தமிழர்களைக் கொன்று குவிக்க உதவிய காங்கிரஸ் இந்த தேர்தலோடு அழிய வேண்டும். மணிவண்ணன்

‘வரும் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு கடைசித் தேர்தலாக இருக்க வேண்டும்.தமிழர்களை கொன்று குவித்த கோரத்திற்கு துணை நின்ற தி.மு.க.வும் ஆட்சிக்கு வரக்கூடாது’’என்று ஆவேசமாக கூறுகிறார் இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன்.

‘‘சிறிய படத்தயாரிப்பாளர்களின் நிலை கவலைக் கிடமாகி விட்டது. புதுமையான படைப்புகளை கொடுக்கக் கூடியவர்கள் தயங்குகிறார்கள். மக்களும் தி.மு.க. மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்’’ என்று அடுக்கிக் கொண்டே போகிறார் மணிவண்ணன்.

நாமும் நமது கேள்விகளை அவரிடம் அடுக்கினோம். சளைக்காமல் அவர் அளித்த பேட்டி…

இன்னும் கூட்டணி பற்றிய தெளிவான முடிவு வராத நிலையில் இப்படி ஒரு கணிப்பு தவறாகவும் போகலாம் அல்லவா?

‘‘கலைஞர் மாபெரும் சக்தி. அதை மறுக்கவில்லை. ஆனால் அவரும் அவரை சார்ந்தவர்களும் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையுடன், பணம் சம்பாதிக்கும் நோக்குடன்தான் இருக்கிறார்கள்.பெருந்தலைவர் காமராஜர் இல்லாதிருந்தால் நாம் மாடு மேய்த்துக் கொண்டுதான் இருந்திருப்போம்.காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று சொல்கிறவர்கள் உலக கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். சுவிஸ் பாங்க் இவர்களை நம்பித்தான் இருக்கிறது.இலவசங்கள் என்பது ஒரு வகையான கையூட்டுதான் என்பது மக்களுக்கு புரிந்துவிட்டது. கூட்டணியை விட்டு விலகுவோம் என்ற ஒற்றை சொல்லை கலைஞர் சொல்லி இருந்தால் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.

காங்கிரஸுக்கு இது கடைசி தேர்தலாக இருக்க வேண்டும்.அவர்கள் துரோகத்துக்குத் துணை போகும் தி.மு.க.வையும் தோற்கடிக்க வேண்டும்.
இப்போது கனிமொழியை விட்டு ‘போராட்டம்’ நடத்தி இருக்கிறார்கள். அவரும் நல்ல காமெடி பண்ணுகிறார்.இவையெல்லாம் மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இதனால்தான் சொல்கிறேன் ஆட்சி மாற்றம் வரும்.’’

இந்த தேர்தலில் விஜயகாந்தை மாற்று அரசியல் சக்தியாகக் கருதலாமா?

‘’தே.மு.தி.க மாற்று அரசியல் சக்தியாக இருக்க முடியாது. கூட்டம் இருக்கிறது.ஆனால் அவர்களால் கொள்கைகளைச் சொல்ல முடிய வில்லை. உருப்படியாக இதுவரை ஏதாவது சொல்லி இருக்கிறார்களா?’’

அப்படியானால் கூட்டணி என்பது கொள்கைகள் அடிப்படையில் இல்லை. கோடிகள் அடிப்படையில்தான் என்று சொல்லலாமா?

‘‘கோடிகள் என்று பச்சையாக சொல்வதைவிட பதவிகள், அதனால் வரக்கூடிய ஆதாயங்கள் என்று சொல்லலாம். ராமதாஸ் அய்யா இப்போது தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து விட்டார். இதனால் டாஸ்மாக் கடைகள் எல்லாம் இனி இருக்காதா? அவர் சொல்லி வந்த எந்தக் கொள்கைகளுக்கு இந்த இடங்கள்?’’

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்களின் கருத்து என்ன?

‘‘அவர் திடீர் என்று கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்றே கருதுகிறேன். அவர் மீனவ சமுதாயத்திற்காகக் குரல் கொடுப்பது நல்ல விஷயம். இன உணர்வு இருப்பதால்தான் உதவிகள் செய்கிறார்’’

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு இலங்கை அரசால் ஆபத்து என்கிறார்களே?

‘‘அரசியல் என்பது பணம் போட்டு பணம் எடுக்கிற தொழிலாகி விட்டது. அத்தகைய தொழில் அரசியல்வாதிகளை கொள்கை அடிப்படையில் எதிர்த்துப் போராடுவதால் சீமானுக்கு ஆபத்து இருக்கிறது’’என்றார் மணிவண்ணன்.

Comments