரையறை இல்லாது செய்யப்பட்டிருக்கிறது.

ஆட்சியில் பெரும்பொறுப்புக்களைத் தனதாக்கும் வகையில் மகிந்தவினது மகன் வேகமான அரசியல் வளர்ச்சியினை நோக்கிப் பயணிக்கிறார். அதேநேரம் மகிந்தவினது சகோதரர்கள் இராணுவம் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மகிந்தவினது ஆட்சியில் இனம்சார் தேசியவாதம் கொடிகட்டிப் பறக்கிறது. சிறிலங்காவினது ஆட்சியாளர்களின் ஆட்சிமுறையின் பிரதான தத்துவமாக, பெரும்பான்மையினச் சிங்களவர்களைத் தமது பாதையில் இட்டுச்செல்லும் வகையில் தேசியவாதம் என்ற கருவி கையிலெடுக்கப்பட்டிருக்கிறது. அவசரகாலச்சட்டத்தினை இன்னமும் இல்லாதுசெய்யாமல் வைத்திருக்கும் அரசாங்கம் இந்தச் சட்டத்தின் துணையுடன் தனது அரசியல் எதிராளிகளை அடக்கிவருகிறது.

சிறிலங்காவினது ஆட்சிமுறை தேசியவாதம், அதிகாரவாதம் மற்றும் பன்மைத்துவம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. இடைக்கிடையே இடம்பெறும் தேர்தல்களில் அரசாங்கம் வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்புக்களுக்கும் பதவிகளுக்கும் குடும்ப அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது, மோசமான பொருளாதார முகாமைத்துவம் என்பன மக்களின் வாழ்க்கைத் தரத்தினைப் பெரிதும் பாதித்திருக்கிறது. அத்துடன் நாட்டினது இளைய தலைமுறையினரின் அபிலாசைகள் அனைத்தும் தகர்வதற்கு இந்த ஆட்சிமுறை வழிசெய்துவிட்டது.

இந்த நிலையில் தற்போது வட ஆபிரிக்காவில் இடம்பெறுவதைப் போல மகிந்தவினது ஆட்சிக்கு எதிராக இலங்கையர்கள் ஒருபோதும் வீதிக்கு இறங்கிப் போராடப்போவதில்லை.

சிறிலங்காவினது வரலாற்றில் இதுபோன்ற எதுவும் இதுவரை இடம்பெற்றதுமில்லை. ஆனால் அதிகாரவாதத்துடன் கலந்த தேசியவாதத்தின் அடிப்படையில் ஒரு நாடு ஆளப்படுமிடத்து அந்த ஆட்சி ஒருபோதும் நிலைபெறாது என்ற பாடத்தினை இது எங்களுக்கு உணர்த்துகிறது. சிறிலங்கா இதனை நன்கு விளங்கிக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு கொழும்பினை தளமாகக் கொண்ட Daily Mirror ஆங்கில ஏட்டின் பத்தி எழுத்தாளர் Harim Peiris எழுதியுள்ளார். அந்த பத்தியினை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

[இந்தப் பத்தியினை எழுதியவர் 2001 தொடக்கம் 2005 வரைக்குமான காலப்பகுதியில் சிறிலங்கா அதிபரின் பேச்சாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.]

Comments