தமிழர்களை அழிப்பதற்கு துணைநின்ற தி.மு.க. காங்கிரசு கட்சிகளும் தமிழக மக்களது வரலாற்று கடமையும்


தமிழகத்து அரசியல் அரங்கு பரபரத்து காணப்படுகின்றது. அடுத்துவரும் 5வருடங்களிற்கு தமிழகத்தை குத்தகைக்கு எடுப்பது யார் என்பதை தீர்மாணிக்கும் சட்டசபைத் தேர்தல் திகதி வரும் ஏப்ரல்-13 எனவும் அதன் முடிவுகள் மே-13ல் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தி.மு.க. காங்கிரசு கட்சிகளிடையே திடீர் பிளவு ஏற்பட்டுள்ளதையடுத்தே தமிழக அரசியல் அரங்கு பரபரத்து காணப்படுகின்றது.

தமிழக மக்களது தலையில் மிளகாய் அரைத்து 5வருடங்களை ஓட்டியுள்ள இந்த கூட்டணிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள இழுபறிநிலையானது சேர்ந்து கொள்ளையடித்துவிட்டு பின்னர் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறால் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி நியாயம் தேடுவதைப்போல் உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதையடுத்து பிரதான கட்சிகளான அ.தி.மு.க. தி.மு.க. என்பன தமது கூட்டணியில் மற்ற கட்சிகளை இணைத்துக் கொண்டு வெற்றிவாய்பினை உறுதிப் படுத்துவதற்கு முட்டிமோதிக் கொண்டிருக்கின்றன.

இந்த பந்தயத்தில் அ.தி.மு.க. கட்சியே முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கின்றது. அ.தி.மு.க. தி.மு.க. இரண்டுக்கும் இடையில் கடந்த காலங்களில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் கணிசமான வாக்குகளை பிரித்து இரண்டும் கெட்டான் நிலையினை ஏற்படுத்தியருந்த விஜயகாந் தலைமையிலான தே.மு.தி.க. கட்சியே இந்த தடவை பெரும் கவனத்தை ஈர்திருந்தது.

தே.மு.தி.க. வினை தமது கூட்டணியில் இணைத்துக் கொள்ள தி.மு.க. அ.தி.மு.க கட்சிகள் திரைமறைவில் முயற்சிகளை எடுத்துவந்தன. அதனைவிட தமிழகத்தில் தனித்த ஆட்சி என்ற கனவுடன் வளையவரும் ராகுல்காந்தியின் அணியினரோ தே.மு.தி.க. வினை தம்பக்கம் கொண்டுவந்து மூன்றாவது அணியமைக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வந்தது.

இவை அனைத்தையும் பொய்யாக்கி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செயலலிதா விசயகாந்தை தனது கூட்டணிக்குள் லாவகமாக இழுத்துக் கொண்டார். இதற்காக பரிமாறப்பட்டது 41 சட்டமன்றத் தொகுதிகள். அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந் விரைவில் இணைந்தது கருணாநிதியின் இராசதந்திரத்தினாலேயே என்பது கூடுதல் அதிர்ச்சியாகும்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக எனும் அளவிற்கு மெகா… மகா… ஊழலை நிகழ்த்திக் காட்டி அகில உலகத்தையே கோபாலபுரத்தை நோக்கித் திருப்பிய சகலகலா வல்லவன் தமிழினத் துரோகி கருணாநிதியை கழுத்தறுக்க முனைந்த காங்கிரசிற்கு தனது சாணக்கியத்தனத்தினால் பதிலடி கொடுத்த நிகழ்வே தே.மு.தி.க. வினை அ.தி.மு.க. கூட்டணியில் அவசரமாக இணைய வைத்தது.

அதுசரி கருணாநிதியின் சாணக்கியத்தனம் இராசதந்திரம் எல்லாம் அவரது குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் போது மாத்திரம்தானே பயண்படும். இனத்தின் வாழ்விற்காகவா மொழியின் வளர்ச்சிக்காகவா பயண்படுத்தப் போகின்றார்?

