Skip to main content

முத்துக்குமார் தீக்குளித்தது போல் தான் முகமதுவும் தீக்குளித்தார் துசினியா விடுதலை ஆனால் தமிழகமோ !!!

முத்துக்குமார் தீக்குளித்தது போல் தான் முகமதுவும் தீக்குளித்தார்
newsnews

ஆனால் முகமதுவின் மரணம் ஏற்படுத்திய விடுதலை தாகம் முத்துக்குமாரின் மரணத்தின் பின் தமிழகத்தில் ஏற்படாமல் போய்விட்டிருந்தமை தமிழினமே வெட்க்கப்பட்டு வேதனையோடு ஏற்றக் கொள்ளவேண்டிய உண்மையாகும்.



தெற்குசூடானை தொடர்ந்து துனிசியா,எகிப்தில் வெற்றிபெற்றிருக்கும் உரிமைப் போராட்ங்கள் எமக்கு புலப்படுத்தியிருக்கும் பாதை

தெற்கு சூடானை தொடர்ந்து துனிசியா, எகிப்து நாடுகள் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுபட்டு சுதந்திர காற்றை சுவாசிக்கும் அரிய வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் நிற்கின்றமையானது உலகத்தமிழர்களிற்கான போராட்டப் பாதையினை புலப்படுத்தியுள்ளது.

news
பல பத்து ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கி சீரழிந்து வந்த இந்த நாடுகள் விடுதலையின் வாசற்படியில் நிற்பது சுயநலனின் அடிப்படையில் இயங்கும் உலக வல்லாதிக்க நாடுகளின் போக்கு தொடர்ந்துவரும் இன்றைய சூழலில் எதிர்பார்க்காத ஒன்றாகும். அதேவேளை மக்கள் மனதுவைத்து களமிறங்கிவிட்டால் எந்தவிதமான மாற்றங்களையும் நிகழ்த்திவிடலாம் என்பதே இந்த விடுதலை தாகம்கொண்ட தெற்குசூடானிய, துனிசிய, எகிப்திய மக்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்ற உண்மையாகும்.

உலகவல்லரசுகளின் சுயநலனின் அடித்தளத்தில் நின்று இயங்கிவரும் உலகசெயற்பாடுகளின் நடுவே திடீர் திருப்பமாக நடைபெற்றிருக்கும் வரலாற்று மீள் சீரமைப்புக்கள் பற்றி விரிவாக பார்க்கவேண்டியது அவசியமாகும். ஏனெனில் இந்த வரலாற்று மாற்றங்களும் அதற்கான சர்வதேச ஆதரவுநிலையும் எமக்கான போராட்டப் பாதையினையும் புலப்படுத்தி நிற்பதனால் சற்றுவிரிவாக பார்ப்போம்.

1956ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற சூடானின் அரச அதிகாரங்கள் சில நாட்களிலையே இராணுவ தலைமையால் கைப்பற்றப்பட்டு சர்வாதிகார ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது.
ஆபிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள சூடான் நாடானது அரேபியர்கள் இஷ்லாமியர்கள் கறுப்பின கிறிஷ்தவர்கள் என பல இன மத மொழி பேசுபவர்கள் வாழ்ந்து வந்த நாடாகும்.

வடக்குப் பகுதியை தளமாகக் கொண்டு பெரும்பாண்மையினராக இருந்த அரேபியர்களது ஆதிக்கத்தில் தெற்குப்பகுதியில் வாழ்ந்து வந்த கறுப்பின கிறிஷ்தவர்களான சிறுபான்மை இனத்தவர்கள் அடக்கியாளப் பட்டுவந்தனர். சிறுபான்மையின ஒடுக்குமுறையின் வெளிப்பாடாக இஷ்லாமியச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது சூடானிய சர்வதிகார அரசு.

1956ல் பண்டாரநாயக்கவால் தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டு பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிச்சிங்கள சட்டத்தை ஒத்ததாகவே தனி இஷ்லாமிய சட்டத்தை சூடானிய அரசு நடைமுறைப்படுத்தியது.
ஒருதலைப்பட்சமாக இந்த இஷ்லாமிய சட்ட திணிப்பினை ஏற்றுக் கொள்ளமறுத்த தெற்கு சூடானிய மக்கள் எதிர்ப்பினை காட்டத் தொடங்கினர். சூடானிய சர்வாதிகார இராணுவத்தலைமையால் வஞ்சிக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவர்களது உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டக் களத்தில் தென்சூடான் மக்கள் விடுதலை இராணுவம் களமிறங்கியது. இறுதிவரை உறுதியுடன் மக்கள் பேராதரவுடன் போராடி இன்று அதன்பயனாக சுதந்திர நாட்டை அமைத்துள்ளனர்.

