பிரான்சில் மீண்டும் முனைப்புப் பெறும் தமிழ் மக்களின் போராட்டங்கள்!

2011 பெப்ரவரி 04 சிங்கள தேசத்தை அச்சப்படுத்தியே சென்றுள்ளது. கடந்த வருட இறுதியில் மகிந்த ராஜபக்ஷவுக்கு பிரித்தானிய தமிழர்கள் கொடுத்த அதிர்ச்சி வரவேற்பின் கசப்போடு பிறந்த புது வருடம், இயற்கை அழிவினையும் அவரது ஆட்சிக்குப் பரிசாக வழங்கியுள்ளது.

கிழக்கின் கடும் மழைப் பொழிவு தென் தமிழீழ மக்களையே பெரிதும் பாதித்திருந்தாலும், அழிவுகளே வாழ்க்கையாகிப்போன தமிழர்களை விடவும், ஆட்சியில் தொடர விரும்பும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. சிங்கள மயப்படுத்தப்பட்ட கிழக்கின் இஸ்லாமிய கட்சிகளின் ஆதரவும் மகிந்த அரசுக்குக் கிடைத்துள்ள போதும், கருணா என்ற முரளீதரனை அமைச்சராகவும், பிள்ளையானை முதலமைச்சராகவும் உருவாக்கி வைத்திருக்கும் ராஜபக்ஷ ஆட்சியாளாகளுக்கு கிழக்கின் அவலங்களில் பங்கு கொண்டே ஆக வேண்டிய அவசியமும் உள்ளது. உலக நாடுகளின் கேள்விகளுக்கு சாதகமான பதிலைக் கொடுப்பதற்கு கிழக்கின் அமைதி ராஜபகஷக்களுக்குத் தேவையானதாக உள்ளதால், தென் தமிழீழத்திற்காக அவர்கள் முதலைக் கண்ணீராவது வடித்தே ஆகவேண்டும்.

மழை வெள்ள உச்ச கட்ட அவலங்கள் கிழக்கை வதைத்தெடுத்த நாட்களில் கருக்கொண்ட அமெரிக்கப் புயலை எதிர்கொள்ள அவசரம் அவசரமாக அமெரிக்காவுக்கு அறிவிக்காத பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுவிட்டது. கைவிட்டுச் சென்று கொண்டிருக்கும் நிம்மதியை மீண்டும் எட்டிப் பிடிக்க மீண்டும் ஓடிவந்த மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் இயற்கை அலைக்கழிக்க வைத்துள்ளது. சிங்கள தேசத்தின் 63 ஆவது சுதந்திர தின கொண்டாட்டமும் மழை வெள்ளத்தால் சோபை இழந்துவிட்டது. கதிர்காமாத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய சிங்கள ஜனாதிபதி ராஜபக்ஷ வழக்கத்துக்கு மாறான பதற்றத்துடனும், நம்பிக்கையீனத்துடனும் காணப்பட்டார். போராடிப் பெற்ற சுதந்திரத்தைக் காப்பாற்ற, நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் போராட வேண்டும் என்று சிங்கள மக்களிடம் வேண்டுகோள் விடுத்தும் உள்ளார்.

போர்க் குற்ற விசாரணைக்கான சர்வதேச நெருக்குதல்களை எதிர்கொண்டுள்ள மகிந்த ராஜபகஷவால் இந்தியா ஊடான அழுத்தங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தை நாடக அரங்கத்திற்குள் கொண்டுவர முடிந்துள்ள போதிலும், புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்களக் கரங்களுக்குள்ள சிறை செய்ய முடியாத தொலை தூரங்களில், மேற்குலகின் ஜனநாயக பாதுகாப்பு அரண்களுக்குள் நின்றவாறு புலம்பெயர் தமிழர்கள் தொடுத்துவரும் சிங்கள தேசத்திற்குத் தொடர் அச்சுறுத்தலாகவே உள்ளது.

புலம்பெயர் தமிழர்களை விடுதலைப் புலிகளது செல்வாக்கு வளையத்திலிருந்து வெளியே கொண்டுவந்து, போர்க் குணமற்றதொரு ஜனநாயக கட்டமைப்பிற்குள் சிறைப்படுத்தும் ‘கே.பி.’ மூலமான சிங்கள அரசின் பொறி முறையும் புலம்பெயர் தமிழர்களிடம் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற முடியவில்லை. தேசியத் தலைவர் குறித்த செய்திகள், விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுக்கள், அவதூறுகள் என்ற சிங்கள தேசத்தின் தொடர் உளவியல் போரும் புலம்பெயர் தமிழர்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாவீரர் தினம் புலம்பெயர் தமிழர்களது ‘தமிழீழ விடுதலை’ குறித்த உறுதிப்பாட்டை மீண்டும் பதிவு செய்துள்ளது.

சிங்கள தேசத்தின் அத்தனை நடவடிக்கைகளையும் முறியடித்த புலம்பெயர் தமிழர்கள், சிங்கள தேசத்தின் 63 ஆவது சுதந்திர தினத்தையும் கறுப்பு நாளாக நினைவு கூர்ந்துள்ளனர். பாரிஸ் நகரிலுள்ள சிறிலங்காவுக்கான தூதரகத்திற்கு அண்மையில் தமிழீழ மக்கள் பேரவையால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான தமிழர்கள் கலந்து கொண்டனர். அத்துடன், பாரிஸ் புறநகர்ப் பகுதியின் இடதுசாரிக் கட்சிகளின் நகர பிதாக்கள், மாநகரசபை உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்களின் அதிகாரிகள் எனப் பல பிரான்ஸ் நாட்டவர்களும் இதில் கலந்து கொண்டு உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பாக, முன்னாள் இளையோர் அமைப்பின் தலைவர் மகிந்தன் உட்பட, அதன் மக்கள் பிரதிநிதிகள் ஐவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, தமது தேசியக் கடமையினைப் பதிவு செய்தனர்.

பிரான்ஸ் தமிழர்கள் மத்தியில் சிங்கள தேசத்தால் உருவாக்க முயன்ற பிளவு படுத்தல் முயற்சிகள் தகர்ந்துபோன நிலையில், ஒன்றிணைந்த பிரமாண்டமான போராட்டங்கள் மீண்டும் துளிர்த்து வருவது சிங்கள தேசத்தின் நிம்மதியைக் கெடுக்கவே போகின்றது. அதன் வெளிப்பாடே மகிந்தரின் கலக்கத்திலும் எதிரொலிக்கின்றது.

- கரிகாலன்

Comments