பாரீஸ் உச்சி மாநாடும் கிறீத்துவின் கடைசி இராப்போசனம் போல வரலாற்று முக்கியமான நிகழ்வாகும்.
சென்ற வாரம் பிரான்சிய அதிபர் ஸார்கோசி உலகத்தின் முக்கிய தலைவர்களை அழைத்து நடாத்திய உச்சி மாநாடும் அவர் வழங்கிய இராப்போசனமும் கிறீத்துவின் கடைசி இராப்போசனம் போல வரலாற்று முக்கியமான நிகழ்வாகும்.
இன்றைய உலகத்தை நிர்வாகிக்கும் அதி உச்ச அதிகாரம் கொண்ட தலைவர்களின் சந்திப்பு அது. பிரான்சிய அதிபர் தலைமையில் கிலரி கிளிண்டன், பிரிட்டன் பிரதமர், அஞ்சலா மேர்க்கல், பலர்ஸ்க்கோனி, அரபுலீக் தலைவர், நேட்டோ செயலர், ஐரோப்பிய ஒன்றிய தலைவர், ஐ.நா செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆபிரிக்க யூனியன் கலந்து கொள்ளவில்லை. ரஸ்யா, இந்தியா நாடுகளைக் காண முடியவில்லை. இன்றைய உலகத்தின் இறுதி அதிகாரம் யாருடைய கையில் என்பதை இந்தச் சந்திப்பு விளக்கியது. இது உலகத்தை மாற்றிப்போடப்போகும் முக்கிய நிகழ்வு. இதோ அங்கு நாம் அவதானித்த முக்கிய ஏழு மாற்றங்கள்…
உலகத்தின் முக்கிய மாற்றம் இல : 1
ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் சீனா, ரஸ்யா இரு நாடுகளும் வீட்டோவை பாவிக்க முடியாமல் செய்து, இந்தியா எதிர்த்தாலும் அதை ஒரு பொருட்டாகக் கருதாது, பாதுகாப்பு சபையின் அறுதிப் பெரும்பான்மையை இவர்கள் பெற்றது வரலாற்றுப் புகழ்மிக்க சாதனையாகும்.
இதை அடிப்படையாக வைத்து பாரீசில் கூடிய தலைவர்களை எந்த நாடும் எதிர்க்கவில்லை. எதிர்த்தால் உலகப்பந்தில் அவர்களுக்கும் கடாபிக்கு நேர்ந்த அவலமே நேரும் என்பதை அறிந்து, சகல நாடுகளும் வாய் மூடி மௌனியாக இருந்துவிட்டன. இப்போது லிபியா எரிந்து கொண்டிருக்கிறது. தீயவர்கள் தமது தவணை எப்போதென்று தெரியாமல் வாய் பொத்திக் கொண்டிருக்கிறார்கள்.
உலகத்தின் முக்கிய மாற்றம் இல : 2
கடந்த 2001 செப் 11 ல் ஆரம்பித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு அமெரிக்காவே தலைமை தாங்கியது. இப்போது அந்தத் தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் உலகப் பெரு மாற்றங்களுக்கான போர்களும், முடிவுகளும், பிரான்ஸ் தலைமையிலேயே நடைபெறப் போகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்ட நாடுகளின் ஒழுங்கில் பாரிய தவறு இருக்கிறது, அது மாற்றமடையப் போகிறது. ஆகவே புதிய எழுச்சி பிரான்சில்; இருந்து ஆரம்பிக்கிறது. அமெரிக்கா முழு ஆதரவுடனும் பின்னால் நிற்கப் போகிறது. ஆகவே இதுவரை இருந்த முக்கிய தடைகள் பல இடித்து தகர்க்கப்படப் போகின்றன. 1789 ல் பிரான்சில் பஸ்ரல் கோட்டை உடைந்தது போல உழுத்துப்போன பல நாடுகள் உடையப்போகின்றன.
உலகத்தின் முக்கிய மாற்றம் இல : 3
ஐ.நா அனுமதிக்காவிட்டாலும் அதற்காக காத்திருக்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டை மேலைத்தேய தலைவர்கள் தெளிவாக எடுத்திருக்கிறார்கள். வீட்டோ அதிகாரத்தை யாராவது பாவித்தால் அது வெறும் காகித ஏடாகவிடும் என்ற எச்சரிக்கை ஐ.நாவில் விடப்பட்டுவிட்டது. உதாரணம் : இனியும் ஐ.நாவில் நாம் அங்கத்தவராக இருக்க வேண்டியதில்லை என்று டேனிஸ் பாராளுமன்றில் கேட்ட குரல். ஐ.நாவுக்காக காத்திருக்காமல் உடனடியாக களம் இறங்குகிறோம் என்று டேனிஸ் அரசு அறிவித்தமை. இனி பான் கீ மூனுக்கு விளங்கும்வரை உலகம் காத்திருக்காது.
