மிக்-27 யுத்த விமானங்கள் மட்டும் 1071 தொன் எடையுள்ள குண்டுகளை வன்னியில் வீசியுள்ளன

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா வான்படை தனது நான்கில் ஒரு பங்கு வானோடிகளை இழக்க நேரிட்டது. இவ்வாறு கூறியுள்ளார் சிறிலங்கா வான்படையின் முன்னாள் தளபதியும், சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான எயர் சீவ் மார்சல் றொசான் குணதிலக. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் அவர் வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகளின் தொகுப்பு இது.

“ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் பலத்தை முறியடிக்க நாம் தயாராக இருந்ததற்கு புலிகளின் இரண்டு வானூர்திகள் தரையில் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்த ஆளில்லா வேவு விமானங்களுக்கே நன்றி கூற வேண்டும். ஆனால் அவற்றை அழிப்பதற்கு அப்போது போர் நிறுத்த உடன்பாடு தடையாக இருந்தது. 2006 ஜுலையில் மாவிலாறில் சண்டை ஆரம்பமாவதற்கு நீண்டகாலத்துக்கு முன்னரே அவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வானூர்திகளையும் அழிப்பதற்கான வழிகளை நாம் எப்போதும் தேடிக்கொண்டேயிருந்தோம்.

புலிகளுக்கு எதிரான எமது மூலோபாயத்தின் ஒரு கட்டமாக வானூர்தி எதிர்ப்பு ஆற்றலைப் பெறுவதற்கான வழிமுறைகளைப் பெற்றோம். இந்தியாவின் உதவியுடன் சிறிலங்கா வான்படை ஒரு வான்பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்கியது. அத்துடன் சில ஆயுதங்களையும், கருவிகளையும் வேறு சில நாடுகளில் இருந்தும் பெற்றோம். புலிகளின் வானூர்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக சீனத் தயாரிப்பு ஜெட் போர் வானூர்திகளை 2008ம் ஆண்டின் ஆரம்பத்தில் வாங்கினோம். இதன் மூலம் நாங்கள் புலிகளிடம் இருந்த மூன்று வேகம் குறைந்த வானூர்திகளையும் அழித்து விட்டோம்.

நான்காவது கட்ட ஈழப்போரில் ஜெட் போர் வானூர்திகளின் அணியும், எம்.ஐ 24 தாக்குதல் உலங்குவானூர்தி அணியும் 1900 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தின. இதற்காக 3000 இற்கும் அதிகமான தாக்குதல் பறப்புகளை அவை மேற்கொண்டிருந்தன. இவற்றில் பெரும்பாலானவை வன்னியில் பொதுமக்கள் நிறைந்த பகுதிகளில், சிக்கலான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகும்.

நான்காவது கட்ட ஈழப்போர் காலத்தில் சிறிலங்கா வான்படை ஒரு இலட்சம் பேரை இடம் நகர்த்தியுள்ளது. அத்துடன் 10 மில்லியன் கிலோ எடையுள்ள பொருட்களையும் சுமந்து சென்றுள்ளது. காயமுற்ற 21,000 படையினரை மீட்டுள்ளது. அரசாங்கம் பொதுமக்களைப் புறக்கணித்திருந்தால் புலிகளை எப்போதோ மண்டியிட வைத்திருக்க முடியும். ஆனால் புலிகளும் ஒரு பகுதி ஊடகங்களும் எப்போதும் சிறிலங்கா வான்படையை இலக்கு வைத்து தாக்கினர்.

கொத்தணிக் குண்டுகளை வீசுவதாகவும், பாடசாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், பாகிஸ்தானிய போர் வானோடிகளை பயன்படுத்துவதாகவும் அவர்கள் பரப்புரை செய்தனர். எமக்கு இருந்த மிகவும் முக்கியமான பிரச்சினை வானோடிகளுக்கு இருந்த பற்றாக்குறையாகும். ஒரு கட்டத்தில் 6 கிபிர் வானூர்திகளையும், 5 மிக்-27 போர் வானூர்திகளையும், 5 எவ்-7 போர் வானூர்திகளையும் செலுத்துவதற்கு 16 வானோடிகளே இருந்தனர். எம்.ஐ- 24 தாக்குதல் உலங்குவானூர்திகளை செலுத்துவதற்கு 20 வானோடிகள் மட்டுமே இருந்தனர். ஆனால் சிறிலங்கா வான்படை பின்னர் இந்தச் சவாலை எதிர்கொண்டு சமாளித்தது.