இடைப்பட்ட காலங்களில் விடுதலைக்கான இலட்சியதாகத்துடன் சூடானிய இராணுவ அரசிற்கெதிராக தெற்குசூடான் மக்கள் விடுதலை இராணுவம் போரை முன்னெடுத்து வந்திருந்தது. இந்த போரில் இருபது இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் சூடானிய இராணுவத்தால் கொல்லப்பட்டதன் விளைவாக 2005ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த அமைதி உடன்படிக்கையின்படி 5ஆண்டுகள் கழித்து தெற்குசூடானிய மக்களிடம் வாக்கெடுப்பு நடாத்தி பிரிந்து தனிநாடாக செல்லவேண்டுமா என்பதனை அறிந்து கொள்வதென முடிவெடுக்கப்பட்டிருந்தது.
அவ்வாறே சர்வதேச கண்காணிப்பின் கீழ் அன்மையில் தெற்குசூடானிய மக்களிடம் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் 37இலட்சம் மக்கள் தனியாக பிரிந்து சுதந்திர நாட்டை அமைக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர். விடுதலைக்கு எதிராக வெறும் 1600 பேரே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக 98.8 சதவிகித வாக்காளர்கள் தனிநாட்டிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தி செய்திவெளியிட்டுள்ளது. இவ்வாறு வடக்கு சூடானிலும் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் 58சதவிகிதமாக வடக்குசூடான் மக்கள் தாமும் பிரிந்து செல்லவிரும்புவதாக வாக்களித்து தெற்குசூடானிய பிரிவை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

10மாகாணங்களை உள்ளடக்கி தென் முனையில் உள்ள சூபா என்ற நகரத்தை தலைநகராக கொண்டு ஆபிரிக்காவின் 54வது நாடாக தெற்குசூடானிய அரசு அமைந்துள்ளது. புதிய நாட்டை கட்டியமைக்கும் பணியில் தெற்குசூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைமையில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

நாடுகடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் பல்துறைகளில் தேர்ச்சிபெற்ற ஈழத்தமிழ் நிபுணர்கள் குழு உள்ளடங்கலாக பல்வேறு நட்பு நாடுகளது ஆதரவுடன் தமது புதிய நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர் தென்சூடானிய மக்கள். இந்த பணிகள் திட்டமிடப்பட்டபடி குறிக்கப்பட்ட காலத்தில் நிறைவடையும் பட்சத்தில் எதிர்வரும் சூலை மாதம் அதிகாரபூர்வமாக தெற்குசூடான் புதிய நாடாக உதயமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மக்கள் ஆட்சிக்குமாறிய துனிசியா.

துனிசியாவும் 1956ல் பிரான்சு நாட்டின் பிடியில் இருந்து விடுதலைபெற்ற போதும் பின்னர் ஆட்சிபீடமேறியவர்களின் தான்தோன்றித்தனமான ஆட்சியால் நிம்மதியிழந்து தவித்துவந்தது.

1987ம் ஆண்டு ஆட்சிஅதிகாரத்தை கைப்பற்றிய சின் அல்-ஆப்தின் பென்அலி தனது குடும்பத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சி செய்துவந்ததினால் நாடு பெரும் பின்னடைவுகளை சந்தித்துவந்தது.

நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதிலும் பார்க்க தனது குடும்பத்தினரின் சொகுசு வாழ்விற்காகவும் தனது ஆட்சி அதிகாரம் நிலைத்து நிற்பதற்குமே அதிமுக்கியத்துவம் கொடுத்து வந்ததனால் துனிசிய பொருளாதார ரீதியில் பின்தங்கியதோடு மக்களும் வறுமையில் வாடிக்கொண்டிருந்தனர்.(தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கும் கருணாநிதி தனது குடும்பத்தினை முன்னிலைப்படுத்தி தமிழக ஆட்சியதிகாரங்களை வளைத்துப் போட்டுக்கொண்டு அராசக ஆட்சி நடத்துவதைப் போல்)

தான்தோன்றித்தனமான ஆட்சியின் வெளிப்பாடாக மனித உரிமை மீறல்கள் கொடிகட்டிப்பறந்தன. பத்திரிகை சுதந்திரம் முற்றிலுமாக மறுக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு எதிராக சிறு போராட்டங்கள் நடத்தப்படுமிடத்து அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்கி பெரும் அச்சுறுத்தலான நிலைமை நிலவிவந்தது. எதிர்க் கட்சிகளும் பலவீனமாக இருந்து வந்தமையால் இந்த கொடுங்கோல் ஆட்சியில் இருந்து துனிசிய மக்களிற்கு விடுதலை என்பது வெறும் கனவாகவே இருந்துவந்தது.

