கிரிக்கெட் மட்டையிலும் ரத்தக் கறையே மிஞ்சியுள்ளது

- ஜிம்பாப்வேயைப் புறக்கணிக்க முடியுமெனில் ஏன் சிறிலங்காவைப் புறக்கணிக்க முடியாது? (So i ask: If Zimbabwe, why not Sri Lanka?)

Sri Lanka's Kumar Sangakkara bats during the Twenty20 International against Australia at the WACA (Getty Images: Paul Kane)
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகன் என்ற வகையில், சிறிலங்கா அணியினர் ஒவ்வொரு முறையும் சிக்ஸ் அடிக்கும் போது நாங்கள் சலித்துக்கொள்கிறோம். போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் நாடொன்றுடன் நாங்கள் கிரிக்கெட் விளையாடுவதையிட்டு நாங்கள்தான் வெட்கப்படவேண்டும்.

விளையாட்டையும் அரசியலையும் ஒன்றுடன் ஒன்று கலக்கக்கூடாது எனச் சிலர் வாதிடலாம். எவ்வாறிருப்பினும், சிம்பாவே அவுஸ்ரேலிய மண்ணுக்கு மேற்கொள்ளவிருந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை அவுஸ்ரேலியர்களான நாங்கள் புறக்கணித்ததைத் தொடர்ந்து இந்த நிலை மாறிவிட்டது எனலாம்.
ஒருபடி மேலே சென்ற அப்போதைய அவுஸ்ரேலியப் பிரதமர் அலெக்சாண்டர் டௌனர் சர்வதேச கிரிக்கெட் சபையிலிருந்து சிம்பாவே தடைசெய்யப்படவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் சிம்பாவேக்கு எதிராக நாங்கள் புறக்கணிப்புப் போராட்டத்தினை நடாத்த முடியுமெனில் ஏன் சிறிலங்காவிற்கு எதிராக அதனைச் செய்யக்கூடாது என நான் கேட்கிறேன்.

உண்மையைக் கூறப்போனால் சிறிலங்காவில் அரசியலும் விளையாட்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர்களான சனத் ஜெயசூரிய மற்றும் அர்ச்சுனா ரணதுங்க ஆகியோர் அரசியலுக்குள் நுழைந்து விட்டார்கள். அஜந்த மெண்டிஸ் சிறிலங்கா இராணுவத்தின் ஆட்லறிப் படைப்பிரிவில் பணியாற்றுகிறார்.
2010ம் ஆண்டுக்கான அமைதிக்கான அனைத்துலகப் பட்டியலில் 133ஆவது இடத்திலிருக்கும் சிறிலங்காவினது [பர்மாவினைவிடக் கடை நிலையிலேயே சிறிலங்கா உள்ளது] மனித உரிமை நிலைமைகள் ஒன்றும் புகழும்வகையில் இல்லை.

25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த இனப்போரை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டேன் என மார்தட்டும் சிறிலங்கா அரசு போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த நிலையில் மேற்குறித்த இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என மனித உரிமைக் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச் சபை மற்றும் அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு போன்ற மனித உரிமை அமைப்புக்கள் அழைப்பு விடுத்திருக்கின்றன.

போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சித்திரவைத் செய்து கொலைசெய்தமைக்கான ஆதாரங்களைக் கொண்ட சலனப் படங்கள் மற்றும் ஒளிப்படங்களும் வெளியாகியுள்ளன.

ஏன் சிறிலங்கா இராணுவத்தினர் இத்தகைய குற்றங்களைப் புரிந்தார்கள் என அவர்களது தளபதிகளும் களமுனைச் சிப்பாய்களும் வழங்கிய வாக்குமூலங்கள் கூட ஒலிப்பதிவில் உள்ளன.

சிறிலங்காப் படையினரால் பொதுமக்கள் செறிவாக இருந்த பிரதேசங்கள் மற்றும் மருத்துவமனைகள் என்பன வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டதைக் காட்டும் போதிய ஆதாரங்கள் உள்ளன.

