யார் இந்த விஜய் நம்பியார் - பர்மாவின் சனநாயகக் குரல் அமைப்பு சந்தேகம்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கி-மூனின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் தொடர்பாக, பர்மாவின் சனநாயகக் குரல் (Democratic Voice of Burma) என்ற அமைப்பு கேள்வி எழுப்பியிருக்கின்றது.

பர்மாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவராக நம்பியார் உள்ள நிலையில், இந்த சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளமை, நம்பியார் மீது பர்மாவின் சனநாயகவாதிகள் கொண்டுள்ள சந்தேகத்தின் வெளிப்பாடு எனக் கருதப்படுகின்றது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பர்மாவில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்த பின்னர், அந்த நாட்டின் படைத்துறை ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூகியை (Aung San Suu Kyi) விஜய் நம்பியார் சந்தித்திருந்த பின்னணியில் அங்குள்ள மனித உரிமை அமைப்புக்கள் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளன.

அமெரிக்காவின் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு, சுவிற்சர்லாந்தின் ஈழத்தமிழரவை ஆகியன அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கைச் சுட்டிக்காட்டும் இந்த அமைப்பு, ஈழத்தின் இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்களின் இரத்தக்கறை, நம்பியார் மீதும் படர்ந்திருப்பதை மறைமுகமாகக் கூறுகின்றது.

2009ஆம் ஆண்டு மே மாதம் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, தமிழீழ விடுதலைப் புலிகளை வெள்ளைக் கொடியுடன் சரணடையுமாறு விஜய் நம்பியார் கூறியிருந்ததாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

‘வெள்ளைக் கொடியுடன் மெதுவாக சிறீலங்கா படையினரை நோக்கி நடந்து செல்லுங்கள், படையினர் சொல்வதற்கு இணங்க செயற்படுங்கள்’ என நம்பியார் கூறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக அப்போதைய சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலர் பாலித கோஹொன நம்பியாருக்கு அனுப்பிய தகவலில், சரணடையும் விடுதலைப் புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் படையினர் மத்தியில் காணப்பட்டதாகக் கூறுகின்றது.

ஆனால் சரணடையும் விடுதலைப் புலிகளைப் படுகொலை செய்ய வேண்டாம் என களத்திலுள்ள சிறீலங்கா படையினருக்கு தகவல் தெரிவிக்க போதிய நேர அவகாசம் இருந்த போதிலும், அனைவரையும் சுட்டுக்கொல்ல சிறீலங்கா படைத்துறைச் செயலர் கொட்டாபய ராஜபக்ச உத்தரவிட்ட பின்னர், ஐ.நாவின் தகவல் தாமதமாக தமக்குக் கிடைத்திருந்ததாகப் பொய் கூறியதாகவும் மற்றொரு தகவல் உண்டு.

சரணடையும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அனைவரையும் அந்த இடத்திலேயே சுட்டுடக் கொல்லுமாறு சிறீலங்கா படைத்துறைச் செயலர் கொட்டாபய ராஜபக்ச தமக்கு நேரடியாக உத்தரவு பிறப்பித்திருந்ததாக, முன்னாள் படைத் தளபதியும், தற்பொழுது சிறையில் இருப்பவருமான தேசிய சனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா முன்னர் ஒரு செவ்வியில் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும் ஈழ மண்ணில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கி-மூனின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் மீது விசாரணை செய்யப்பட வேண்டிய தேவை இருக்கின்றது என்பதை பர்மாவின் சனநாயகக் குரல் என்ற அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

இதேவேளை, இந்திய முன்னாள் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான விஜய் நம்பியாரின் சகோதரர் சதீஸ் நம்பியார், இறுதிக்கட்டப் போரின்போது சிறீலங்கா படைகளிற்கான ஆலோசகராகக் கடமையாற்றி இருக்கின்றார்.

மறு புறத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கி-மூனின் மருமகனும் முன்னாள் இந்தியப் படை அதிகாரி என்பது மற்றொரு விடயம்.

எனவே ஐக்கிய நாடுகள் சபையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பான் கி-மூன் மற்றும் விஜய் நம்பியார் ஆகியோர் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வலியுறுத்தும் சுயாதீன பன்னாட்டு போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பார்களா அல்லது முட்டுக்கடை இடுவார்களா என்பதை நாம் பகுத்தறியலாம்.

இறுதிப் போரில் போர்க் குற்றம் புரிந்தவர்கள் என நன்கு அறியப்பட்ட சிறீலங்கா தரப்பினரை கடந்த 23ஆம் நாள் பான் கி-மூனும், விஜய் நம்பியாரும் ஏன் சந்தித்தனர். என்ன உடன்பாட்டுக்கு வந்தனர் என்ற சந்தேகம் மேலும் வலுப் பெறுகின்றது.

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் ஒரு சந்திப்பை ஐக்கிய நாடுகள் சபையும், சிறீலங்கா அரசாங்கமும் ஏன் ஒழித்து மறைத்து நடத்த வேண்டும் என்பது புரியாத பதிராக இருக்கின்றது.

ஆக மொத்தத்தில் புலம்பெயர்ந்த மக்கள் யாரையும் நம்பாது, அமெரிக்காவின் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு, சுவிற்சர்லாந்தின் ஈழத்தமிழரவை ஆகியவை போன்று, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றில் உரிய முறையில் தாமாக வழக்குகளைப் பதிவு செய்து, போர்க்குற்ற நபர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

Comments