இவ்வாறு வறுமையோடும் கொடுங்கோல் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கிற்கும் முகம்கொடுத்து வந்த துனிசிய மக்களின் விடிவிற்கு வித்திட்டது வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும் காவல்துறையின் அதிகார முறைகேட்டினாலும் விரக்தியடைந்த ஒரு இளைஞ்னது மரணம்தான்.

கல்வியறிவில் சிறந்து பட்டப்படிப்பை முடித்து ஏனையவர்களுள் ஒருவனாக வாழ்ந்து கொண்டிருந்த 26வயதேயான முகமதுவின் மரணம் தான் இன்று துனிசியாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த சர்வாதிகார ஆட்சியின்பிடியில் இருந்து துனிசிய மக்களை விடுவித்துள்ளது
.newsnews

படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காது இருந்தமையால் தமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு தெருவோரத்தில் காய்கறி விற்கத்தொடங்கிய முகமதுவிற்கு கையூட்டு கேட்டு தொந்தரவு கொடுத்துவந்த காவல்துறையின் செயற்பாடே இந்த மாபெரும் வரலாற்று மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.

தமிழினமே ஈழத்தில் அழிந்து கொண்டிருந்த போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கருணாநிதி கண்டுகொள்ளாதும் தமிழின அழிப்பிற்கு சகலவிதத்திலும் உதவிபுரிந்த சோனியா தலைமையிலான இந்திய மத்திய அரசிற்கு ஆதரவினை வழங்கியும் வந்தபோது இனமான உணர்வு மேலிட்டு எழுந்ததனால்

முத்துக்குமார் தீக்குளித்தது போல் தான் முகமதுவும் தீக்குளித்தார்

ஆனால் முகமதுவின் மரணம் ஏற்படுத்திய விடுதலை தாகம் முத்துக்குமாரின் மரணத்தின் பின் தமிழகத்தில் ஏற்படாமல் போய்விட்டிருந்தமை தமிழினமே வெட்க்கப்பட்டு வேதனையோடு ஏற்றக் கொள்ளவேண்டிய உண்மையாகும்.

newsnews

தொடர்ச்சியாக கையூட்டு கேட்டுதொந்தரவு செய்துவந்த காவல்துறையின் அடாவடி நாளுக்கு நாள் அதிகரித்துவந்த நிலையில் கடந்த டிசம்பர்(2010) 17ம் நாள் பெண் காவல்துறையால் அவமானத்திற்குள்ளாக்கப்பட்ட முகமது அதுகுறித்து மேலதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யச் சென்ற போது அங்கும் யாரும் கண்டுகொள்ளாததால் விரக்கியின் உச்சத்திற்கு சென்றான் முகமது.

அடக்கியொடுக்கப்பட்டவர்களது இறுதி ஆயுதமான தற்கொலையை புரட்சிகரமானதாக்கி வீதிக்குவந்து உடல்முழுவதையும் பெற்றோல் ஊத்தி தீவைத்துக்கொண்டான் முகமது. இந்த திடீர் நிகழ்வால் பதற்றமடைந்த அயலவர்கள் முகமதுவை மருத்துமனைக்கு கொண்டுசென்று சேர்ப்பித்தனர். இருந்தும் சிகிச்சை பலனின்றி சனவரி 4ம் திகதி துனிசிய மக்களது இதயத்தில் புரட்சித் தீயை பற்றவைத்துவிட்டு மரணத்தை அரவணைத்துக் கொண்டான் துனிசிய (முத்துக்குமார்-முருகதாசன்) முகமது.

ஆட்சி அதிகாரத்தின் அத்துமீறல்கள் அலட்சியப் போக்கிற்கு எதிராக முகமது தீக்குளித்து பலியான செய்தி நாடெங்கும் பரவி உணர்வுக் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. புரட்சி கோசங்களோடு வீதிகளில் இறங்கிய துனிசிய மக்கள் முகமதுவின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் பங்கு கொண்டு அதனை போர்க்களமாக்கினர்.

சிறு தீப்பொறியாக முகமதுவின் உடலில் பற்றிக் கொண்ட தீ துனிசிய மக்களது மனங்களில் பரவி வீறுகொண்டெழுந்து ஆட்சி அதிகாரத்தை நேர்க்கி அணி அணியாகத் திரள வைத்தது. வேலையில்லாப் பட்டதாரிகள் முதற்கொண்டு கொடுங்கோல் அரசால் பாதிப்பிற்குள்ளான மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி வலுவாக போராடினர்.

