தமிழீழத்திற்கான செயற்பாட்டில் மலினப் பிரச்சாரங்களை தவிர்ப்போம் – நா.க. அரச சபாநாயகர்

தமிழீழத் தனியரசு என்ற தேசியத் தலைவரின் இலட்சியக் கனவிற்கான பாதைகளில் ஒன்றாகத் தோற்றம் பெற்ற நாடு கடந்த தமிழீழ அரசு செய்ய வேண்டிய பணிகளின் வேகம் அதிகரிக்கப்பட்டு நாங்கள் எங்கள் இலக்கை அடைவதற்கு இப்போது மேற்கொள்ளப்பட்டுவரும் மலினப்பிரச்சாரங்கள் பாரிய தடைக்கற்களாகவே அமையும் என நாடு கடந்த அரசின் சபாநாயகர் திரு. பொன் பாலராஜன் தெரிவித்துள்ளார்.
http://www.eelanadu.info/wp-content/uploads/2011/02/4b9f9da50cf2f358abdcd4a4321104f9_S.jpg
நாடு கடந்த அரசின் முழுமுதல் நோக்கு தமிழர்களிற்கென்ற தனியரசேயாகும். அந்தப் பணியைத் தொடர்வதற்காகவே நாடு கடந்த அரசை மக்கள் அங்கீகரித்து அதற்கான பிரதிநிதிகளைத் தேர்வு செய்தார்கள். இந்தப் பாராளுமன்றின் நோக்கம் சிதைவுறாதவகையில் எமது நடவடிக்கைகளை எடுத்துச் செல்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வது அவசியம் எனத் தெரிவித்த சபாநாயகர் அவர்கள்,

இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்ற தோற்றத்தில் அனைவருமே ஒருமித்த நோக்கை இலக்காகக் கொண்டவர்கள், தமிழீழம் என்ற தனியரசை தோற்றுவிப்பதற்கான ஆணையாகவே மக்கள் அவர்களைத் தேர்வு செய்தார்கள். எனவே தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஒரே அணியினர் என்ற நோக்கத்தோடு தான் எமது சத்தியப்பிரமாணத்திற்கான அழைப்பு அமைந்தது எனவும் தெரிவித்ததோடு,

நாங்கள் எடுத்து கொண்ட பணியின் தார்ப்பரியம் தெரியாமல் ஏதோ பலமில்லாத ஒரு அமைப்பாக நாடு கடந்த அரசை ஆக்குவதற்கு வழிகோலும் வகையிலான பிளவுகளிற்கு வழிகோலும் செயற்பாடுகளை ஊக்கப்படும் பிரச்சாரங்களை சில ஊடகங்கள் “சத்தியப் பிரமாணம் எடுக்காத உறுப்பினர்கள்” பெயரில் மேற்கொண்டு வருவது கவலையளிப்பதாகவும், தங்களது உறுப்பினர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார்கள் எனத் தான் நம்புவதாகவும்,

இந்த விடயத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எமது அங்கத்தவர்கள் பலிக்கடாவாக்கப்பட்டிருப்பதாகவே தான் முழுமையாக நம்புவதாகவும், மாவீரர்களின் கனவுகளைச் சுமந்து தேசியத்திற்கான செயற்பாட்டாளர்களாக பணியாற்ற முன்வந்த மேற்படி உறுப்பினர்களின் பெயரிலான இவ் விசமப் பிரச்சாரத்தை தமிழீழ விடுதலையை முன்னெடுக்கும் ஆதரிக்கும் எந்தத் தமிழர்களாலும் ஏற்க முடியாதெனவும் தெரிவித்ததோடு,

நாடு கடந்த அரசின் பணிகள் மந்த கதியில் இருக்கின்றன, அது உறங்கிக் கொண்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டும் மேற்படி ஊடகங்கள் தமிழீழம் என்ற உயரிய இலட்சியத்தை வேறக்கும் வகையிலான கேலிச் சித்திரங்கள், இணைப்புப்படங்கள் போன்றவற்றை நாடு கடந்த அரசின் சின்னத்துடன் இணைத்து வெளியிடுவது அவர்களின் நோக்கத்தைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது என்றும்,

“இதுவரை சத்தியப்பிரமாணம் எடுக்காத உறுப்பினர்கள்” என்ற அடிக்குறியீட்டுடன் ஆதாரமற்ற வகையில் மேற்கொள்ளப்படும் மலினப் பிரச்சாரங்கள் நிறுத்தபட்டு தேசியத் தலைவரினதும், மக்களினதும் எமது மாவீரர்களினதும் கனவை விரைவே அடைவதற்கான உதவியைப் புரியும் வகையில் அனைவரும் செயற்பட வேண்டுமென தான் வேண்டுவதாகவும் திரு. பொன் பாலராஜன் குறிப்பிட்டுள்ளார்.

Comments