உலகத்தின் முக்கிய மாற்றம் இல : 4
இந்தப் போரில் நேட்டோ தன்னை முன்னிறுத்திக் கொள்ளவில்லை. நேட்டோவில் முள்ளுப்போட துருக்கி போன்ற பல நாடுகள் உண்டு. ஆகவே நேட்டோ என்ற போர்வையில் ஏராளம் நாடுகளை சேர்த்து அத்தனைபேரின் கைகளையும் கட்டிவிட்டார்கள். நேட்டோவோடு அவர்களும் உறங்க வேண்டியதுதான். பிரான்சின் தலைமையில் புதிய அணி உலகத்தின் தப்பிதங்களை தகர்ககப் போகிறது.
உலகத்தின் முக்கிய மாற்றம் இல : 5
லிபிய அதிபர் கடாபியின் 40 வருட கால ஆட்சியை பாராட்டி ஓர் இன்ரசிற்றி ரெயினை சில மாதங்களுக்கு முன்னர் பரிசளித்தவர் இத்தாலிய பிரதமர் சில்வியோ பலர்ஸ்கோனி, கடாபி ஆபிரிக்க ஒன்றிய தலைவராக வருவதற்கு ஆதரவு கொடுக்க, சில கிழட்டு ஆபிரிக்க தலைவர்களுக்கு விபச்சாரிகளை பரிசாக அனுப்பி வைத்தவர் பலர்ஸ்கோனி. கடாபியுடன் இவ்வளவு நெருக்கம் கொண்ட பலர்ஸ்கோனி வாய்மூடி மௌனியாகி பாரீஸ் மாநாட்டுக்கு வந்தார். இன்று அவருடைய நாட்டுக்கு சொந்தமான தீவுகளில் இருந்தே மேலை நாடுகளின் தாக்குதல்கள் கடாபிக்கு எதிராக நடைபெறுகின்றன. ஒரே தரத்தில் பலர்ஸ்கோனி அந்தர் பல்டி அடிக்க வேண்டிய நிலை.
உலகத்தின் முக்கிய மாற்றம் இல : 6
கேணல் கடாபி பிரான்சிற்கு வழங்காத எரிபொருள் கிடையாது. பிரான்சின் இரத்தத்தையே ஓட வைத்தது அவருடைய பெற்றோல்தான். பிரான்சிய அதிபர் தமது குடும்ப நண்பர் என்று கடாபியின் மகன் அல் இஸ்லாம் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இப்போது கடாபி மிருகம் என்று வர்ணிக்குமளவிற்கு இந்த நட்பு ஒரே இரவில் மாற்றமடைந்தது. இது உலகத்தின் பதிய அரசியலில் நட்பு என்பதை செல்லாக்காசாக்கியிருக்கிறது.
உலகத்தின் முக்கிய மாற்றம் இல : 7
ஈராக், ஆப்கான் போரை நடாத்தியபோது கடாபியை மௌனமாக வைத்திருக்க முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளேயர் லிபியா போய் வந்தார். கடாபியின் கதிரைக்கு உறுதி வழங்கி அங்குள்ள பெற்றோலை உவிவதற்கான குழாயையும் கமுக்கமாகப் பூட்டிவிட்டு வந்தார். இன்று எல்லாம் உவிந்த பின் கடாபிக்கான நாளை அவர்கள் கச்சிதமாக குறித்தார்கள். இதன் கருத்து 2001 லேயே உலக மாற்றத்திற்குப் புதியதோர் நிகழ்ச்சி நிரல் போடப்பட்டுவிட்டதை தெளிவாக எடுத்துரைக்கிறது. அதுவே இன்று படிப்படியாக நகர்கிறது என்பதுதான் உண்மை. ( விக்கிலீக்ஸ் என்பது பொய் அல்ல அதுவே புதிய பயங்கரவாத பட்டியல் போன்றதுதான் )
இந்த ஏழு மாற்றங்கள் வழியாக ஈழத் தமிழர் உள்ளங்களில் எழ வேண்டிய ஐந்து முக்கிய கேள்விகள் ?
கேள்வி 01.
ஐ.நாவில் இயற்றப்பட்ட 1973ம் ஆண்டு தீர்மானம் தமது மக்களின் மீதே ஓர் அரசு தாக்குதல் நடாத்தினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க சர்வதேச சமுதாயத்திற்கு உரிமை உண்டு என்கிறது. இதன் அடிப்படையிலேயே லிபியா மீது இன்று தாக்குதல் நடைபெறுகிறது. இந்தச் சட்டத்தின் அடிப்படை ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டதா ? நமது அரசியல் தலைவர்கள் ஏன் இந்த விதிகளின் அடிப்படையில் தமது மதியூகத்தை வழி நடாத்தத் தவறினார்கள் ?
