வான்புலிகளை முறியடிக்க போட்டி போட்டு உதவிய அமெரிக்காவும் இந்தியாவும்

விடுதலைப் புலிகளின் வான் அணியினரின் அச்சுறுத்தலை அடுத்து சிறிலங்காவின் வான் பாதுகாப்புப் பொறிமுறையின் தரம் தொடர்பாக ஆராய்வதற்கும், இந்தப் பொறிமுறையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று பரிந்துரை செய்வதற்காக அமெரிக்கப் படைத்துறையின் எட்டுப் பேர் கொண்ட சிறப்பு அணி அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வாறு ‘தி ஹிந்து‘ நாளேட்டில் நிருபமா சுப்ரமணியன் எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தகவல் பரிமாற்றக் குறிப்புகளை அடிப்படையாக வைத்து அவர் எழுதியுள்ள இந்தப் பத்தியை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் அணியினர் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது 2007 மார்ச் 26ம் திகதி நடத்திய தாக்குதலை இந்தியா வழங்கிய கதிரிகள் (ரேடர்கள்) தடுப்பதற்குத் தவறிவிட்டதால், தமக்குப் புதிய வகைக் கதிரிகளை வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு 2007 மார்ச் 30ம் நாள் சென்ற சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த றொபேட் ஓ பிளேக்கைச் சந்தித்தார்.

சிறிலங்காவின் வான் பாதுகாப்புப் பொறிமுறைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பாக, அமெரிக்கப் படைத்துறைக் குழுவொன்று சிறிலங்கா வந்து ஆராய்ந்து ஆலோசனை வழங்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகளின் வான் அணியினர் தாக்குதல் நடாத்திய ஒரு சில நாட்களின் பின்னர் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது.

புலிகளின் இந்தத் தாக்குதலில் எம்.ஐ 17 உலங்குவானூர்திகள் உள்ளிட்ட பல வான்கலங்கள் சேதமடைந்திருந்தன.

சிறிலங்காவிற்கு இந்தியா வழங்கிய கதிரிகள் விடுதலைப் புலிகளின் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்குத் தவறி விட்டன என அப்போது வெளிவந்த செய்திகளைச் சிறிலங்கா முற்றாக மறுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவிடம் தற்போதிருக்கும் கதிரிகள் விடுதலைப் புலிகளின் வான் வழி அச்சுறுத்தலை முறியடிப்பதற்குப் 'போதுமானதாக இல்லை' என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியதாக, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஏப்பிரல் 01, 2007 அன்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பிய இரகசியச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியா இரு பரிமாணக் கதிரிகள் இரண்டை ஏற்கனவே வழங்கியிருப்பதாகவும், மேலும் இரண்டு கதிரிகளை அது வழங்கவிருக்கிறது என்றும் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க இராஜதந்திரிகளிடம் கூறியிருக்கிறார்.

இருப்பினும் தாங்கள் முப்பரிமாணக் கதிரிகளையே கோரியிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

"முப்பரிமாணக் கதிரிகளைத் தாங்கள் கோரிய போதும் அதனை வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்காத நிலையில் சீனாவிடமிருந்து கதிரிகளைக் கொள்வனவு செய்வதென நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்" என கோத்தபாய கூறியிருக்கிறார்.

இந்தியா இரு பரிமாணக் கதிரிகளை வழங்கிய போதும், எல்-70 எனப்படும் எதிரி விமானங்களை இனங்கண்டு, தானியங்கியாகவே தொழிற்படும் விமான எதிர்ப்புப் பீரங்கி மற்றும் கதிரித் தொகுதியுடன் கூடிய விமான எதிர்ப்புப் பொறிமுறையினை இந்தியா தமக்கு வழங்கவில்லை என பிளேக்கிடம் கூறிய கோத்தாபய, இதுபோன்ற வசதி தங்களிடம் இல்லாமையினாலேயே எதிரி விமானங்களை இரவில் சுட்டு வீழ்த்த முடியவில்லை எனவும் கூறியிருக்கிறார்.

வவுனியாவில் பொருத்தப்பட்டிருந்த கதிரிகள் எதிரி விமானம் ஒன்றினது பறப்பினை அவதானித்ததாகவும், பின்னர் அது வவுனியாவிலுள்ள கதிரியின் திரையிலிருந்து மறைந்துவிட்ட நிலையில் தாக்குதல் இடம்பெறுவதற்குச் சற்று முன்னர் தான் மீண்டும் அந்த விமானம் கட்டுநாயக்கவிலுள்ள கதிரித் திரையில் தென்பட்டதாகவும் கோத்தபாய ராஜபக்ச கூறியிருக்கிறார்.

வடக்கிலிருந்து புறப்பட்ட விடுதலைப் புலிகளின் விமானம் நாட்டின் மேற்குக் கரையோரம் வழியாகத் தாழ்வாகப் பறந்து கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தி விட்டு மீண்டும் அதே வழியாகப் பாதுகாப்பாகத் தளம் திரும்பியிருந்தது.

"தங்களிடமிருக்கும் வான் பாதுகாப்புப் பொறிமுறையின் திறனை ஆராயுமாறும் தேவையேற்படுமிடத்து தங்களது வான்பாதுகாப்புப் பொறிமுறையினை மேம்படுத்துவதற்கான கருவிகளை வழங்குமாறும் கோத்தாபய கோரியிருந்தார்" என இந்த இரகசியத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட இந்தச் செய்தியினை உடனடியாகவே வோசிங்டனுக்குத் தெரியப்படுத்துவதாக அமெரிக்கத் தூதுவர் ஓ பிளேக் கோத்தாபய ராஜபக்சவிற்கு உறுதியளித்திருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது, 'வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தினை' எடுத்து விளக்கிய ஓ பிளேக், இந்தியா ஏற்கனவே சில கதிரிகளைச் சிறிலங்காவிற்கு வழங்கியிருக்கும் நிலையில், சிறிலங்காவினது இந்த வேண்டுகோளை வோசிங்டன் ஏற்றுக் கொள்ளுமிடத்து- இந்தியாவிடனும் தொடர்ந்தும் இத்தகையை தொடர்புகளைப் பேணுவதற்கு சிறிலங்கா எந்தவிதமான எதிரப்பையும் தெரிவிக்குமா என்று ஓ பிளேக் கேட்டிருந்தார்.

இது தொடர்பாக சிறிலங்காவிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்த கோத்தபாய, சிறிலங்காவின் கோரிக்கை தொடர்பாக அமெரிக்கா தனது முடிவினை எடுத்த பின்னர், இந்த விடயம் தொடர்பாக புதுடில்லிக்குத் தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு சிறிலங்காவுடையதே எனக் கூறியிருக்கிறார்.

சிறிலங்காவின் தேவையினை ஏற்று அதற்கேற்ப கதிரியுடன் கூடிய விமான எதிர்ப்புப் பொறிமுறையினை, சிறிலங்காவிற்கு இலவசமாக அமெரிக்கா வழங்காது என்பதையும் கோத்தாபய தெளிவாக விளங்கிக் கொண்டார் என இந்த இரசகசியச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கடல்சார் கண்காணிப்புக் கதிரித் தொகுதியினைச் சிறிலங்கா பெறுவதற்கு அமெரிக்கா ஏற்கனவே உதவி செய்திருக்கும் நிலையில், இணைந்த கடல் மற்றும் வான் பாதுகாப்புத் தொகுதிகள் சிறிலங்காவில் நிறுவப்படுவதற்கு அமெரிக்கா உதவமுடியும் என கோத்தாபய குறிப்பிட்டிருக்கிறார்.

சிறிலங்காவின் இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து அமெரிக்கர்களும் வேகமான செயற்பாடுகளில் இறங்கியிருக்கிறார்கள்.

2007ம் ஆண்டு ஏப்பிரல் 3ம் நாள் சிறிலங்காவின் வெளிவகார அமைச்சர் றோகித போகொல்லாகமவிற்கும் சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஒ பிளேக்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பில் றொபேட் ஓ பிளேக் சிறிலங்காவினது வான்பாதுகாப்பு பொறிமுறை தொடர்பான திட்டம் தொடர்பாகவே கலந்துரையாடியிருந்தார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பான தகவல்களை பிறிதொரு இரகசியத் தகவல் ஊடாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

"இந்தியா தங்களுக்கு வழங்கிய மூன்று கதிரிகள் எட்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தனது செயற்பாட்டினை நிறுத்தி விடுவதாகவும், கட்டுநாயக்க பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கதிரி விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்திய வேளையில், இதுபோல செயற்படவில்லையா என்பதைத் தாங்கள் விசாரித்து வருவதாகவும் போகொல்லாகம குறிப்பிட்டார்" என ஏப்பிரல் 5ம் நாள் புதுடில்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பிய இரகசியச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியா வழங்கிய கதிரிகளின் வினைத்திறன் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருப்பதாகவும் இந்தியாவிடமிருந்து மேலும் இரண்டு இரு பரிமாணக் கதிரிகளையும் ஒரு முப்பரிமாணக் கதிரிகளையும் சிறிலங்கா அரசாங்கம் கோரியிருப்பதாக போகொல்லாகம கூறியிருக்கிறார்.

மே 2009 ல் வோசிங்டன் சிறிலங்காவினது வான் பாதுகாப்புப் பொறிமுறை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையினைச் சிறிலங்காவிற்கு அனுப்பியதாகத் தெரிகிறது.

ஏப்பிரல் 29ம் நாளன்று கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல பகுதிகளிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்பகங்கள் மீது விடுதலைப் புலிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த விடயம் விரைவுபடுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

சிறிலங்காவினது வான் பாதுகாப்புப் பொறிமுறை தொடர்பான ஆய்வொன்றை அமெரிக்க இராணுவ அணியொன்று 'அண்மையில் மேற்கொண்டிருந்தது' என புதுடெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மே 25ம் நாளன்று புதுடெல்லிக்கு அறிவித்திருக்கிறது.

மே 29ம் நாளன்று புதுடில்லியிலிருந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர தகவல்களில் இது தெடார்பான செய்தி பரிமாற்றப்பட்டிருக்கிறது.

"சிறிலங்காவிடமுள்ள வான் பாதுகாப்புப் பொறிமுறையின் தரம் தொடர்பாக ஆராய்வதற்கும் இந்தப் பொறிமுறையினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற பரிந்துரைகளை மேற்கொள்ளும் பொறுப்பு அமெரிக்கப் படைத்துறையின் எட்டுப் பேர் கொண்ட சிறப்பு அணியிடம் வழங்கப்பட்டிருந்தது" என இந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

"சிறிலங்காவின் வான்பாதுகாப்புப் பொறிமுறையினை மேம்படுத்துவதற்காக எந்த வகைக் கதிரிகள் இணைந்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டதா என்றும் இந்தத் தகவல்களை அமெரிக்கா புதுடெல்லியுடன் பகிர்ந்து கொள்ளுமா என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு கோரியதாக" இந்த இரகசியச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், "எந்தவகையான பொறிமுறை ஏற்படுத்தப்படும் மற்றும் இதற்கான காலஎல்லை தொடர்பாகத் தற்போது எதிர்வு கூறமுடியாது" என அமெரிக்க அதிகாரிகள் பதிலளித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இந்தப் பேச்சுக்கள் 'பொதுவான நலன்களின்' அடிப்படையில் அமைந்திருந்தாலும், இலங்கைத் தீவின் வடக்குப் பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் அமெரிக்கா வழங்கிய கதிரிகளை நாட்டினது தென்பகுதிக் கரையோரத்திற்கு நகர்த்துமாறு புதுடெல்லி கொழும்பு மீது அழுத்தத்தினைப் பிரயோகத்திருக்கிறது.

புதுடில்லியிலுள்ள இந்தியக் கடற்படை அதிகாரிகளுடன் தான் நடத்திய சந்திப்புத் தொடர்பான விபரங்களை சிறிலங்கா கடற்படை அதிகாரியான லக்ஸ்மன் இலங்ககோன் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு வழங்கியிருக்கிறார்.

சிறிலங்காவினது வடக்குக் கரையோரத்தில் இந்தியா வழங்கிய கதிரியினைப் பொருத்தி விட்டு, ஏற்கனவே வடக்குக் கரையோரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் அமெரிக்கா வழங்கிய கதிரியை தென் கரையோரத்திற்கு மாற்றுமாறு புதுடில்லி கொழும்பு மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்கிறது என்ற செய்தியினை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் யூன் 13 2007 அன்று தனது இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பிய இரகசியச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறது.

"இந்தியா எதிர்த்தாலும் கூட அமெரிக்கா வழங்கிய கரையோரக் கண்காணிப்புக் கதிரி தான் வடக்கில் தொடர்ந்தும் பொருத்தப்பட்டிருக்கும் என சிறிலங்கா கடற்படைத் தளபதி தன்னிடம் கூறியதாக கடற்படை அதிகாரி இலங்ககோன் அமெரிக்கத் தூதரகத்திடம் தெரிவித்திருக்கிறார்" என இரகசியத் தகவலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், வடக்குக் கரையோரத்தில் அமெரிக்காவினது கதிரி பொருத்தப்பட்டிருப்பதற்கு இந்தியா, இதுநாள் வரையில் தெரிவித்து வந்த எதிர்ப்பினை அது மீளப்பெற்றிருப்பதாக புதுடில்லியில் இந்தியக் கடற்படை அதிகாரிகள் இலங்ககோனிடம் கூறியிருக்கிறார்கள்.

வடக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அமெரிக்கா வழங்கிய கதிரிக்குத் துணையாக இந்தியா வழங்கும் கதிரி ஒன்றையும் வடக்கில் பொருத்துவது தொடர்பாக ஆராயுமாறு தாங்கள் சிறிலங்காவினது அதிகாரிகளைக் கோரியிருப்பதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் அமெரிக்கத் தூதரக அதிகாரியிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

Comments