புலிகள் அதிக தூரவீச்சுக் கொண்ட வானூர்தி எதிர்ப்பு ஆயுதங்களைக் கொண்டிருந்தனர். இவற்றில் சீனாவிடம் வாங்கப்பட்ட இடம் நகர்த்தக் கூடிய வானூர்தி எதிர்ப்புப் பீரங்கிகளும், வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளும் அடங்கியிருந்தன. இவற்றின் மூலம் புலிகள் சில எம்.ஐ-24 தாக்குதல் உலங்கு வானூர்திகளை நடவடிக்கைகளின் போது தாக்கியிருந்தனர். ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட அவர்களால் வீழ்த்த முடியவில்லை. இருந்தும் சிறிலங்கா வான்படை போர் முடிந்த சில மாதங்களில் தென்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது எம்.ஐ- 24 உலங்குவானூர்தி ஒன்றை இழக்க நேரிட்டது.
போர்நிறுத்த உடன்பாடு நடைமுறையில் இருந்த போது, புலிகள் எந்தவொரு வடிவிலான எமது வான் கண்காணிப்பையும், குறிப்பாக, ஆளில்லா வேவு வானூர்திகளின் மூலமான கண்காணிப்பைக் கடுமையாக எதிர்த்தனர். ஒருமுறை இரணைமடுவில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வானூர்திகளை ஆளில்லா வேவு விமானம் கண்டறிந்தது. ஆனால் அந்த இடத்தில் குண்டுவீச போர்நிறுத்த உடன்பாடு தடையாக இருந்தது. மூன்று ஆண்டுகளுக்குள் சிறிலங்கா வான்படை வானூர்தி எதிர்ப்பு வலையமைப்பு ஒன்றை உருவாக்கியது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது சிறிலங்கா விமானப்படை மொத்தம் 38 வானோடிகளை இழந்தது. அவர்களில் பலர் கட்டளை அதிகாரிகளாக இருந்தவர்கள்.

புலிகளின் முதலாவது வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதலில் முதலாவதாகக் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான 2வது ஸ்குவாட்ரனின் கட்டளை அதிகாரி விங்கொமாண்டர் சிராந்த குணதிலகவும அவர்களில் ஒருவர். சிறிலங்கா வான்படை போர் நடந்த காலங்களில் 25 வீதமான வானோடிகளை தாக்குதல்களிலும் விபத்துகளிலும் இழந்து விட்டது.

முழுப்போரிலும் சிறிலங்கா வான்படை 62 வானூர்திகளைப் பறிகொடுத்தது. ஆனால் நான்காவது கட்ட ஈழப்போரில் வானோடிகளுக்கும் வானூர்திகளுக்கும் ஏற்பட்ட இழப்பு குறைவானதே. போர் நடந்த காலப்பகுதிகளில் சிறிலங்கா வான்படைக்கு 1995-96 காலப்பகுதி மிகவும் மோசமானது. இந்தக்காலத்தில் வான்படை ஏ.என்-32 உள்ளிட்ட பல விமானங்களை இழந்தது.

நான்காவது கட்ட ஈழப்போரில் வான்படை மிகமுக்கிய பங்கு வகித்தது.

சிறிலங்கா கடற்படையினர் கூட வான்படையின் உதவிகளைக் கோரினார். சிறிலங்கா வான்படையின் கைகளால் கடற்புலிகள் அதிக அழிவுகளை சந்தித்தனர். ஜெட் போர்வானூர்திகளின் அணிகளும், எம்.ஐ- 24 தாக்குதல் உலங்குவானூர்தி அணியும் கடற்புலிகளின் 52 படகுகளை தாக்கியழித்தன.

அத்துடன் பயிற்சி முகாம்கள் மீது 425 இடங்களில் தாக்குதல்களை நடத்தின. 32 ஆட்டிலறி நிலைகள் தாக்கப்பட்டன. ஈழப்போரின் நான்காவது கட்டத்தில் மிக்-27 வானூர்திகளின் அணி புலிகளின் 700 இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியது.

போரின் முழுக்காலத்திலும் சிறிலங்கா விமானப்படை 38 வானோடிகளையும், 430 அதிகாரிகள் மற்றும் படையினரையும் இழந்துள்ளது. 350 பேர் வரை காயமடைந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் நீண்டதூரம் சென்று தாக்குதல்களில் ஈடுபட்ட ஆழ ஊடுருவித் தாக்கும் இராணுவ அணிகளை, பலமுறை சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்திகளே மீட்டு வந்தன.

கட்டுநாயக்கவை தளமாக கொண்டு இயங்கும் 12வது ஸ்குவாட்ரனில் மிக்-27 ரகத்தைச் சேர்ந்த 7 போர் வானூர்திகளும் மிக்-23 ரகத்தைச் சேர்ந்த பயிற்சி வானூர்தி ஒன்றும் உள்ளன. இவை 2000, 2007 என இரண்டு காலகட்டங்களில் வாங்கப்பட்டன. இந்த வானூர்திகளின் அணி 854 தடவைகள் பறந்து சென்று தாக்குதல்களை நடத்தின.