துனிசிய நாடுமுழுவதும் எதிர்ப்பார்ப்பாட்டங்கள் வலுப்பெற்றதனால் பரபரப்பான ஆட்சிபீடம் வழக்கம்போல் அடக்குமுறை ஆயுதத்தை ஏவி ஒடுக்கிவிட முயன்றது. எழுபதிற்கு மேற்பட்டவர்கள் இந்த அடக்குமுறைக்கு பலியாகிய போதும் வேகமெடுத்து கொடுங்கோல் ஆட்சிபுரிந்த பெண் அலியின் அரசைநோக்கி புறப்பட்டது. அங்கு நடைபெற்ற போராடங்களையும் அரச அடக்குமுறைகளையும் நவீன தகவல்தொடர்பு முறையில் இணையத்தளங்களை பயண்படுத்தி இளைஞர்கள் வெளி உலகின் பார்வைக்கு கொண்டுவந்து தமது மீட்சிக்கு வலுச்சேர்த்திருந்தனர்.

துனிசியாவை நோக்கி உலக ஊடகங்கள் தமது பார்வையை திருப்பிக் கொண்டது. மக்கள் எழுச்சி கட்டுக்கடங்காது சென்றதால் கொடுங்கோல் ஆட்சிபுரிந்த பெண்அலி நாட்டைவிட்டு தப்பி ஓடி தனது குடும்பத்துடன் சவுதிஅரேபியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இன்று துனிசியா மக்கள் சர்வாதிகார அரசிடம் இருந்து விடுதலைபெற்றுள்ளனர். இந்த விடுதலைக்கு பின் மக்கள் நலனையே தலையாய பணியாக கொண்டு நல்லாட்சி புரியும் அரசு அமைய நாமும் வாழ்த்துவோம்.

இதேபோன்றதொரு மக்கள் எழுச்சியை தமிழகத்தில் உருவாக்கி அதன் உடனடிப்பயணாக ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்டு வந்த தமிழர்களை காப்பாற்றுவதற்காகத் தானே எமதருமை சகோதரர் முத்துக்குமார் கடந்த 2009ம் ஆண்டு சனவரி 29ம் நாள் தீக்குளித்து உயிர்நீத்திருந்தான்.

ஏய்.. தாய்த் தமிழகமே..!? உங்கள் சாக்கடை அரசியல் சகதிக்குள் முத்துக்குமாரின் விண்ணை விஞ்சிநிற்கும் தியாகத்தை அமுக்கி வரலாற்று துரோகமிழைத்து விட்டீர்களே…!? இன்று துனிசியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை சிறிலங்கா இந்தியாவில் ஏற்படுத்தாமல் தடுத்து விட்டு, தமிழர்களது விடுதலைப் போராட்டம் கண்டிருக்கும் இன்றைய பின்னடைவிற்கு காரணம் கண்டுபிடித்து வரலாற்று நாயகர்கள் மீது களங்கம் கற்பிக்கவா பார்கிறீர்கள்? கொஞ்சம் பொறுங்கள் காலம் யாவற்றிற்கும் பதில் சொல்லும்.

பேயாட்சியில் இருந்து விடுபடும் நாட்களில் எகிப்து..

சர்வாதிகார ஆட்சியின் பிடியில் சிக்கி எகிப்து திணறிவந்தவேளை மக்கள் கொந்தளிப்பு உச்சக்கட்டத்தினை அடைந்து எகிப்து அரசியல் நிலவரம் பரபரப்பிற்குள்ளாகியுள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளாக எகிப்தை ஆண்டுவரும் கோத்னி முபாரக்கின் ஆட்சி மீது கடும் அதிர்ப்தி அடைந்த மக்கள் வீதிகளில் இறங்கி போராடிவருகின்றனர்.

அரசிற்கெதிரான போராட்டம் தீவிர கலவரமாக வெடித்து ஊரடங்கு உத்தரவையும் மீறி பொதுமக்கள் போராடிவருகின்றனர். போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 150ற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 4ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு, எதிர்நிற்கும் இராணுவத்தினர், சரிந்துவிழும் பிணங்கள் இவை எதனையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் வீதிகளில் இறங்கிப் போராடிய மக்கள் இன்று இலட்சக்கணக்கில் ஒன்றுதிரண்டு போராடிவருகின்றனர்.

பொதுமக்கள் எதிர்ப்புவலுவடைந்து வரும் நிலையில் முபாரக் தனது அமைச்சரவையினை கலைத்து புதிய அமைச்சரவையினை அமைப்பதாக கூறியுள்ளார். தனது நெருங்கிய நண்பரான உளவுத்துறை தலைவராக இருந்த உமர் சுலைமானை துணை அதிபராக்கியிருக்கின்றார் முபாரக்.

