உலுக்கும் பார்வதி அம்மாள் கேள்வி

''எங்கள் 'மா தந்தை’ வேலுப்பிள்ளை இறந்து ஓராண்டுதான் ஆகிறது. இதோ, 'மா தாயார்’ பார்வதியும் போய்விட்டா​ரே!'' என உலகம் முழுதும் துயரத்தைப் பகிர்ந்து​கொள்​கிறார்கள் தமிழ் இன உணர்​வாளர்கள்!

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், கடந்த 20-ம் தேதி இயற்கை அடைந்துவிட்டார். 80 வயதான அவர், கடைசி காலத்தில் பட்டபாடு

கொஞ்ச​நஞ்சம் அல்ல. மருத்துவ சிகிச்சைக்காகக் கடந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி, மலேசியாவுக்கு அனுப்பப்​பட்டார். கனடாவில் வசிக்கும் மகள் வினோதினி, உடன் இருந்து தாயைக் கவனித்துக்​கொண்டார். பிறகு, மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் முறையாக விசா பெற்று, சிகிச்சைக்காக தமிழ்​நாட்டுக்​குக் கொண்டுவரப்பட்டார். ஆனால், அவரை விமானத்தைவிட்டு இறங்கவிடாமல், கடந்த ஏப்ரல் 16-ம் தேதி இரவு, பல மணி நேரம் விமானத்​திலேயே வைத்திருந்தார்கள். மறுநாள் விடியும் வேளை, அவரை அப்படியே திருப்பி​விட்டனர். மலேசியாவில் தொடர்ந்து தங்க முடியாமல், வேறு வழியின்றி இலங்கைக்கே திரும்பி அழைத்துச் செல்லப்பட்டார்.

மறைந்த மூத்த வழக்கறிஞர் கருப்பன் இதை நீதிமன்றத்துக்கு எடுத்துப்போக... இறங்கி வந்தன மத்திய, மாநில அரசுகள். ஆனாலும், ''பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சைக்கு வரலாம். மகள் வீட்டில் தங்கலாம். உறவினர்களைத் தவிர எந்த அரசியல் அமைப்பினரும் அவரைச் சந்திக்கக் கூடாது!'' என நிபந்தனை போட்டது.

'ஒரு கைதியைப்போல அம்மாவுக்கு மருத்துவச் சிகிச்சையா?’ என மான உணர்வு பொங்க மறுத்துவிட்டனர் பிரபாகரனின் உடன்பிறந்தவர்கள். அதனால், பிரபாகரனின் சொந்த ஊர்க்காரரான யாழ்ப்பாண முன்னாள் எம்.பி-யான சிவாஜிலிங்கம், பார்வதி அம்மாளின் பராமரிப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ஒன்றரை ஆண்டுகளாக சொந்த ஊரான வல்வெட்டித்​துறை மாவட்ட மருத்துவமனையில், டாக்டர் மயிலேறும் பெருமாள் ஒரு குழந்தையைக் கவனிப்பதுபோல பார்வதி அம்மாளைக் கவனித்தார்.

அவ்வப்போது டென்மார்க்கில் இருந்து மூத்த மகன் மனோகரனும், இரண்டு நாளுக்கு ஒரு முறை கனடாவில் இருந்து மகள் வினோதினியும் அம்மாவிடம் தொலை​பேசியில் பேசுவார்கள். எத்தனை முறை தொலைபேசியில் பேசினாலும், பிள்ளைகளை நேரில் பார்க்க முடியாமல் துடித்தார் அந்தத் தாய். இந்தக் கவலையால் அவரின் மனதும் உடம்பும் இயங்க மறுத்தன.