நான்காவது கட்ட ஈழப்போரில் மிக்-27 வானூர்திகள் மட்டும் 1071 தொன் எடையுள்ள குண்டுகளை வீசியுள்ளன. [ஒரு தொன் என்பது 10,000 கிலோவுக்கு சமமானது]

சிறிலங்கா வான்படை கட்டடங்கள் போன்ற இலக்குகள் மீது பொதுப் பயன்பாட்டு குண்டுகளையே வீசியது. அதேவேளை, வானூர்தி ஓடுபாதைகள், மற்றும் பதுங்குகுழிகள் மீது சிறப்புக் குண்டுகள், குறிப்பாக ஆழ ஊடுருவும் குண்டுகள் வீசப்பட்டன. ஓடு பாதைகளை இலக்கு வைப்பதற்கு 1000 கி.மீ வேகத்தில் மிக்-27 வானூர்திகள் தரையில் இருந்து 100 மீற்றர் வரை தாழப் பறந்தே குண்டுகளை வீசின.

தாழப் பறக்கும் வானூர்தியின் மீது குண்டுச் சிதறல்கள் தாக்கி விடாமல் இருப்பதற்காக ஒவ்வொரு குண்டுடனும் பரசூட் இணைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது. சிறிலங்கா வான்படை புலிகளின் தலைவர் பிரபாகரனை இலக்கு வைத்து பல இடங்களில் தாக்குதல் மேற்கொண்டது.

ஒருமுறை ஐந்து மிக்-27 வானூர்திகளும், நான்கு கிபிர் வானூர்திகளும், மூன்று எவ்-7 வானூர்திகளுமாக மொத்தம் 12 ஜெட் வானூர்திகளைக் கொண்ட ஸ்குவாட்ரன் வன்னியில் பிரபாகரனை இலக்கு வைத்து இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தின. ஏழு ஜெட் வானூர்திகள் ஜெயந்திநகரிலும், மீதமுள்ள ஐந்து வானூர்திகள் புதுக்குடியிருப்பிலும் தாக்குதல் நடத்தின.

சிறிலங்கா வான்படை புலிகளுக்கு எதிரான போரின் போது பாகிஸ்தான், இந்தியா, சீனா, ரஸ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் உதவிகளைப் பெற்றது.

போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் முக்கிய தளபதிகளை மீட்க கடற்புலிகள் முயற்சிக்கலாம் என்பதால்- அதைத் தடுக்க சீனன்குடாவில் இரண்டு மிக்-27 வானூர்திகள் மூன்று வாரங்களாக நிறுத்தப்பட்டிருந்தன. சிறிலங்கா வான்படை முதல் முறையாக இத்தாலியில் இருந்து ‘சியாமாசெற்றி‘ குண்டுவீச்சு வானூர்திகளை 1985ல் வாங்கியது. இவை 50 கிலோ எடையுள்ள இரண்டு குண்டுகளை மாத்திரம் காவிச் செல்லக் கூடியவை.

பின்னர் 1993ல் ஆர்ஜென்ரீனாவிடம் வாங்கப்பட்ட ‘புக்காரா‘ வானூர்திகள் இணைத்துக் கொள்ளப்பட்டன. ஆனால் புலிகள் வெப்பத்தை நாடிச் சென்று தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர், 1995ல் அவற்றை நாம் கைவிட நேர்ந்தது. இதன்பின்னர் 1996ல் இஸ்ரேலிடம் இருந்து கிபிர் வானூர்திகள் வாங்கப்பட்டன.

புலிகளுக்கு எதிரான போரில் கிபிர் வானூர்திகளின் பங்கு அளப்பரியது. கணினி மூலம் குண்டு வீசும் வசதிகளை அது கொண்டிருந்தது. சிறிலங்கா வான்படை 1991ல் நான்கு எவ்-7 வானூர்திகளை சீனாவிடம் இருந்து வாங்கியது. 2008 ஜனவரியில் மேலும் நான்கு எவ்-7 வானூர்திகள் வாங்கப்பட்டன.

இவற்றில் பெரும்பாலானவை இப்போது வான் இடைமறிப்பு ரேடர்கள் பொருத்தப்பட்ட முக்கிய போர் வானூர்திகளாக உள்ளன. இவற்றில் நான்கு வெப்ப ஈர்ப்பு ஏவுகணைகளைப் பொருத்தும் வசதிகள் உள்ளன. சிறிலங்கா வான்படையில் உள்ள ஏனைய ஜெட் வானூர்திகளில் அந்த வசதிகள் கிடையாது. புலிகளின் வான்படையை முறியடிக்கவே 5வது இலக்க ஜெட் ஸ்குவாட்ரன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வானூர்தி அணி எட்டு எவ்-7 வானூர்திகளைக் கொண்டுள்ளது.