அன்மைக்காலமாக அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் கட்டுக்கடங்காத ஊழல் என்பவற்றால் சினம் கொண்டமக்கள் சனவரி 25ம் திகதியை அரசிற்கெதிரான கோப தினமாக கடைப்பிடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மக்களின் நியாயமான போராட்டத்திற்கு வழிவிட்டு ஒதுங்கியிருக்கும் எகிப்திய இராணுவத்தினரில் பெரும்பாலானவர்கள் மக்களுடன் இணைந்து ஆட்சிமாற்றத்தினை வலியுறுத்தி போராடிவருகின்றனர். எகிப்து வரலாற்றில் முதல் முறையாக நீதிபதிகளும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

மக்கள் போராட்டம் கிளர்ச்சியாக வலுவடைந்து உச்சம் பெற்றுள்ள நிலையில் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளும் சிறைச்சாலையினை உடைத்து மக்களுடன் இணைந்து போராடிவருகின்றனர்.

அரசிற்கெதிரான கிளர்ச்சி வலுவடைந்து உச்சம்பெற்றுள்ள நிலையில் முபாரக் அரசு தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களிற்கு தடைவிதித்துள்ளதுடன் இணையத்தளம் கைத்தொலைபேசி பயன்பாட்டையும் முற்றிலுமாக முடக்கியுள்ளது.

மக்களது நலனை கருத்தில்கொள்ளாது ஆட்சிபுரிந்துவரும் முபாரக் ஆட்சியை விட்டு உடனடியாக வெளியேரவேண்டும் என்பதே மக்களது பிரதான கோரிக்கையாக உள்ளது. எகிப்திய விடுதலை கோரும் அமைப்பின் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான முகமது எல் பரதேய் சிறை மீண்டு மக்களுடைய போராட்டத்திற்கு வலுவூட்டிவருகின்றார்.

சர்வதேச அணுசக்தி முகாமை அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்த முகமது எல் பரதேய் அச்சுறுதல் காரணமாக நீண்டகாலம் வியன்னாவில் தங்கியிருந்த இவர் கடந்த 28ம் திகதி வெள்ளிக்கிழமை நாடுதிரும்பிய உடன் முபாரக் அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஏனைய இஷ்லாமிய அமைப்புகளும் முபாரக் பதவிவிலகி நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனவலியுறத்தி வருகின்றனர்.

ஏற்கனவே போராட்டம் ஆரம்பித்த உடன் முபாரக்கின் மகன் நாட்டைவிட்டு தப்பியோடி லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். முப்பதிற்கு மேற்பட்ட உறவினர்களுடன் தப்பிய முபாரக்கின் மகன் நூறு சூட்கேசுகளில் பெரும்தொகை பணத்தினையும் தங்கம் மற்றும் வைரம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற ஆபரனங்களையும் எடுத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் கூடி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்த மக்கள் எண்ணிக்கை ஆயிரங்களை கடந்து இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது. கடந்த செவ்வாய் கிழமை சுதந்திர சதுக்கத்தில் கூடிய பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் முபாரக் பதவியில் இருந்து விலக நான்குநாள் கெடு விதித்துள்ளனர்.
மக்களது போராட்டம் பேரெழுச்சி கொண்டுவருகின்ற போதும் முகபாரக் பதவிவிலக தொடர்ந்து மறுத்துவருவதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

மக்களது அமைதிவழி போராட்டத்தை வன்முறைகொண்டு அடக்கவேண்டாம் என உலக நாடுகள் வலியுறுத்திவரும் நிலையிலும் இராணுவத்தினர் தனது கட்டளையை ஏற்கமறுத்து மக்களுடன் கைகோர்த்து நிற்பதனாலும் தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு மக்கள் மீது வன்முறையினை ஏவிவிட்டுள்ளார். இந்த திடீர் கலவரத்தால் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலநூறு போர் காயமடைந்துள்ளனர்.

எகிப்து மக்களின் அமைதியான போராட்டம் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளக் கூடியது. மக்கள் சுதந்திரமாக பேசுவதற்கும் பொதுக் கூட்டங்களை நடத்தி தமது கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் உரிமை உள்ளது என்று கூறியள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா மக்கள் போராட்டத்திற்கு உரியவகையில் தீர்வைக்காண முபாரக்கிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு முன்னரும் எகிப்தில் ஏற்பட்டுள்ள தீவிர பஞ்சத்தின் எதிரொளியாக 1977ல் ‘ரொட்டிக் கலவரம்’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் எகிப்தையே திணறடித்து அப்போதிருந்த அரசை வீட்டிற்கு அனுப்பி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

வட ஆபிரிக்காவில் பெரிய நாடாக இருக்கும் எகிப்து எட்டுக் கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையினை கொண்டுள்ளது. மக்கள் தொகையில் பாதிக்குமேல் 25வயதிற்கு உள்ளிட்ட இளைஞர்கள் என்பதுடன் அவர்களே இந்த மக்கள் புரட்சிக்கு வித்திட்டுள்ளனர். தன்னெழுச்சியாக மக்கள் வீதிகளில் இறங்கி முன்னெடுத்துவரும் போராட்டம் அரசிற்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்துமளவிற்கு உச்சகட்டத்தை அடைந்த பின்னரே எதிர்கட்சிகள் போராட்ட இயக்கங்கள் சேர்ந்து கொண்டு போராடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை உலகம் கண்டிராத அதிசயமாக சட்டம் ஒழுங்கை காப்பாற்றி அரசிற்கு பக்கபலமாக நிற்கவேண்டிய எகிப்திய இராணுவம் மக்களது புரட்சிக்கு வழிவிட்டு தாமும் சேர்ந்து ஆட்சி மாற்றத்திற்காக குரல்கொடுத்து வருவது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ந்துள்ளது.இந்த செய்தி சர்வதேச கவனத்தை ஈர்ந்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எமது மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போதெல்லாம் துடித்தெழுந்த தாய்த்தமிழக உறவுகள் வீதிகளில் இறங்கி கண்டன ஆர்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடாத்தியபோது விரட்டி விரட்டி கைது செய்து சிறையிலடைத்தமையும் ஆட்சியிலுள்ள கருணாநிதி அரசியல் சுயலாபத்திற்காக நடாத்திய போராட்டங்களிற்கு முழு பாதுகாப்பு வழங்கியிருந்தமையும் எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் அருமைச் சகோதரன் முத்துக்குமார் உள்ளிட்ட 16 சொந்தங்கள் தீக்குளித்து மக்கள் புரட்சிக்கு வித்திட்ட போது மனநிலை சரியில்லாதவர்கள் குடும்பத்தில் பிரச்சினை அதனால்தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்று கருணாநிதி எழுதிக்கொடுத்த கதைவசனத்தை பகிரங்கப்படுத்தி களங்கப்படுத்திய தமிழக காவல்துறையினர் வெட்கித்தலைகுனிய வேண்டும்.

துனிசியா, எகிப்து போன்ற நாடுகளில் சடுதியாக ஏற்பட்டிருக்கும் மக்கள் புரட்சி உச்சநிலையினை அடைந்து நிற்பதையடுத்து அண்டை நாடுகளிலும் ஆட்சி சீர்திருத்தங்கள் முன்னெ:க்கப்படும் என்ற அறிவிப்புகளும் அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்புகளும் ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

யேமன் நாட்டு அதிபர் அலிஅப்துல்லா சாலே பதவியில் இருந்து விலகவேண்டும் என்ற கோரிக்கையுடன் யேமன் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். சுமார் இரண்டரைக் கோடி மக்கள் தொகையினை கொண்ட யேமனிலும் ஆட்சியதிகாரங்கள் குறிக்கப்பட்ட குடும்பத்தினை சுற்றி வளைக்கப்பட்டு வந்தநிலையில் அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சியின் தாக்கம் இங்கும் பற்றிகொண்டு ஆட்சிமாற்றத்திற்கான போராட்டமாக வீச்சுப்பெற்று வருகின்றது. இந்த மக்கள் போராட்டத்திற்கு அங்குள்ள 5பிரதான எதிர்கட்சிகளும் முழுமையான ஆதரவினை வழங்கி நிற்கின்றனர்.

அதேபோன்று பாலத்தீனத்திலும் மக்கள் போராட்டம் சிறுஅளவில் ஆரம்பித்துள்ளதையடுத்து நீண்டகாலமாக நடைபெறாது இருந்த தேர்தலை விரைவில் நடாத்த உள்ளதாக விரைந்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. இவ்வாறான ஆட்சிமாற்றங்கள் சீர்திருத்தங்கள் என தொடர்நிகழ்வுகளாக ஆபிரிக்க அரேபிய நாடுகளில் இடம்பெற்றுவருகின்றது.

தென்சூடானை தவிர்த்து துனிசியா எகிப்திய மக்கள் தன்னெழுச்சியாக தமது தலைவிதியை ஒளிமிக்கதாக அமைத்துக் கொள்ள புரட்சிக் கோலம்பூண்டு தமது இலக்கிணை அடைந்துள்ளமையானது எமது போராட்டப்பாதை எத்திசையில் நகரவேண்டும் என்பதனை தெளிவாக புலப்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் எமது சொந்தங்கள் சிங்களத்தால் மனித வேட்டையாடப்பட்டு இரண்டு ஆண்டுகள் அன்மித்திருக்கும் இவ்வேளைவரை, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறி வாருங்கள் உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் எனக் கூறிய நாடுகள் எல்லாம் ஏன் என்று ஒருதடவை முள்வேலிக்கு பின்னால் அல்லாடிக் கொண்டிருக்கும் எமது மக்களது நிழலைக் கூட திரும்பிப்பார்க்க மறுத்துவருவதுடன் தத்தமது பிரட்சினைகளே அதிமுக்கியமென்று அதில் மூழ்கிப்போயுள்ளன.

