காங்கிரசை 63 தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும் - தமிழருவி மணியன்


வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தமிழக மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று காந்திய அர‌சிய‌ல் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

எழுத்தாளர் சாவித்திரி கண்ணன் எழுதிய 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு முதல் பிரதியை வெளியிட, தமிழருவி மணியன் அதனைப் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் தமிழருவி மணியன் பேசியதாவது:

ஜெர்மனி நாட்டை ஐக்கியப்படுத்தி இரும்பு மனிதன் பிஸ்மார்க் போர் வியூகம் வகுக்கையில், எதிரிகளை வெவ்வேறு திசையில் எதிர்கொள்ளக்கூடாது, அவர்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைய வைத்து தோற்கடிக்க வேண்டும் என்று கூறுவான். இன்றைக்கு நாம் எதிர்பார்த்த சூழல் உருவாகி உள்ளது. தமிழக மக்கள் இதைப் பயன்படுத்தி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அப்போதைய காங்கிரஸ் கட்சிக்கும், இப்போதுள்ள காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தமே இல்லை. இப்போது இருப்பது ஒரு லிமிடெட் கம்பெனி. இதன் தலைமையிடம் டெல்லியில் உள்ளது. காந்தி, பட்டேல், அபுல்கலாம் ஆசாத் போன்ற பெரிய தலைவர்கள் காமராஜர் மூலமாக சொல்லிய கருத்துக்குக்கூட ஆட்படாமல் தன் மனசாட்சிப்படி அந்தக்கால காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முடிவுகளை எடுத்தனர்.

இப்போது இருப்பவர்கள் சோனியாவில் விரல் அசைவுக்கு கட்டுப்படுபவர்கள். இவர்களுக்கு முல்லைப் பெரியாறு பற்றியோ, காவிரி பிரச்சனை குறித்தோ, ஈழத்தமிழர்கள் படும் இன்னல்கள் பற்றியோ அக்கறை இல்லை. சமீபத்தில் சட்டமன்றத்துக்குப் போன காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர் புதிய கோடீஸ்வரர்கள் ஆனார்கள் என்பதை நான் அறிவேன். தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கவேண்டும். இந்த நல்லச் செய்தி என் செவிக்கு வம் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று பேசினார்.

Comments