இதைப்பற்றி பல தடவைகளில் நமது பத்திரிகையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. தேர்தல்கள் என்பது ஒரு பாத்தியமற்ற, கேள்வியற்ற சொத்தைப்போல் பிடித்தவனுக்குப் பொண்டாட்டி என மதித்து பலாத் காரமான செய்கைக்கொப்ப பல கொடுமைகள் நமது நாட்டில் இதுசமயம் நடந்து வருகின்றன. சென்னையிலும், மதுரையிலும், கோவையிலும் இன்னும் மற்ற இடங்களிலும் நடக்கும் தேர்தல் பிரசாரங்கள் இந்தியா நாகரீகமற்ற தேசம் என்பாருக்கும் இந்திய மக்கள் சுயராஜ்யத்திற்கு யோக்கியதையற்ற வர்கள் என்பாருக்கும் தங்கள் கட்சிக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உபயோகப்படுத்திக்கொள்ளத்தக்கதான சாட்சியாய் விளங்குகிறது. ஆனபோதிலும் நமக்கு இவைகளை மறுக்கும் மார்க்கம் ஏதாவது உண்டா என்று பார்த்தால் பிரஞ்சு தேசத்தில் இப்படி இல்லையா? பிரிட்டிஷ் தேசத்தில் இப்படி இல்லையா? என்று சொல்லித்தான் தப்பித்துக் கொள்ளக் கூடுமாயிருக்கிறதே அல்லாமல் அவர்கள் சொல்லுவதைப் பொய்யென்றும் மறுக்க யோக்கியதை இல்லாதவர்களாயிருக்கிறோம்.
இதோடு மாத்திரம் அல்லாமல் இந்தியாவின் விடுதலைக்கேற்பட்டதும் 2 ´த்திற்கு முன்பு மிகமிக பரிசுத்தத் தன்மையுடையதென்று சொல்லிக் கொள்ளப்பட்டிருந்ததுமான காங்கிரஸின் பெயரும் உலகப்பெரியார், சத்தியாக்கிரக அவதாரம், அஹிம்சையின் சொரூ பம் மகாத்மா என்று உலகோர்களாலேயே சொல்லிக்கொள்ளும் உத்தமரான காந்தியடிகளின் பெயரும், இந்தியா அநாகரீக தேசம் என்றும் சொல்வதற் காதாரமான செய்கைக்கும் சுயராஜ்யத்திற்கு அருகதையற்றது என்று சொல்வ தற்காதாரமான செய்கைக்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறதென்றால் நாட்டுக்கு யோக்கியதை விடுதலை எங்கேயிருக்கிறது?
இதற்குக் காரணம் என்ன வென்று யோசிப்போமேயானால், இத்தேர்தல் கருமங்களில் பிரவேசித் திருக்கும் யாரையும் சொல்ல இங்கு நாம் முன்வரமாட்டோம். ஆனால், இதைப் பார்த்துக் கொண்டு மவுனம் சாதித்துக் கொண்டிருக்கும் யோக்கிய மான, உண்மையான என்று சொல்லப்படும் சில பத்திரிகைகளையும், யோக்கியமானவர்கள், உண்மையானவர்கள் என்று சொல்லப்படும் சில தலை வர்களையும்தான் இப்பாதகத் தொழிலுக்குக் காரணம் என்று சொல்லுவோம்.
துரௌபதையை துர்ச்சாதனன் துகிலுரிந்ததையும், மானபங்கப் படுத்தினதையும் தர்மபீமாதிகள் பார்த்து மவுனம் சாதித்துக் கொண்டேயிருந்தார்கள் என்றால் இப்பாரததேவியை சில துர்ச்சாதனர்கள் துகிலுரிவதையும், மானபங்கப்படுத்துவதையும் பார்த்துக் கொண்டிருப்பது அதிசயமா அல்லது அது தப்பிதமாகுமா என்று சிலர் ஐயுறலாம். ஆனால் துரௌபதையின் துகிலுரிவதை பொறுத்துக் கொண்டிருந்தவர்கள் தங்களுக்குப் பலமிருந்தும் பொறுமையின் பலத்தால் பொறுத்துக் கொண்டிருந்தார்கள்.
