காந்தியும் பிரபாகரனும் பேசினால்..? விரைவில் வெள்ளித் திரைக்கு

ஹிம்சா மூர்த்தியான மகாத்மாவை​யும், ஆயுதம் தாங்கிய ;பிரபாகர​னையும் கதாபாத்திரங்​களாகச் சித்திரித்து 'முதல்வர் மகாத்மா’ என்கிற திரைப்படத்தை இயக்குநர் பாலகிருஷ்ணன் எடுத்து முடிக்க... இந்தப் படத்துக்கு மட்டும் தடை வராமல் இருக்குமா என்ன? இயக்குநரிடமே பேசினோம். ஏற்கெனவே 'காமராஜ்’ படத்தை எடுத்தவர் இவர்!

''மகாத்மா காந்தி மீண்டும் பிறந்து வந்தால் என்ன நடக்கும்? என்பதுதான் படத்தின் கரு! வசதிமிக்க திவான் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்கூட கோவணம் கட்டி அஹிம்சை பேசியவர் காந்தி. ஆனால், இன்றைய அரசியல்? பிறந்த நாளைக்கு 500 கோடியில் மாலை போடுவது, நாடெல்லாம் சிலைவைப்பது என முதல்வர் மாயாவதியின் உ.பி. அரசியலையும் படத்தில் காட்சிகளாக வைத்தேன். 'இது நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்னை. இந்தக் காட்சிகள் வரக் கூடாது!’ என்றனர்.

அஹிம்சாவாதியாக இருந்த மகாத்மாவும், இன்னொரு துருவமாக இருக்கும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவதுபோல் காட்சி வருகிறது. 'இது தடை செய்யப்பட்ட இயக்கம்...’ என்று கண்டிப்புக் காட்டினர். உடனே, 'நடப்புச் சம்பவங்களை வரிசையாகக் கோத்து திரைக்​கதை அமைக்கப்பட்ட படத்தில், உலகறிய நடக்கிற ஈழப் போராட்​டப் பகுதியை மட்டும் எப்படிச் சொல்லாமல் விட முடியும்? அதுவும் அல்லாமல், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவான வசனங்களை நான் படத்தில் சேர்த்திருந்தால்தானே நீங்கள் தடை செய்ய வேண்டும்? எந்த இடத்திலும் அப்படி ஒரு வார்த்தையைக்கூட நான் சேர்க்கவில்லையே’ என்று தெளிவாகச் சொன்னேன்.

ஆனாலும், 'இந்தக் காட்சிகளை அனுமதிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்று சொல்லி படத்தை அட்வைஸரி கமிட்டிக்கு அனுப்பினர். செக்ஸ், வன்முறை என்று எதையுமே வலிந்து திணித்தால்தான், அதை சென்சார் போர்டு ஆட்சேபிக்கும். ஆனால், 'முதல்வர் மகாத்மா’ படத்தின் கதையோடு கூடிய இந்தக் காட்சியின் நியாயத்தைப் புரிந்துகொண்ட அட்வைஸரி கமிட்டி, படத்துக்கு எந்தவித மறுப்பும் இன்றி தணிக்கைச் சான்றிதழ் கொடுத்துவிட்டது. விரைவில் வெள்ளித் திரைக்கு வருகிறார் 'முதல்வர் மகாத்மா’!'' - போராடி ஜெயித்த உற்சாகத்​தோடு சொன்னார் பால​கிருஷ்ணன்!

காந்தியும் பிரபாகரனும் என்ன பேசுகிறார்கள் என்பதைத் திரையில் பார்ப்போம்!

- த.கதிரவன்

Comments