போர்க்குற்ற நபர்களை பான் கி-மூன் இரகசியமாகச் சந்திக்க காரணம் என்ன?

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச தரப்பினரை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கி-மூன் நேற்று (23-02-2011) இரகசியமாகச் சந்தித்துள்ளமை புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகளின் ஏற்பாட்டில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான அங்கத்தவர்களை சுட்டுப்படுகொலை செய்திருந்த, முன்னாள் படைத்தளபதியும், ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறீலங்காவின் இந்நாள் நிரந்தர துணை வதிவிடப் பிரதிநிதியுமான சவேந்திர சில்வா, மற்றொரு போர்க்குற்ற நபரான அவுஸ்திரேலியப் பிரசாவுரிமை கொண்ட முன்னாள் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலரும், ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறீலங்காவின் இந்நாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான பாலித கோஹொன, சிறீலங்காவின் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலர் றொமேஸ் ஜயசிங்க ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் தரப்பில் பான் கி-மூனுடன், வெள்ளைக்கொடி விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டிருந்த இந்திய முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரியும், பான் கி-மூனின் முக்கிய அலுவலக அதிகாரியுமான விஜய் நம்பியார் உட்பட மேலும் சிலர் கலந்து கொண்டனர்.

மொஹான் பீரிஸ், றொமேஸ் ஜயசிங்க ஆகியோர் நியூயோர்க் செல்லவில்லை எனவும், றொமேஸ் தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்றிருப்பதாக, சிறீலங்காவின் துணை வெளிவிவகார அமைச்சர் நியோமல் பிரேரா கூறியதாக, சிறீலங்காவின் பரப்புரை ஊடகமாக மாறியுள்ள கொழும்பின் டெயிலி மிரர் நேற்று அவசரமாகச் செய்தி வெளியிட்டிருந்தது.

இவ்வாறான பின்புலத்தில் நியூயோர்க்கை தளமாகக் கொண்டியங்கும் இனர் சிற்றி பிறஸ் ஊடகத்தின் ஊடகவியலாளர் மத்தியூ றசல் லீ, நேற்று ஐ.நாவில் நடந்த சந்திப்பை அம்பலத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றார். ஐ.நாவின் லோவன் கட்டிடத்தில் நடைபெற்ற சந்திப்பைப் படம் பிடித்தது மட்டுமன்றி, துணை வெளிவிவகார அமைச்சர் நியோமல் பிரேரா கூறிய தனிப்பட்ட பயணம் பற்றிய கதை தொடர்பாகவும் நேரடியாகக் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

இதற்குப் பதிலளித்த கோஹொன, துணை வெளிவிவகார அமைச்சர் நியோமல் பிரேராவிற்கு இந்த சந்திப்பு பற்றி தெரியாது எனவும், அவரிடமே கேளுங்கள் என்றும் பதில் கூறியதுடன், தனக்கெதிராக அனைத்துலக நீதிமன்றில் தொடரப்படும் வழக்கு பற்றி பதிலளிக்க மறுத்திருக்கின்றார். இனர் சிற்றி பிரஸ் படம் பிடித்தபோது நம்பியார் மறைந்து நிற்க முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட, வெள்ளைக்கொடிகளை உயர்த்திப் பிடித்து வந்தால் சுட மாட்டோம் என ஐ.நாவின் நம்பியார் ஊடாக வாக்குறுதி அளிக்கப்பட்டு விடுதலைப் புலிகளைப் படுகொலை செய்த போர்க்குற்ற நபர்களும், அதற்கு உடந்தையாக இருந்தவர்களும் ஏன் இரகசியாமாச் சந்திக்க வேண்டும் என்ற கேள்வி புலம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும் பரவலாகத் தோன்றியுள்ளது.

அவுஸ்திரேலியப் பிரசையான பாலித கோஹொன மீது சுவிஸ் ஈழத்தமிழரவையும், அமெரிக்காவின் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பும் இணைந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பான் கி-மூனின் நிபுணர் குழுவை நாட்டிற்குள்ளே அனுமதிக்க மாட்டோம் எனவும், அனுமதிப்போம் என்றும் மாறுபட்ட தகவல்களை சிறீலங்கா அரசாங்கம் வெளியிட்டு வருகின்றது. இது பற்றிப் பேசுவதாயின் அந்தச் சந்திப்பை இரகசியமாகச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

புலம்பெயர்ந்த பின்னரும் தாயகத்தில் உறவுகள் இருப்பதால் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள், புலம்பெயர் நாடுகளில் இருந்தும், ஏன் தாயகத்தில் இருந்துகூட போர்க்குற்ற சாட்சியங்களை வழங்கியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வாறான ஒழிப்பு மறைப்பு விளையாட்டுக்கள் அதன் மீது, அதன் செயற்பாடுகள் மீதும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கு நிச்சயம் சந்தேகத்தை ஏற்படுத்தும்.

அது மட்டுமன்றி புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எந்நொரு நிறுவனங்களையோ, நாடுகளையோ நம்பியிருக்காது போர்க்குற்ற விசாரணைக்கு தாமாகவே வலியுறுத்தி, அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை இவ்வாறான நிகழ்வுகள் உணர்த்தி நிற்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments