புலிகளை முடித்துவிடுங்கள் உலகப் பயங்கரவாதி ஜோர்ஜ் புஷ் மகிந்தருக்கு தெரிவித்தாரா?



2005ம் ஆண்டு மகிந்தர் ஜனாதிபதியாகிய பின்னர் 2006ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நாவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்க சென்றபோது, அவருக்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ் உடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் பேசும்போது, மகிந்தர் விடுதலைப் புலிகள் குறித்து கருத்துகளை முன் வைத்துள்ளார், அதற்கு உடனடியாகப் பதிலளித்த ஜோர்ஜ் புஷ், புலிகளை ஏன் இன்னும் விட்டுவைத்திருக்கிறீர்கள், முற்று முழுதாக முடித்துவிடவேண்டியது தானே எனக் கூறியுள்ளார் என ஒரு ஆங்கில இணையம் சில தரப்பை ஆதாரம் காட்டி செய்திவெளியிட்டுள்ளது.

2006 ம் ஆண்டு புலிகளோடு இலங்கை யுத்தத்தை அறிவித்தபோது, அமெரிக்காவிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தது. அங்கே ஜனாதிபதியாக ஓபாமா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகினாலும், அவரது ஆட்சிக்காலத்தில் அவரால் நியமிக்கப்பட்ட பலர் அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறையில் இருந்தாகவும், ஓபாமா பதவி ஏற்றபின்னரும் அவர்கள் கடமையாற்றியதால், புலிகளைப் பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற புஷ்ஷின் கொள்கையே அங்கே மேலோங்கி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஜோர்ஜ் புஷ்ஷின் கடும் போக்கு குறித்து அறிந்துவைத்திருந்த பல தமிழ் ஆதரவாளர்கள், இதன் காரணமாகவே ஓபாமாவை ஆதரித்தனர். அவரூடாக ஏதாவது செய்யலாம் என எண்ணியிருந்தனர்.

இருப்பினும் அமெரிக்காவில் உள்ள சர்வதேச புலனாய்வுத்துறையும், தேசிய புலனாய்வுத் துறையும் புலிகள் எதிர்ப்புவாதிகளாகவே இருந்திருக்கின்றனர். அதேவேளை ஜோர்ஜ் புஷ் தெரிவித்தது போல அவர்களை முற்றாக அழிக்கவே அவர்களும் விருபியுள்ளனர். இறுதிக்கட்டப் போரில் அமெரிக்கா தனது கப்பல் ஒன்றை அனுப்பி அகதிகளையும், புலிகளின் முக்கிய தலைவர்களையும் காப்பாற்ற நினைத்து, கப்பலை அனுப்புவதற்காக அனுமதியை பிராந்திய வல்லரசான இந்தியாவிடம் கோரியுள்ளது. இருப்பினும் தான் நினைத்தவாறே போர் செல்கிறது, நீங்கள் அதனைப் பற்றிக் கவலைப்படவேண்டாம் என இந்தியாவால் அமெரிக்காவுக்குச் சொல்லப்பட்டதாக ஊர்ஜிதமற்ற சில செய்திகளும் தெரிவிக்கின்றன. ஓபாமா அரசாங்கம் மேற்கொணட சில நடவடிக்கைகள், அந் நாட்டின் தேசிய புலனாய்வுப் பிரிவால் தோற்கடிக்கப்பட்டதால், ஓபாமா அவ்வதிகாரிகள் ஜோர்ஜ் புஷ்ஷுக்கு நெருக்கமானவர்கள் என்பதனை அறிந்துள்ளார்.

அதனால் அவர் இலங்கைக்கு எதிரான போர் குற்ற நடவடிக்கைகளை அமெரிக்க அரசு சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்கும்போதும், ஏனைய அமைப்புகள் முன்னெடுக்கும் போதும் அதனை, மறை முகமாகவும், சிலவேளை வெளிப்படையாகவும் ஆதரிக்கிறார். அத்தோடு நாடு கடந்த தமிழீழ அரசு தடையின்றி அமெரிக்காவில் செயல்பட அதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்த ஆதரவு எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது ஒரு கேள்விக்குறி. சிலவேளைகளில் இனி வரும் காலங்களில் அமெரிக்காவின் போக்கு மாறலாம்.

எனவே சமீபத்தில் அமெரிக்கா சென்ற மகிந்தர் டெக்ஸ்ஸஸ் மாநிலத்தில் இரகசியமாக ஜோர்ஜ் புஷ்ஷை சந்தித்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. அப்போது அவர் கூறிய யோசனையைக் கையாண்ட மகிந்தர், இப்போது ஏற்பட்டுள்ள போர் குற்ற மற்றும் சர்வதேச அழுத்தங்களை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பாக ஜோர்ஜ் புஷ்ஷிடம் மந்திர ஆலோசனை நடத்தவே சென்றுள்ளார் என அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா அரசு, தமிழர்கள் எடுக்கும் சில நடவடிக்கைகளுக்கு ஏன் ஆதரவு தெரிவித்து வருகிறது என்று குழம்பிப் போய் உள்ள மகிந்தருக்கு ஜோர்ஜ் புஷ் கீதாஉபசாரம் செய்து அனுப்பியுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காகவே முந் நாள் உதவி ராஜாங்கச் செயலாளர் சிச்சார்ட் ஆமிடேஜை புஷ் இலங்கை அனுப்பியுள்ளார்.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் பல சுற்றாக இடம்பெற்றவேளை ஒரு மாநாட்டில் கலந்துகொண்ட, ரிச்சாட் ஆமிடேஜ் புலிகளை பயங்கரவாதி என்று குறிப்பிட, அதே நேரத்தில் குறுக்கிட்ட திரு. அனரன் பாலசிங்கம் அவர்கள், புலிகளைப் போராளிகள் என்று கூறினார். ஒருவருக்கு ஒரு விடையம் மேல் ஒரு அபிப்பிராயம் இருக்கலாம், மற்றவருக்கு அதன்மேல் வேறு அபிப்பிராயம் இருக்காலம் அதனால் பொதுவாகக் கூறவேண்டாம் என அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கூற, மூக்கு உடைபட்டு தனது உரையை மாற்றிப் பேசீனார் ரிச்சாட் ஆமிடேஜ் என்பதனையும் நாம் மறந்துவிடக்கூடாது. எனவே தற்போது பதவியில் இல்லாதா ரிச்சாட் ஆமிடேஜ் இலங்கை வந்துசென்ற விடையம் எதுவாக இருக்கும் என்பதனை மக்கள் அறிந்துகொள்வார்கள்.

அதிர்வின் ஆசிரியபீடம்.

Comments