நான்காவது கட்ட ஈழப்போரில் இந்த வானூர்திகள் 400 தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. எவ்-7 வானூர்திகளைப் பெறுவதற்கு முன்னர் வான்புலிகள் ஐந்து தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். விங்கொமாண்டர் சம்பத் விக்கிரமரத்ன தலைமையிலான 5வது இலக்க வானூர்தி அணி, புலிகளின் முதலாவது வானூர்தியை இரணைப்பாலையில் சுட்டுவீழ்த்தியது. வவுனியாவில் தாக்குதல் நடத்தி விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது வெப்ப ஈர்ப்பு ஏவுகணை மூலம் அது சுட்டு வீழ்த்தப்பட்டது. போரின் முடிவில் 5வது இலக்க வானூர்தி அணியின் ஒரு பகுதி சீனக்குடாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இப்போது சிறிலங்கா வான்படை 30,000க்கும் அதிகமான படையினரைக் கொண்ட பலமானதொரு படையாக உள்ளது. சிறிலங்கா வான்படையே அதன் அத்தனை தளங்கள், பிரிவுகளினதும் பாதுகாப்புக்கும் பொறுப்பாக உள்ளது. 9வது இலக்க வானூர்தி அணியில உள்ள எம்.ஐ 24 தாக்குதல் உலங்குவானுர்திகள் கூட புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்துள்ளன. நான்காவது கட்ட ஈழப்போரில் வடக்கு,கிழக்குப் பகுதிகளில் அவை 400 இற்கும் அதிகமான தாக்குதல்களை நடத்தின.

படையினருக்கு மிகவும் நெருக்கமாக உள்ள புலிகளின் முன்னரங்க நிலைகள் மிதான தாக்குதல்களுக்கு இவை அதிகம் பயன்பட்டன. இத்தகைய சந்தர்ப்பங்களில், சில வேளைகளில் புலிகளின் தாக்குதலுக்குள்ளாகிய உலங்குவானூர்திகள் அந்த இடங்களிலேயே தரையிறக்கபட்டன. சண்டைகள் நடந்து கொண்டிருக்கும் போதே அவை திருத்தப்பட்டு தளங்களுக்குக் கொண்டு வரப்பட்டன. இந்த அணி இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணிகளை நான்கு தடவைகள் மீட்டு வந்தது.

ஆழ ஊடுருவும் அணிகள் புலிகளின் உயரமட்ட இலக்குகளைக் குறிவைத்து புலிகளின் பிரதேசங்களுக்குள் ஊடுருவின. புலிகளைத் தோற்கடிக்கும் சரத் பொன்சேகாவின் ஒட்டுமொத்த தந்திரோபாயத்துக்கமைவாகவே ஆழ ஊடுருவும் அணிகள் களமிறக்கப்பட்டிருந்தன. உக்ரேனிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்ட மூன்று எம்.ஐ- 24 தாக்குதல் உலங்குவானூர்திகளுடன் 1995 நவம்பரில் உருவாக்கப்பட்ட 9வது இலக்க வானூர்தி அணி இப்போது 14 உலங்குவானூர்திகளைக் கொண்ட அணியாக உள்ளது.

நான்காவது கட்ட ஈழப்போரில் இந்த அணி 80 மி.மீ ரகத்தைச் சேர்ந்த 19,760 ஏவுகணகளை வீசத் தாக்கியது. இவை 250 கிலோ எடையுள்ள குண்டுகளையும் வீசின. 23மி.மீ, 30 மி.மீ. 12.7 மி.மீ கனரகத் துப்பாக்கிகள் மூலமும் தாக்குதல்களை நடத்தின. கடற்புலிகளுக்கு இந்த அணி அதிக சேதங்களை ஏற்படுத்தியது. 3 கி.மீ தொலைவீச்சுக் கொண்ட 80 மி.மீ ஏவுகணைகள் புலிகளுக்கு அதிக சேதங்களை ஏற்படுத்தின.

வான்புலிகளை முறியடிக்கும் நோக்கில் வான்படை இலக்கம்- 32 வான்பாதுகாப்புப் பிரிவு 2006ல் உருவாக்கப்பட்டது. வானூர்திகளைக் கண்டறியும் இந்தியாவின் ரேடர்களுடன் இணைந்த பீரங்கிகளை இது பயன்படுத்தியது. அத்துடன் சீனாவிடம் முப்பரிமாண ரேடர் வாங்கப்பட்டதும் இதன் பலம் அதிகமானது. இவை விமான எதிர்ப்பு ஏவுகணைகளை விட அதிகம் விலை கொண்டவை. விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஒருமுறை சுட்டால் மீளவும் சுட முடியாது. ஆனால் இவை தொடர்ச்சியாகப் பயன்படக் கூடியவை" என்று தெரிவித்தார்.

*தொகுப்பும் மொழியாக்கமும் கார்வண்ணன்.

Comments