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலயங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் உலக மகா ஊழலை நிகழ்த்திய தி.மு.க.வுடன் கூட்டணியில் தொடர்வது ஏனைய மாநிலங்களில் பின்னடைவினை ஏற்படுத்தும் என கருதிய இத்தாலி சோனியா தலைமையிலான காங்கிரசு தி.மு.க.வுடனான உறவை முறித்துக் கொள்ள தீர்மாணித்தது.

இதற்கான நேரத்தை எதிர்பார்திருந்த காங்கிரசு தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை களத்தை தேர்ந்தெடுத்தது. 2006ம் ஆண்டு 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரசு இந்தமுறை 90 இடங்களை வலியுறுத்தியதே பிரச்சினையினை ஏற்படுத்த தான் என்பது அரசியல் நோக்கர்களது கருத்து.

தி.மு.க., காங்கிரசு கடந்த முறை போட்டியிட்ட 48 இடங்களில் இருந்து ஆரம்பித்தது. தொகுதிப்பங்கீடு இழுபறிநிலையில் சென்றுகொண்டிருந்த நிலையில் காங்கிரசு தரப்பை பலவீனமாக்குவதற்கான காய்களை கருணாநிதி நகர்த்த ஆரம்பித்தார்.

முதல் காய்நகர்தலே அசத்தலாக அமைந்தது. டெல்லியில் நடைபெற்ற முதலமைச்சர்களுக்கான மாநாட்டிற்காக தனது தள்ளாத வயதிலும் சென்ற கருணாநிதி சொக்கத் தங்கம் சோனியாவை சந்திப்பதற்கு முன்னர் பா.ம.க. தி.மு.க. கூட்டணியில் உள்ளது என பரபரப்பை பற்றவைத்துவிட்டு சென்றார்.

உடனே பதறியடித்த ராமதாசோ ஐய்யய்யோ அவர் பொய் சொல்லுகிறார் நாங்கள் இன்னும் எங்களது நிலையை முடிவு செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்து கருணாநிதிக்கே இராசதந்திரம் கற்றுக் கொடுத்தார். சொக்கத் தங்கம் சோனியாவை சந்தித்தபின் அவர்(ராமதாசு) அப்படி கூறினால் நாங்களும் முடிவுசெய்யவில்லை என்று கருணாநிதி கூறியதன் பின்னணி பா.ம.க. வினை கூட்டணியில் சேர்ப்பதில் சொக்கத் தங்கத்திற்கு விருப்பமில்லை என்பதனாலையே.

இந்த இரட்டை நிலைப்பாட்டின் மூலம் பயனடைந்தவர் கருணாநிதிதான். பா.ம.க. தி.மு.க. கூட்ணியில் உண்டு என்று கூறியதன் மூலம் பா.ம.க.வினை வேறுயாரும் நெருங்கிவிடாது பார்த்துக் கொண்டார். இல்லை என்று மறுத்து சொக்கத் தங்கத்தை திருப்திப்படுத்த முயன்றார்.

இந்நிகழ்வை இவ்வாறும் கூறலாம். பூட்டிய வீட்டிற்குள் இருந்து பலபேர் பார்க்க அலங்கோலமாக ஒரு பெண்ணுடன்(பா.ம.க.) வெளியேறினால் எதுவும் நடக்காதுவிட்டாலும் ஊர் நம்பாது. அது போன்றே டெல்லியில் வைத்து பா.ம.க.வினை அரசியல் அரங்கில் களங்கப்படுத்தியிருந்தார் கருணாநிதி. நீங்கள் முணுமுணுப்பது கேட்கின்றது. தமிழக அரசியலில் இராமதாசு அரசியல் விபச்சாரியென்பது இப்போதுதான் தெரியவேண்டுமா என்று நீங்கள் கேட்பது நியாயம்தான்.