எமது விடுதலை அவர்களிற்கு முக்கியம் கிடையாது. அவர்கள் உடனடியாக தலையிட்டு சிங்களத்தை எதிர்த்து எமக்கான விடுதலையை உறுதிப்படுத்துவதற்கு பெருமளவிலான எண்னெய்வளங்களோ கனிமவளங்களோ எமது தேசத்தில் புதையுண்டு கிடக்கவில்லையே.

அதனால் அவர்களது நிம்மதியை கேள்விக்குள்ளாக்கி நெருக்கடி கொடுப்பதன் ஊடாகவே எமது விடுதலையை விரைவுபடுத்த முடியம்.
ஈழத்தில் உள்ள எமது மக்கள் தன்னெழுச்சி கொண்டு வீதிகளில் இறங்கும் சூழல் உறுதிப்பாடு அற்றநிலையில் உள்ளதுடன் அவ்வாறான புரட்சி நிலைக்கு மக்களை வழிநடத்துவதற்கு தலைமைகள் அங்கில்லை என்பதே உண்மைநிலையாகும்.

அப்படியாயின் புலத்திலும் தாய்த்தமிழகத்திலும் இவ்வாறான போராட்டத்தை நடாத்துவது சாத்தியமாக உள்ளது. சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் தமிழகத்தின் தெருக்களெங்கும் கண்டன ஆர்பாட்டங்களும் பொதுக் கூட்டங்களும் சாதனைவிளக்க பொதுக்கூட்டங்களுமாக களைகட்டத் தொடங்கிவிட்ட நிலையிலையே இது தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது.

தாய்த்தமிழகத்தில் தமிழ்த் தேசியத்தின் அடித்தளத்தில் நின்று உணர்வுபூர்வமாக போராடிவரும் தலைமைகளுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றினை இத்தருணத்தில் உலகத் தமிழர்கள் சார்பில் முன்வைக்கின்றோம்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஆயிரம் மக்களை கூட்டி ஆர்பாட்டங்களை நடாத்தி சோர்வடையச் செய்துவிடாது மேற்சொன்ன நாடுகளில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற பெரும் மக்கள் போராட்டத்தினை ஒருங்கிணைத்து மாற்றத்தை நிகழ்த்திக் காட்டவேண்டும் என்பதுதான்.

ஈழத்தில் எமது சொந்தங்கள் அழிக்கப்பட்டது போக தமிழகத்தில் இன்று நிலவும் விண்ணைத் தொட்டுநிற்கும் விலைவாசி உயர்வு, ஊழல் மிகுந்த ஆட்சி, சகலதுறைகளிலும் தமது ஆக்டோபசு கரங்களை பரப்பிநின்று எதேச்சதிகாரம் செய்துவரும் கருணாநிதி குடும்பத்தின் ஆதிக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் என மக்கள் இயல்பாகவே ஆட்சிபீடத்தின் மீது கோபத்தை காட்டவேண்டிய நெருப்பு சூழல் நிலவிவருகின்ற வேளை இவ்வாறு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆர்ப்பாட்டங்களை நடாத்தி மக்களது கோப உணர்வுகளை நீர்த்துப்போக வைக்காது ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விட்டு ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கலாமல்லவா?

அதிமுக்கியமாக சிங்களத்தால் மனிதவேட்டையாடப்பட்டு ஈழத்தமிழ் சொந்தங்களது நிலையினையும் தினமும் கடலில் சிங்களத்தால் சித்திரவதைக்குள்ளாக்கப் பட்டுவரும் தமிழக மீனவர்களது பிரட்சினையும் இதன் மூலம் சர்வதேசமயப் படுத்தப்படுவதற்கு ஒரு அரியசந்தர்ப்பமல்லவா?

தமிழகத்தில் உள்ளவர்கள் முன்னால் உள்ள இந்த வாய்ப்பினை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க புலத்தில் இருக்கும் நாம் என்ன செய்யப் போகின்றோம்…?

மக்களின் அமைதிவழிப் போராட்டத்தை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் என எகிப்திய மக்களது புரட்சி பற்றி கருத்துக் கூறிய ஒபாமாவின் கூற்றை நாம் நடைமுறைப்படுத்தி சர்வதேசத்திற்கு நெருக்கடி கொடுப்போம்.


முன்னர் நாம் தொடர்ந்து வலியுறுத்துவது போன்று நாம் வாழ்ந்துவரும் புலம்பெயர் தேசங்கள் யாவற்றிலும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் ஒரே நேரத்தில் அந்தந்த நாடுகளின் தலைநகரங்களை முற்றுகையிட்டு எமக்கான விடுதலையை விரைவுபடுத்துவோம்.

கனடா, அவுத்ரேலியா, பிரான்சு, யேர்மனி, சுவிஷ், லண்டன், டென்மார்க், அமெரிக்கா என தமிழர்கள் எங்கெங்கு வசிக்கிறார்களோ அங்கெல்லாம் தொடர் முற்றுகைப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
உலகத்தமிழர்களது விடுதலை ஒன்றையே உயிர்மூச்சாக்கி போராடிவருகின்ற எமது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து அழித்தொழிப்பதற்கு சிங்களத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய நாடுகள் மக்களது சனநாயக வழிமுறைப்போராட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையினை ஏற்படுத்துவோம்.

சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலையே சிறைவைக்கப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது. கைதுகளும் சிறைவைப்புகளும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சுவட்டத்திற்குள் எமது மக்கள் வாழ்வு சுழல்கின்றது என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் தேசியத்தலைவர் உரைத்தது போன்று இன்றும் எமது மக்கள் இந்த நச்சுவட்டத்திற்குள்ளையே வாழ்ந்துவருகையில் நாம் காலம்தாழ்த்தாது விரைந்து போராட்டகளம் புகுந்து தமிழீழ தனியரசை நிறுவுவோம்.

உலகளவில் 1990களிற்கு பின்னர் முப்பதிற்கு மேற்பட்ட நாடுகள் புதிதாக பிறந்துள்ளத. 1990ல் ஆபிரிக்க கண்டத்தில் உள்ள நமிபிய நாட தென்ஆபிரிக்காவிடம் இருந்து விடுதலைபெற்றது. 1991ல் சோவியத்யூனியன் உடைந்து 15 புதிய நாடுகள் பிறந்தன.1990களின் முற்பகுதியில் யூகோசுலாவியா உடைந்து 5நாடுகள் உருவாகின. 2006ல் மேலும் 2நாடுகள் தோற்றம்பெற்றன. 2008ல் கொசோவா தனியாக பிரிந்துபோய் அண்மையில் சுதந்திரபிரகடனத்தை அறிவித்திருந்தது.

ஆசியக் கண்டத்தில் 2002ம் ஆண்டு இந்தோனேசியாவிடம் இருந்து வாக்கெடுப்பு நடாத்தி கிழக்குத்தீமூர் மக்கள் சுதந்திரம் பெற்றிருந்தனர்.

இன்று புதியநாடுகளின் பிறப்பின் தொடர்ச்சியாக தெற்குசூடான் சுதந்திர தனியரசாக மலர்ந்துள்ளது. புதிய நாடுகள் பிறப்பதும் எல்லைகள் விரிவடைவதும் குறுகலடைவதும் எப்போதுமே நடக்கக் கூடிய நிகழ்வுகளே. தனிப்பெரும் வல்லரசுகளின் ஆளுகைக்குள் உலக அரசியல் பொருளாதார தலைமைத்துவம் சென்றதால் அவர்களின் நலன் சார்ந்தே புதிய நாடுகளது பிறப்பு அமைந்துவிடுகின்றது.

இருந்தும் துனிசியா, எகிப்து போன்ற நாடுகளில் ஏற்பட்டிருக்கும் மக்களது தன்னெழுச்சியான போராட்டங்களையும் வல்லரசுகளை விரும்பியோ விரும்பாமல் அவர்களது சுதந்திரத்தை ஏற்றுக் கொள்ள வைத்துவிடுகின்றது என்ற யதார்த்தத்தினையும் கண்முன்னே காண்கின்றோம்.

அடுத்த ஒருநாடு இந்த உலகத்தில் பிறப்பெடுப்பது என்றால் அது சுதந்திர தமிழீழத் தனியரசாகவே இருக்கும் என்ற உறுதியோடு எமது தாயக மக்களை சூழ்ந்திருக்கும் நச்சுவட்டத்தில் இருந்து விடுவிப்பதற்கான போராட்டக் களத்தில் உலகத்தமிழர்களாகிய நாம் களமிறங்குவோம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

ஈழதேசம் ஆய்வாளர் : ம.செந்தமிழ் (05-02-2011)

ஈழ அதிர்வுகள் தொடர்பாக உங்கள் கருத்துக்களை தெரிவிக்க athirvalaikal@hotmail.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

Comments