சிம்பாவேயின் முகாபேயினைப் போல சிறிலங்காவின் ராஜபக்ச அரசாங்கம் அனைத்துலக கவலைகளைத் தொடர்ந்தும் ஏற்க மறுத்து வருகிறது.
சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்கான அனைத்துலக விசாரணை மற்றும் பொறுப்புச்சொல்லும் தன்மை தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைத்திருந்த வல்லுநர்கள் குழுவின் உறுப்பினர்களுக்கான விசாவினை வழங்குவதற்குச் சிறிலங்கா அரசாங்கம் மறுத்திருந்தது.
அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் வீதிக்கிறங்கி ஐ.நாவின் இந்த முனைப்புக்களுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கொழும்பிலுள்ள ஐ.நா செயலகத்திற்கு முன்னால் அரச அமைச்சர் விமல் வீரவன்ச போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் ஐ.நா செயலகத்தின் செயற்பாடுகளை முடக்கியதோடு அதன் பணியாளர்கள் செயலகத்திற்குச் செல்லாதவாறும் செயலகத்திலிருந்து வெளியேறாதவாறும் தடுத்து நின்றனர்.
ஐ.நாவிற்கு எதிரான சுவரொட்டிப் பரப்புரையினை மேற்கொண்ட இந்த அமைச்சர்கள் பான் கீ மூனின் உருவப்பொம்மையினைக் கூட நடுவீதியில் வைத்து எரித்திருக்கிறார்கள்.

சிம்பாபேவயின் எதிர்க்கட்சித் தலைவர்; மோர்கன் ஸ்வங்கிறாய் அவர்களைப் போல சிறிலங்காவினது எதிர்க்கட்சிகளும் பலமற்றவையாகக் காணப்படுகின்றன.

சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம்வகிக்கின்ற அதிகாரிகள் சிலர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்றும் அது தொடர்பான ஆதாரங்கள் தன்னிடமிருக்குமிடத்து அவற்றை தொடர்புடைய அனைத்துலக விசாரணையாளர்களிடம் வெளிப்படுத்துவதற்குத் தயங்கமாட்டேன் என்றும் முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சிகளின் பொது அதிபர் வேட்பாளருமான சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

பொன்சேகா இந்தக் கருத்தினைத் தெரிவித்த சில மணிநேரங்களுக்குள் அவர் கைதுசெய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டார்.

இராணுவ நீதிமன்றின் முன்னால் நிறுத்தப்பட்ட சரத் பொன்சேகாவிற்கு 30 மாதகாலச் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

சிறிலங்காவினைப் பொறுத்தவரையில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இன்னமும் பாதுகாப்பற்றதொரு சூழமைவிலேயே இருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையினது உயர் ஆணையராலயம் தனதறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் முறைகேட்டிற்கு உள்ளாவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
நாட்டில் ஊடக சுதந்திரம் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஏன் மகிந்த ராஜபக்சவினது அரசினை விமர்ச்சித்து பத்திகளை எழுதியிருந்த மேற்கிலிருந்து வெளிவரும் ஆங்கில சஞ்சிகையான த எக்கொணமிஸ்டினது பிரதிகள் சுங்க அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சிம்பாவேயின் மகூபேயினைப் போல மகிந்த ராஜபக்ச அதிக அதிகாரங்களைத் தன் பிடியில் வைத்திருக்கிறார். சிறிலங்காவினது பாராளுமன்றில் கடந்த செப்ரெம்பரில் கொண்டு வரப்பட்ட 18வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் பிரகாரம் குறித்த ஒருவர் இரண்டு முறைதான் அதிபராக ஆட்சியிலிருக்கலாம் என்ற நிலைமை மாற்றபபட்டிருக்கிறது.

அத்துடன் பொலிஸ்மா அதிபர், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், தேர்தல் ஆணைக்குழு மற்றும் மத்திய வங்கியின் பணியாளர்களை நியமிக்கும் விடயத்திலும் அதிபர் ராஜபக்சவிடமே அதிகாரங்கள் குவிந்திருக்கிறது.
18வது அரசியலமைப்புச் சீர்திருத்தமானது ஆட்சியதிகாரத்தின் மீதான ராஜபக்சவின் பிடியினை மேலும் அதிகரித்துவிட்டது.

அதிபர் ராஜபக்சவின் மூன்று சகோதரர்கள் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கிறார்கள். அதிக அதிகாங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் நாட்டினது பாதுகாப்புச் செயலாளராகவும் மகிந்தவின் சகோதரரே உள்ளார்.

ராஜபக்சவின் மகன் நாமல் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் அதேநேரம் அவரது குடும்ப அங்கத்தவர்கள் பலர் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கும் பொறுப்புக்களுக்கும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாட்டினது மொத்த செலவீனத்தில் 75 சதவீதமான நிதியினைச் செலவிடும் பொறுப்பு ராஜபக்ச குடும்பத்தினரிடமே இருக்கிறது.

சனநாயகம் மோசமாகிப்போயிருக்கும் சிறிலங்காவினைக் கொடுங்கோல் ஆட்சிக்கு இட்டுச்செல்லும் ஒரு முனைப்புத்தான் 18வது அரசியலமைப்புச் சீர்திருத்தம் என மனித உரிமைக் கண்காணிப்பகம் இந்தச் சட்டச் சீர்திருத்தத்தினை வர்ணித்திருந்து.

