எமது இனத்தின் விடுதலைக்கான உயிர் மூச்சை வழங்கிய ஈழத்தாயை போற்றி வணங்குவோம்

“அடிமைகளாக இருப்பது அவமானமில்லை. உரிமையாளர்களே அடிமைகளாக இருப்பதுதான் அவமானம்”- 1929 ஆம் ஆண்டு அமெரிக்க நீக்ரோக்களுக்கு காந்தி அனுப்பிய தகவல் இது. இதுதான் அமெரிக்காவின் கறுப்பர்கள் மத்தியில் காந்திக்கு நிரந்தர இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த வாசகங்கள் தற்போது யாழில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும்போது எனது நினைவுக்கு வந்தன. ஈழத்தழிழ் மக்களின் விடுதலைப்போரின் சின்னமாக திகழ்ந்த ஓரு உன்னத தலைவனை ஈன்றெடுத்த ஈழத்தின் தாயின் இழப்பை எண்ணி கண்ணீர்விடக்கூட யாழ் குடாநாட்டில் வாழும் மக்களுக்கு உரிமையில்லை.

இறைவனடி எய்திய அந்த தாய்க்கு அஞ்சலி செலுத்தும்முகமாக வடமராட்சி பகுதியில் வைக்கப்பட்டிருந்த பதாதைகளையும், கட்டப்பட்ட கறுப்புக் கொடிகளையும் அறுத்தெறிந்த சிறீலங்கா இராணுவத்தினர் மக்களையும் அச்சுறுத்திச் சென்றுள்ளனர்.

இராணுவத்தினர், சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் துணைஇராணுவக்குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி மக்கள் வீட்டைவிட்டு வெளிவரவே தயங்குகின்றனர். தீருவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அன்னையின் உடலத்தை கண்காணித்தபடி சிறீலங்கா அரச படையினரின் பல நூறு புலனாய்வுப்படையினர் சுற்றிவருகின்றனர்.

நேற்று (20) நான் மானிப்பாயில் உள்ள எனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்றை மேற்கொண்டபோது, பார்வதி அம்மா காலம்சென்ற விடயம் கூட அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அதாவது அங்கு மக்கள் செய்திகளை கூட அறியமுடியாத நிலையில் எவ்வாறான ஒரு இராணுவ அழுத்தத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம்.

எனினும் புலம்பெயர் தமிழ் சமூகம் மிகப்பெரும் எழுச்சி கண்டுள்ளது. தமிழகத்தின் தமிழ்த் தலைவர்களின் துணையுடன் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் பெருமளவில் தமது அஞ்சலிகளை செலுத்திவருகின்றனர்.

தமிழின உணர்வு கொண்ட தமிழகத்தின் அரசியல் கட்சிகளான, திரு வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், திரு சீமான் தலமையிலான நாம் தமிழர் கட்சி, வைத்தியர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி, திரு பழ நெடுமாறன் தலைமையிலான தமிழ் தேசிய அமைப்பு உட்பட பல கட்சிகள் தமது அஞ்சலிகளை தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமணவாளன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் அற்பசலுகைகளை புறக்கணித்து, தமிழர்களின் உறுதியையும், இலட்சியப் பற்றையும் பார்வதி அம்மா வெளியிட்டிருந்ததாக பழ நெடுமாறன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் உட்பட தமிழ் தேசிய விடுதலை முன்னனியின் உறுப்பினர்களான திரு எஸ். வரதராஜன், ஹரிதரன், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோர் நேற்று (20) ஈழத்தின் தாய்க்கு தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.

பார்வதி அம்மா, ஈழத்தின் ஒவ்வொரு மக்களினதும் தாய் என செல்வராஜா கஜேந்திரகுமார் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

தாயகம் சிறீலங்கா இராணுவத்தின் அடக்குமுறைக்குள் சிக்கிக்கிடந்தாலும், புலத்திலும், தமிழகத்திலும் உள்ள தமிழ் மக்கள் தொடர்ந்து தமது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர். புலம்பெயர் நாடுகளில் நடைபெறவிருந்த ஏனைய நிகழ்வுகள் நிறுத்தப்பட்டுள்ளன. புலம்பெயர் ஊடகங்களும் அன்னையின் அஞ்சலிகளை தான் வெளியிட்டுவருகின்றன.

கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, சுவிஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, நோர்வே, டென்மார்க், அவுஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள தமிழ் மக்களும், தமிழ் அமைப்புக்களும், தமிழ் மணவர் அமைப்புக்களும், இளையோர் அமைப்புக்களும், விளையாட்டு அமைப்புக்களும் ஈழத்தின் தாய்க்கான அஞ்சலிகளை முதன்மைப்படுத்தி வருகின்றன.

“இலட்சிய வேங்கைகள் இறப்பதுமில்லை” “விடுதலைப்புலிகள் வீழ்வதுமில்லை” என்ற எமது புதல்வர்களின் தாரக மந்திரத்திற்கு அமைவாக ஈழத்தமிழ் மக்களின் ஒவ்வொரு மூச்சிலும், விடுதலைப்புலிகள் வாழ்வார்கள் என்பதை உறுதிப்படுத்தி எமது ஈழத்தின் தாயை நாம் போற்றி வணங்கி விடைகொடுப்போமாக.

ஈழம் ஈ நியூஸ்.

Comments