படுக்கையிலேயே காலம் தள்ளும் கஷ்டத்தில், படுக்கைப் புண்ணும் வந்து சேர, தலையில் கட்டுப் போடப்​பட்டது. புண் ஆறியும், சில வாரங்களாக அவருக்கு குழாய் மூலமே திரவ உணவு செலுத்தப்பட்டது. கடந்த வாரத்தின் கடைசியில் அவரது உடல், இறுதி ஓய்வுக்கு முந்தைய அமைதிக்கு வந்தது. கடந்த 18, 19 தேதிகளில் உறக்க நிலையிலேயே இருந்தார். 20-ம் தேதி காலை 6.20 மணிக்கு வழக்க​மான பரிசோதனைக்குச் சென்றபோது, அவர் இறந்திருந்ததை டாக்டர் மயிலேறும் பெருமாள் அறிந்தார். 'அம்மா’வைப் பராமரிக்கும் அந்த மருத்துவருக்கே ரத்த அழுத்தம் 200-க்கும் மேல் எகிற... அவரே அவசர சிகிச்சை எடுக்க​​வேண்டிய நிலையிலும், நாம் தொடர்பு​கொண்டவுடன், விவரங்​களைச் சொன்னார்.

''ஞாயிறு காலை தாதிமார், 'அம்மாவுக்குப் பேச்சுமூச்சேஇல்லை’ என என்னிடம் ஓடி வந்தார். பரிசோ​தித்த​​போது பார்வதிஅம்மாள் உயிர்பிரிந்திருந்தது. இது இயற்​கை மரணம்தான். இருந்தும், இதை ஓர் ஆண்டோ, இரண்டு ஆண்டு​களோ தள்ளிப்​போட்டிருக்​கலாம். சொந்த ஊரில் சொந்தங்​கள் சூழ இருந்த​போதும், புத்திரசோகத்​தால்தான் அவர் இறந்துவிட்டார்!'' என்றார் டாக்டர்.

முன்னாள் எம்.பி-யான சிவாஜி​லிங்கம், ''இறப்புக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அம்மாவைப் பார்த்துவிட்டு வந்தேன். என் பெயரைச் சொல்லி 'வந்திருக்கிறேன்’ என்றதும் அழுதார். வேறு வேலைகளால் மறுநாள் அங்கு செல்ல வெகுநேரம் ஆகிவிட்டது. மருத்துவமனைக்குச் சென்றும் அம்மா தூங்கிவிட்டதால் திரும்பிவிட்டேன். காலையில் அவர் இறப்புச் செய்தியைக் கேட்டதும் என்னால் தாங்க முடியவில்லை...'' என்றார் சோகத்துடன்.

பார்வதி அம்மாளின் மரணச் செய்தி தெரிந்ததும் சிங்களப் போலீஸாரும், ராணுவத்தினரும் ஏராளமாக அங்கு குவிக்கப்பட்டனர். அவர்களின் வருகை, அஞ்சலி செலுத்த வந்த மக்களை அச்சுறுத்தியது. ஞாயிறு மாலை தீருவில் மைதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட பார்வதி அம்மாளின் உடல், பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கும் சிங்களப் படை​யின் அட்டகாசம்... மருத்துவமனையின் முன்பு சீரு​டையில் இருந்தவர்கள், தீருவில் மைதானத்தில் சாதா உடையில் சுற்றித் திரிந்தார்கள். அடக்க முடியாத மனவெழுச்சியில் சிக்கிய மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்த முடியாதபடி அதிக கெடு​பிடிகள்... கடைசியில் திங்கள்கிழமை வரை ஒருவர் ஒருவராகத்தான் அஞ்சலி செலுத்தினர். பிரபாகரனைப் பெற்றெடுத்த காரணத்தால், சொந்த மக்களின் அஞ்சலியைக்கூட பெற்றுக்கொள்ள முடியாதபடி இன வெறிக் கொடுமைக்கு ஆளானது பார்வதி அம்மாளின் சடலமும்!

பார்வதி அம்மாள் கேட்ட ஒரு கேள்வி மட்டும் இன்னும் தொக்கி நிற்கிறது. ''கலைஞர் அய்யா, ஏன் என்னைத் திருப்பி அனுப்பினார்?'' - பார்வதி அம்மாளின் இந்தக் கேள்வி மட்டும் உரிய விடை தேடி உலுக்கிக்கொண்டே அலைகிறது... உயிரோடு!

- இரா.தமிழ்க்கனல்

Comments