கேள்வி 02
உலகத்தின் அதிகார உச்சங்களில் இருந்து சிறிய அனுமதியை பெறும் தரகர்களாகவே ஆசிய நாடுகள் இருந்துள்ளன. வெறும் தரகர்களின் வாசலில் நின்று நமது பிரச்சனைக்கு தீர்வு தேடியிருக்கிறோம் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம் ?
கேள்வி 03
ஐ.நாவின் வாயிற்படிக்கு ஈழத் தமிழன் போக முடியாமல் சிறீலங்கா அரசு இதுவரை சிங்களவரையே அங்கு அனுப்பியுள்ளது. அனைத்து இரகசியங்களும் ஈழத் தமிழருக்கு தெரியாமலே மறைக்கப்பட்டுவிட்டன. யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் உலகம் அறியாத பேதைகளாக, பொன்னம்பலமா ? செல்வநாயகமா? என்று சண்டையிட்டு நாம் சீரழிந்திருக்கிறோம். நமது தலைவர்கள் எல்லோரும் சட்டத்தரணிகள் என்கிறார்கள் இவர்கள் சரியான சட்டத்தரணிகளாக இருந்தால் ஐ.நா வை ஏன் கோட்டை விட்டார்கள் ?
கேள்வி 03
பிரான்சில் கூடிய உலக அதிகார மையத்தில் ஈழத் தமிழ் மக்களின் நிலையை எடுத்து வைக்க நமக்கு ஒரு வலுவான நாடு தேவை. அந்த மேலை நாடு எது ?
கேள்வி 04.
கடாபியின் 40 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியால் களைத்துப்போன மக்களுக்கு ஒரு சுதந்திரம் வேண்டும். அவர்களின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது என்று மேலை நாடுகள் தெரிவிக்கின்றன. நாமும் அதைத்தானே சொல்கிறோம். கடந்த 62 ஆண்டுகளாக உரிமைகள் எதுவுமற்று சிங்கள இனவாத சர்வாதிகார ஆட்சியில் களைத்துவிட்டோம், எம்மை சுதந்திரமாக வாழ விடுங்கள் என்றுதானே கேட்கிறோம். அதற்காக பல இலட்சம்பேர் செத்துவிட்டோம். கடாபியின் கீழ் உள்ள மக்கள் போல நாமும் சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறோம் என்று எடுத்துரைக்க இதுதான் நேரமென நாம் ஏன் சிந்திக்க மறுக்கிறோம். அறுபத்து நாலு தாபனங்களை வைத்து ஆளுக்கு ஆள் அடிபட்டு ஏன் சாகிறோம் ?
கேள்வி 05
இன்று வடக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் சுதந்திர வேட்கையை அடையாளம் காட்டாது தமிழ் ஊடகங்களும், தமிழ் தலைவர்களும் மௌனமாக இருப்பதை நமது மக்கள் ஏன் இன்னமும் அடையாளம் காண முடியாத பேதைகளாக இருக்கிறார்கள் ?
தொகுப்புரை
நாம் ஆயுதம் எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. பயங்கரவாதி பட்டம் பெற வேண்டிய தேவையும் இனி இல்லை. முற்று முழுதான ஜனநாயக வழியில் நாம் சிங்கள இனவாத இழவுகளை தூக்கி வீசிவிட்டு வாழ புது வழி பிறந்திருக்கிறது. போலித் தரகர்களை நம்பியிராது, சோனியாகாந்தி சொல்விட்டாரென்று சொக்கியிராது மாணவரும், மக்களும் தாமாக சிந்திக்க வேண்டும். இப்படியொரு கோணத்தில் வழிகாட்ட வக்கில்லாத கூட்டங்களுக்கு வால்பிடித்து இன்னுமொரு அறுபதாண்டுகள் தாலியறுக்க வேண்டாம். முதலில் யாழில் இருந்தும், மட்டக்களப்பிலிருந்தும் பிரான்ஸ் தலைமையிலான உலக மன்றுக்கு பல்லாயிரம் கையெழுத்துக்களுடன் ஒரு கடிதம் வரவேண்டும். காரணம் நமது மக்கள் இந்திய, சிறீலங்கா இழவுகளால் களைத்துவிட்டார்கள், நமக்கும் விடிவு வேண்டும்.
இயேசுநாதரின் கடைசி இராப்போசனத்தில் அவர் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆனாலும் அதற்குப் பிந்திய உலகத்தை அவர் சுமந்த சிலுவையே தீர்மானித்தது. கடந்த வெள்ளி பாரீசில் நடந்த உச்சி மாநாடும் இயேசுநாதரின் கடைசி இராப்போசனம் போலவே புதிய உலகத்தை எழுதப் போகிறது. அந்த ஒளி எமது மண்ணிலும் ஏன் விழக்கூடாது.
கேட்க நமக்கு உரிமை உண்டு !
அலைகள் நவீன அரசியல் சிந்தனைப் பிரிவுக்காக
கி.செ.துரை 21.03.2011
Comments