63 தொகுதிகளில் சீறும் சீமான்! கை சின்னத்தில் மட்டும் வாக்களிக்காதீங்க



காங்கிரஸுக்கு இது போதாத காலம். ஏறக்குறைய, அந்தக் கட்சி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, அதிருப்தி வேட்பாளர்கள் கோதாவில் குதித்துள்ளனர். இன்னொரு பக்கம், சீமானின் ‘நாம் தமிழர்’ கட்சி, ‘காங்கிரஸை வேரறுப்போம்!’ என்ற கோஷத்துடன் களம் இறங்கி இருப்பதால், வெலவெலத்து நிற்கிறார்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள்.

ஈழ மக்களின் நலனுக்கு எதிராக மத்தியில் ஆளும் காங்கிரஸ் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டும் தமிழ் அமைப்புகள், காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதி​களிலும் எதிர்ப் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தன. அதையடுத்து, ‘நாம் தமிழர்’ கட்சி, பல்வேறு தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்துக் கச்சை கட்டி நிற்கிறது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிய சீமானின் பேச்சில் ரௌத்ரம் தாண்டவமாடியது!

”இந்தத் தேர்தல், தமிழ்த் தேசிய இனத்தின் துரோகியான காங்கிரஸுக்கும் ‘நாம் தமிழர்’ இயக்கத்துக்கும் இடையே நடக்கும் அரசியல் யுத்தம். ‘இதில் நாங்கள் வெற்றி பெற வேண்டும்’ என்று உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் அனைத்துத் தொப்புள்கொடி உறவுகளும் வாழ்த்துகின்றன. அதனால்தான், ‘வெள்ளையனே வெளியேறு’ என்று வீர முழக்கமிட்டு, இந்தியச் சுதந்திரத்துக்கு முதல் குரல் கொடுத்த நெல்லை மண்ணில் இருந்து… பூலித்தேவன் மண்ணில் இருந்து காங்கிரஸை வேரறுக்கும் இந்த அரசியல் யுத்தத்தைத் தொடங்கி இருக்கிறோம். திசையன்விளையில் தொடங்கப்பட்டு இருக்கும் இந்தத் ‘தொடக்கம்’… காங்கிரஸுக்கு ‘அடக்கம்’!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid-k1t3o33Hz9cKY6ZJj2o0eIn1I8jodhyN5-dU8BJ9jRczPxQWFFrDECnd2Z4X2sDi-AsyQcrKPlHhbZGZBEBLDMx170AY-tOSXI7MrEjmb5IvNkvyyBiJFuR3sW5gdhMCeMZK8PlGUSm/s1600/p44.jpg
சொந்தக் கட்சிக்காரர்களே காங்கிரஸை வீழ்த்தத் துடிக்கிறார்கள். ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்​கோவன், ப.சிதம்பரம், அவர் செல்ல மகன் கார்த்தி என்று பல கோஷ்டிகளாகப் பிரிந்து, ஒருவருக்கு ஒருவர் குழி பறிக்கிறார்கள். அதனால், இந்த முறை எங்களுக்கு அதிக வேலை இல்லை. நாங்கள் சுற்றுலா செல்வதுபோல சும்மா அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று வந்தாலே போதும்… மீதியை அவர்களாகவே முடித்துக்கொள்வார்கள். காங்கிர​ஸின் தோல்விதான் ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் வெற்றி!

இப்போது இருக்கும் காங்கிரஸுக்கும், காமராஜருக்கும் ஒரு சொட்டுகூட தொடர்பு இல்லை. காமராஜர் இறந்ததுமே காங்கிரஸும் செத்துவிட்டது. மக்களுக்காக காங்கிரஸ் கட்சி என்றைக்காவது வீதிக்கு வந்து போராடி இருக்கிறதா? இப்போது இருக்கும் காங்கிரஸ், பிழைப்புவாதிகளின் கூடாரம்!


தமிழக மீனவர்கள் 539 பேர் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டார்களே… அதனைக் கண்டித்து அந்தக் கட்சி ஓர் அறிக்கைவிட்டதா? பி.ஜே.பி-யின் சுஷ்மா சுவராஜ்கூட ஓடி வந்து பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் சொன்னாரே! காங்கிரஸ் சார்பில் சோனியா, ராகுல்கூட வர வேண்டாம்… ஆனால், இங்கே இருக்கும் எந்த காங்கிரஸ் தலைவராவது அந்த மீனவக் குடும்பத்தினரை சந்தித்து எட்டணா தந்திருக்கிறீர்களா?!

காவிரியில் எங்களுக்கு உள்ள உரிமைக்காக வாதாடி இருக்கிறீர்களா? கேரள அரசாங்கம் முல்லை பெரியாறில் எங்களுக்கு உரிய பங்கைத் தராமல் இருப்பதைக் கேள்வி கேட்டு இருக்கிறீர்களா? எங்களது உரிமையைக் கேட்டு வாங்கித் தர முன்வராத உங்களுக்கு, எங்களுடைய ஓட்டு மட்டும் வேண்டுமா? என் வாழ்க்கை முக்கியம் இல்லை… ஆனால், என் வாக்கு மட்டும் உங்களுக்குத் தேவை என்பது என்ன நியாயம்? அட்டைப் பூச்சியாக எங்களுடைய ரத்தத்தையும் வேர்வையையும் உறிஞ்சி வாழும் காங்கிரஸை விரட்டி அடிப்பதுதான் நமது முதல் வேலை.

தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்துத் தமிழர்களை மானம் இல்லாத கேவலமான சமூகமாக்கிவிட்டார்கள்! நாட்டில் எங்கும் ஊழல்… விலைவாசி விண்ணை முட்டுகிறது. மின்சாரமே இல்லை… ஆனால் கிரைண்டர், மிக்ஸி, டி.வி., லேப்டாப் தருகிறார்களாம்! ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்டது. ஈழ மண்ணில் நடந்த யுத்தத்துக்குப் பழிக்குப் பழி தீர்க்கும் அரிய வாய்ப்பு, உன்னத சந்தர்ப்பம் இது!

நாம் பட்ட வலிக்குப் பழிதீர்க்கும் வகையில், ‘கை’ சின்னத்தைப் பார்த்தால் காறித் துப்பித் தோற்கடியுங்கள். தமிழர் ரத்தத்தில் மூழ்கியுள்ள அந்தக் கட்சியைக் கொன்று ஒழிக்காமல், தமிழர் விடுதலையை வென்று எடுக்க முடியாது!”

நன்றி

ஜூனியர் விகடன்

Comments