பாரதமாதாவின் துகிலுரியப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பெரும்பான்மையோர் சுயநலத்தாலும் பேடித்தன்மையாலும் அலட்சியப் புத்தியாலும் தாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம். இதன் பலனாய் தேசம் என்ன ஆகிறது என்பதைப் பற்றிக் கொஞ்சமாவது சிந்தித்துத் தாங்கள் செய்த தியாகங்களையும் தங்களது உழைப்புகளையும், தாங்கள் எதற்காகச் செய்தோம், பட்டோம் என்று நினைத்துப்பார்த்து, தேச விடுதலைக் கேதான் செய்தோம், செய்துகொண்டிருக்கிறோம் என்கிற முடிவுக்கு வருவார்களானால் இவர்கள் எப்படி மவுனம் சாதிக்க முடியும்? இவ்வளவு பெரிய அக்கிரமத்திற்குக் கேள்வியில்லையா?
எல்லோருமா அறியாமையில் – அலட்சியப் புத்தியில் மூழ்கிவிட்டார்கள்? எல்லோருமா பயங்கொள்ளிகள்? எல்லோருமா சுயநலப்பேயால் ஆட்டப்படுகிறார்கள்? இப்படிச் சொல்வது தர்மமாகுமா? என்று யோசித்தால், மகாத்மாவின் பேரால், காங்கிரஸ் பேரால் நடத்தப்படும் இந்தத் தேர்தல் அக்கிரமங்கள் ஒழுங்கானதா என்கிற எண்ணம் வாட்டுகிறதே; யாரைக் கேட்டாலும் நேரில் பேசும்போது இது அக்கிரமம்தான் என்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். ஒரு கோடி ரூபாயும் 30 ஆயிரம் பேர் சிறை வாசத்தையும் மகாத்மாவின் சிறை வாசத்தையும், ராஜ போகத்தையும், ராஜ சம்பத்தையும், பெருத்த தியாக புத்தியையும் ஆகுதியாய்க் கொண்டு செய்த விடுதலை யாகத்தில் இத்தேர்தல் சூட்சி என்கிற ராட்சஸன்தானா உண்டாக வேண்டும்?
உண்மையான சுயமரியாதையும், வீரமும், பொது நல எண்ணமும் தேசபக்தியும் ஒரு இரண்டு மூன்று பேருக்காவது நம் தமிழ்நாட்டில் என்றைக்கு ஏற்படுகின்றதோ அன்றைக்குத்தான் இத்தேர்தல் ராட்சஸன் மாய்வான். அதுவரை தமிழ்நாட்டில் கல்மாரியும், கல்லடியும், தடியடியும், மண்டை உடைவும், உயிர்ச்சேதமும் இன்னும் பல இழிகுணங்களும் தாண்டவமாடிக் கொண்டிருப்பது கொஞ்சமும் ஆச்சரியமல்ல. ஆனால் ஒன்று மாத்திரம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டு இதை முடிக்கிறோம். அதாவது யோக்கியமான பத்திரிகைகள் என்பது மவுனம் சாதித்துக் கொண்டிருந்தாலும் நமது சகோதரப் பத்திரிகையாகிய ‘ஊழியன்’ எழுதியி ருப்பது “அவரவர் கட்சிப் பத்திரிகைகள் அவரவர்கள் சார்பில் பேசுகின்றன” என்பதை பொது மக்கள் மனதில் வைத்து பத்திரிகையில் காணப்படுவதை நம்பி அவசரப்பட்டு அபிப்பிராயம் கொள்ளாமல் பொறுமையோடிருந்து உண்மையை அறியும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – தலையங்கம்
Comments