தேசியத் தலைமையின் இருப்பை மறுத்து அறிக்கை விடச் சதி


உங்கள் வாக்கு வேதவாக்கு அல்ல – தேசியத் தலைமையின் இருப்பை மறுத்து பேரனர்த்தம் விளைவித்துவிடாதீர்கள்.ஈழ அதிர்வு-14

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இருப்பை மறுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ அமைப்புக்கள் என்று கூறி செயற்பட்டு வரும் சில அமைப்புக்களால் வெளியிடப்படவுள்ள அறிவிப்பு பற்றி உலகத்தமிழர்களிற்கு தெளிவுபடுத்துவதுடன் இந்த மாபெரும் வரலாற்று தவறை இழைத்து பேரனர்த்தத்தினை ஏற்படுத்த இருப்பவர்களிற்கு ஓர் அன்பான வேண்டுகோளையும் முன்வைக்கின்றோம்.

நாம் உயிரினும் மேலாக நேசிக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இருப்பை மறுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ அமைப்புக்கள் என்று கூறி செயற்பட்டு வரும் சில அமைப்புக்களால் வெளியிடப்பட இருக்கும் அறிக்கை தொடர்பாக தகவல் கிடைத்து பேரதிர்ச்சி கொண்டுள்ளோம். இதே பேரதிர்ச்சியை இந்த அறிக்கை வெளிவரும் பட்சத்தில் உலகத்தமிழர்கள் அடைவார்கள். அதனால் நாம் இந்த விடையத்தை பகிர்ந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.
கடந்த 2009ம் ஆண்டு மே 18ற்கு பின்னர் அதிர்ச்சிக்குள்ளாகி அவதிப்பட்ட உலகத்தமிழர்கள் இன்று ஓர் வரையறுக்கப்பட்ட பாதையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஏன் இந்த பிரளயத்தை உண்டாக்கக் கூடியவாறான முடிவை எடுக்க துனிந்தீர்கள்?

தமிழீழ தேசியத்தலைவரது இருப்பு பற்றிய தேடல்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு சுதந்திர தமிழீழத்தை அமைப்பதற்காக உலகத்தமிழர்கள் தயாராகிவிட்டார்கள் என்ற செய்தி பழையசெய்தியாகி எதிரிகளையும் துரோகிகளையும் எரிச்சல் படுத்திநிற்கும் இவ்வேளையில் எதிரிகள் கூட செய்யத் துணியாத காரியத்தை உலகத்தமிழர்களது தற்போதைய ஆதாரமாக கருதப்படும் நீங்கள் செய்ய முற்பட்டதன் காரணம்தான் என்ன?

தேசியத் தலைவரது இருப்பை மறுதலித்து நீங்கள் அறிக்கை விடுவதனால் உலகத்தமிழர்கள் அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்து துனிசியா,எகித்தை தொடர்ந்து தமிழீழத்தை அமைப்பதற்கான கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்றால் அதைவிட முட்டாள்தனம் வேறு ஒன்றும் இருக்கப்போவதில்லை.

ஏன் என்றால் முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் கொத்துக் கொத்தாக உலக வல்லாதிக்க நாடுகள் துணையுடன் சிங்களம் கொன்று குவித்து வன்னி வீதிகளை எமது சொந்தங்களின் பிணங்களால் நிரப்பிய போதும் முள்ளிவாய்க்காலில் முடித்துவைக்கப்பட்ட தமிழினப் படுகொலையின் இறுதி நாட்களில் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட எமதருமை மக்கள் உயிருடன் புதைக்கப்பட்ட போதும் தன்னிச்சையாக கிளர்ந்தெழுந்து புலம்பெயர் தமிழக தெருக்களை வீதிகளை போர்க்களமாக்கி புரட்சிபடைக்காத போது இப்போது மாத்திரம் எங்கிருந்து எதிர்பார்ப்பது…?

அத்தோடு நீங்கள் கருதுவது போன்று தேசியத்தலைமையின் இருப்பை மறுதலிப்பதனால் ஏதாவது புரட்சி ஏற்பட சாத்தியம் இருந்திருப்பின் அது கடந்த 2009ம் ஆண்டு மே18ற்கு பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்டிருக்கும். இப்போது தலைவர் பிரபாகரனையும் தமிழீழத்தையும் மாவீரர்களது ஒப்பற்ற தியாகத்தையும் உளமார நேசிக்கும் உலகத்தமிழர்கள் மனதளவில் தேசியத்தலைவரது இருப்பை ஏற்றுக்கொண்டுள்ள இவ்வேளையில் நீங்கள் எதிர்பார்க்கும் நிலை ஏற்பட சாத்தியமே இல்லை.