சிறிலங்காவில் உண்மையான சனநாயகம் எப்போதோ மரணித்துவிட்டது என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் மூத்த அதிகாரியாக விளங்கிய கோல்டன் வைஸ் கூறியிருக்கிறார்.

இந்தப் புறநிலையில் சிம்பாவேயினைப் புறக்கணித்த அவுஸ்ரேலியா ஏன் சிறிலங்கா கிரிக்கொட் அணியினைப் புறக்கணிக்கக்கூடாது எனக் கேட்கத் தோன்றுகிறது.

சிறிலங்காவினைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்ரேலியாவில் இன்னமும் மாறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

அண்மைய நாட்களாக சிறிலங்காவினது தமிழ் அகதிகள் அவுஸ்ரேலியா நோக்கிப் படையெடுப்பது பெரிதும் அதிகரித்துக் காணப்படுகிறது.
இவ்வாறாக அவுஸ்ரேலியாவிற்குள் நுழைய முற்படும் பெரும்பாலான தமிழர்களின் புகலிடக் கோரிக்கைகள் உண்மையானதாகவும் நேர்மையானதாகவுமே இருக்கின்றன.

அவர்கள் சிறிலங்காவில் தொடர்ந்திருக்க முனைந்தால் அரச படையினரின் பழிவாங்கல்களுக்கு ஆளாகக்கூடிய அபாயம் அதிகம் இருக்கிறது.
இவ்வாறாக அவுஸ்ரேலியாவிற்கு அகதிகள் படையெடுப்பதற்கான அடிப்படைக் காரணம் அகதிகள் தொடர்பான அவுஸ்ரேலியாவினது கொள்கையன்று. மாறாக, சிறிலங்காவில் நிலவுகின்ற பிரச்சினைகள்தான் இதற்காக காரணம்.
ஆதலினால் அவுஸ்ரேலியாவிலுள்ள அகதிகளுக்கான தடுப்பு முகாம்கள் நிரம்பி வழிவதற்கான முழுமுதற் காரணம் சிறிலங்கா அரசாங்கமேயன்றி வேறு எவரும் அல்ல.

ஆதலினால் எங்களது தேசத்தினை நோக்கி ஆயிரக்கணக்கான அகதிகள் படகுகள் மூலம் படையெடுப்பதற்கு வழிசெய்த சிறிலங்காவுடன் நாங்கள் கிரிக்கெட் விளையாட வேண்டுமா?

பர்மாவின் யுண்டா அமைப்பினரோ அன்றி ஆப்கானிஸ்தானின் தலிபான்களுடனோ நாங்கள் கிரிக்கெட் விளையாடுவோமா? ஆதலினால் சிறிலங்காவுடன் விளையாடமாட்டோம் எனக் கூறுவது ஒன்றும் தவறன்று.
சிம்பாவே அணியினை நாங்கள் எவ்வாறு புறக்கணித்தோமோ அவ்வாறே சிறிலங்கா அணியையும் நாம் புறக்கணிக்கத் துணியவேண்டும். அப்போதுதான் மனித உரிமைகளைப் பற்றிப் பிடிக்கவேண்டியதன் அவசியத்தினைச் சிறிலங்கா அரசாங்கம் விளங்கிக்கொள்ளும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தத்தினைத் திணிப்பதற்கு இதுதான் தகுந்த வழி. ஆபிரிக்காவின் குறிந்த இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக அனைத்துலக அளவில் முன்னெடுக்கப்பட்ட புறக்கணிப்புப் போராட்டங்கள்தான் அந்த ஆட்சியாளர்களை அடிபணியவைத்தமை இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது.
சிறிலங்காவினது தமிழ் சமூகத்துக்குரிய அந்தஸ்துக்கள் வழங்கப்படுவதோடு பத்திரிகையாளர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தங்களது பணியினை தங்குதடையின்றி முன்னெடுப்பதற்கு வழிசெய்யப்பட்டவேண்டுமெனில் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது காத்திரமான அழுத்தம் பிரயோகிக்கப்படவேண்டியது அவசியமாகிறது.

இந்த நிலையில் சிம்ப்பாவேக்கு எதிராக இதுபோன்ற புறக்கணிப்புப் போராட்டத்தினை முன்னெடுக்க முடியுமெனில் ஏன் சிறிலங்காவிற்கு எதிராக அதனைத் திருப்ப முடியாது?

இவ்வாறு அவுஸ்ரேலிய ABC News இணையத்தளத்தில் அவுஸ்ரேலிய தமிழ்ப் பேரவையை சேர்ந்த SAM PARI யால் எழுதப்பட்டுள்ளது.

http://www.abc.net.au/unleashed/40790.html

Comments