நீங்கள் அறிவிக்கப்போகும் செய்தியானது தமிழீழம் நோக்கிய விடுதலைப்போராட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. இருந்தாலும் உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் குளப்பத்தை ஏற்படுத்தும் என்பதுடன் இதனால் ஏற்படும் எதிர்விளைவுகள் எமது தாயக விடுதலைப் போராட்டத்தை தாமதப்படுத்தும் என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இருப்பை உறுதிப்படுத்தி நாமும் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களுடன் தொடர்ந்து செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிட்டுவருவது வெறுமனே மக்களை திருப்திப்படுத்தி நன்மதிப்பை பெறவேண்டும் என்பதற்காகவல்ல.

எமக்காகட்டும் தமிழகத்தில் உள்ள ஈழஆதரவு தலைவர்களாகட்டும் அனைவரிற்கும் கிடைத்த உறுதியான தகவல்களின் அடிப்படையிலேயே இக்கருத்தினையும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றோம். தேசியத்தலைவரது இருப்பு நீங்களோ அல்லது மற்றவர்களோ சொல்வது போல் இல்லை என்றால் எத்தனை காலத்திற்கு மக்களை நம்பவைக்க முடியும்?

என்றோ ஒருநாள் மக்களிற்கு உண்மை தெரிந்து விடும் அல்லவா…? அந்த யதார்த்தம் புரிந்த நிலையில் நாம் ஏன் மக்களிற்கு பொய்யாக நம்பிக்கையினை ஏற்படுத்த வேண்டும்…?

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உள்ளிட்ட முக்கிய தளபதிகள் மற்றும் ஆயிரக்கணக்கிலான வீரமிகு போராளிகளும் தமிழீழத்தை சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க தயாராக இருக்கின்றனர். இந்த உயிர்துடிப்பான தகவலை நாம் எமது தாய் மீதும் தாய் மண்மீதும் தமிழீழ கனவை சுமந்து காற்றோடு காற்றாகவும் மண்ணோடு மண்ணாகவும் கடலோடு கடலாகவும் கலந்துவிட்ட நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் மீதும் ஆணையிட்டு சொல்கின்றோம்.

நம்புங்கள் தலைவன் உள்ளிட்ட தளபதிகள் நலமுடன் உள்ளார்கள். நாங்களும் நீங்களும் எதிர்பார்க்கும் நல்ல தகவல் விரைவில் கிடைக்கும். எகிப்தில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி ஏற்படுத்தியிருக்கும் யுகப் புரட்சி உலகவல்லாதிக்க கனவை சிறிது அசைத்துப் பார்த்துள்ளது. அதனையும் விஞ்சிய அதிர்வுகளை தாயகத்திலும் அதன் எதிரெளியாக தமிழகம் உள்ளிட்ட முழு உலகிலும் ஏற்படுத்தப் போவது மெய்.

உலகத் தமிழர்களது ஆன்மாக்களில் இரண்டரக் கலந்துவிட்ட தேசத்தின் சொத்து மேதகு வே.பிரபாகரன் அவர்களது இருப்பை மறுதலித்து அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் உங்களை நீங்கள் ஒருதடவை சுயமதிப்பீடு செய்து பாருங்கள். சூரியனிடம் இருந்து ஒளியை உள்வாங்கி இரவில் வெளிச்சம் தரும் நிலவிற்கும் நிலையற்ற வாழ்நாளை கொண்ட நட்சத்திரக் கூட்டத்தரிற்கும் ஒப்பானவர்களே நீங்கள்.

ஆம் பிரபாகரன் எனும் மாபெரும் சக்தியில் இருந்து அடையாளப்படுத்தப் பட்டீர்கள் என்ற காரணத்திற்காகவே உங்களிற்கான எமது மதிப்பும் மரியாதைகளும் என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இருக்க நீங்கள் கூறுவது எமக்கு வேதவாக்கு அல்ல.

அதையும் மீறி உங்களது சுயசார்பு நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக பேரனர்த்தத்தினை ஏற்படுத்தும் இவ் அறிக்கையினை நீங்கள் வெளியிடத்தான் போகின்றீர்கள் என்றால் நாம் வலிமையோடு அதனை எதிர்த்து களம்காணுவோம் என்பதனையும் இத்தருணத்தில் மீண்டும் நினைவுபடுத்துகின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்(16-02.2011)

Comments