காங்கரசுடன் தொகுதிபங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டு இருக்கும்போதே பா.ம.க.விற்கு 31இடங்களை ஒதுக்கீடுசெய்து இந்த நாடகத்தை முடித்துவைத்தார் கருணாநிதி. அன்புமணி மூலமாக மூன்றாவது அணி அமைக்கும் கனவில் இருந்த காங்கிரசிடம் இரகசிய பேச்சுவார்த்தை நடத்திய இராமதாசை தனது வலைக்குள் வீழ்த்தியது கருணாநிதியின் சாணக்கியம் அல்லாமல் வேறு என்ன?

அடுத்து விஜயகாந் விடயத்திற்கு வருவோம். தமிழக தேர்தல் களத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க. வுடன் இணைந்து மூன்றாவது அணியை அமைப்பதன் மூலம் உலக மகா ஊழலை செய்து இந்தியளவில் தமக்கு பெரும் அவமானத்தையும் தலைகுணிவையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்திய தி.மு.க.வினை பழிவாங்க தருணம்பார்த்திருந்தது காங்கிரசு.

அரசியலில் பழம் திண்டு கொட்டை போட்ட பெருச்சாலி கருணாநிதிக்கு இந்தவிடயம் தெரியாமலா இருக்கும்! வைக்கிறேன் பார் ஆப்பு…! என்ற றீதியில் கடந்த வெள்ளிக்கிழமை அடாவடி வாரிசு அழகிரி மூலமாக விசயகாந்தை தூண்டிவிடார். நண்பர்(நண்பேன்டா…) விஜயகாந் ரோசக்காரர். அவர் செயலலிதாவுடன் ஒருபோதும் சேரமட்டார். இதனை உறுதிப்படுத்துவது போன்றே இதுவரை விஜயகாந் நேரடியாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்பாக எதுவும் சொல்லவில்லை என்று தமிழக அரசியல் களத்தை அதகளப்படுத்தினார் அழகிரி.

கருணாநிதி போட்ட கணக்கு தப்புமா…? அன்று இரவே செயலலிதாவை சந்தித்த அழகிரியின் ரோசக்கார நண்பர் விஜயகாந் 30நிமிட சந்திப்பில் 41 இடங்களை பெற்று கருணாநிதியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினார்.

அடுத்து ஆரம்பித்தது நேரடியுத்தம்.

காங்கிரசிற்கான ஆதரவு சக்திகளை அரவணைத்தும் எதிர் அணியில் சேரவைத்தும் தனிமைப்படுத்தி பலவீனமான நிலையை ஏற்படுத்திவிட்டு நேரடி மோதலிற்கு தயாரானது கருணாநிதி படை.

கடந்த சனியன்று(05-03-2011) கூட்டப்பட்ட கட்சியின் உயர்நிலை செயற்திட்டக் குழுவில் அரங்கேறியது அதிரடி. மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகுவதென முடிவெடுக்கப்பட்டு தம் சார்பில் மத்திய அமைச்சர்களாக இருக்கும் அனைவரும் தமது பதவியில் இருந்து விலகப்போதாக அதிர்ச்சிகொடுத்தார் தன்மானத்??? தலைவர் கருணாநிதி.

யாணைவரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போன்று மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகப் போகின்றது என்பதை உறுதிப்படுத்தி சில நாட்களிற்கு முன்னர் வீரமணி கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்குதான் கருணாநிதியின் இராசதந்திரம் உச்சநிலை அடைகிறது. இவர்கள் 48ல் இருந்து ஆரம்பிக்க… அவர்கள் 90ல் இருந்து இறங்கிவர… ஒரு கட்டத்தில் தட்டுத்தடுமாறி 60ல் வந்து நின்றது. இருந்தும் நிலமை அவ்வளவு ரசிக்கக் கூடியதக இல்லாததால் கூடுதலாக 3தொகுதிகளை கேட்கிறது அத்துடன் தாம் விரும்பும் இடங்களில் போட்டியிடுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் காங்கிரசு மிரட்டுகிறது… இது நியாயமா என ஊரைக்கூட்டி நியாயம் கேட்டார் மனுநீதிச் சோழன் வழிவந்த???? கருணாநாநிதி. (தப்பாக நினைக்க வேண்டாம் உங்கள் முதல்வர்தான் இனிமேல் வள்ளுவர்(வாளும் வள்ளுவர்…) தொல்காப்பியர் என்ற பெயர்களில் தன்னை உவமைபடுத்த வேண்டாம் என்று அன்புக் கட்டளையிட்டிருக்கின்றார். அதுதான் புதுசா…)

தி.மு.க.வின் இந்த அதிரடி நிலைப்பாடு உண்மையில் காங்கிரசின் தொகுதிப் பங்கீட்டு பிடிவாதத்தினால் அல்ல என்பதே உண்மையாகும். உலக மகா ஊழலான இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளை பற்றி நடாத்தப்பட்டுவரும் விசாரணையின் அடுத்து அதிரடி கருணாநிதியின் வீட்டுக்குள் அரங்கேற இருப்பதனாலேயே இந்த தற்காப்பு முயற்சியாகும்.

அதாவது நிகழ இருக்கும் விசாரணை அன்பு மனைவி தயாளுஅம்மையார் அன்பு துணைவியின் புதல்வி கனிமொழி ஆகியோர் மீது நேரடியாக நடாத்தப்பட இருககின்றமையே தன்மானத்??? தலைவரை பொங்கியெழ வைத்திருக்கின்றது.

முன்னர் சாதாரனமாக ஆரம்பித்த ஊழல் விசாரணை நடவடிக்கை ஊழல் வாரிசு ராசாவின் கைதுவரை சென்று கலைஞர் தொலைகாட்சி அலுவலகம்வரை அகலபரந்து நாளை குடும்பத்திற்குள் கும்மியடிக்க வருகிறது என்றதும் கருணாநிதி எடுத்த தற்காப்பு நடவடிக்கைதான் இந்த அதிரடியாகும்.

எப்படியாவது மத்திய அரசில் இருந்து விலகிவிட்டால் கருணாநிதியின் சொக்கத் தங்கம் சோனியாவாலோ ஊமை உடன்பிறப்பு மன்மோன் சிங்காலோ காப்பாற்ற முடியாதளவிற்கு உச்சநீதிமன்றத்தின் நேரடிப்பார்வையில் இருக்கும் ஊழல் விசாரனை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சி.பி.ஐ.யின் கால்கள் கோபால புரத்திற்கும் சி.ஐ.டி.கொலனிக்கும் வந்துவிட்டால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூப்பாடு போடுவதற்கு வசதியாக இருக்கும் அல்லவா!

ஐய்யைய்யோhh… ஐய்யைய்யோhh…. காப்பாத்துங்கள்… கொல்லப் போறாங்கள் என்று கூப்பாடு போட்டு உடன்பிறப்புகள் உள்ளிட்ட உலகத் தமிழர்களை உருகவைத்த அனுபவம் இருக்கல்லவா?

தற்போது தி.மு.க எடுத்துள்ள இந்த நிலைபாட்டிற்கு முதலில் ஆதரவு தெரிவத்து உற்சாகப்படுத்தியது நமது கருணாநிதியின் துரோகவாரிசு தி(தெ)ருமாவளவன் தான். அத்துடன் தி.மு.க. உடன்பிறப்கள் அணியணியாக அலைமோதி தலைமைக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இவை அணைத்தும் காங்கிரசிற்கு கிலி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

காங்கிரசும் தி.மு.க.வுடன் சேர்ந்து ஊழல் சகதியை இந்த நேரத்தில் பூசிக்கொள்ள விரும்பவில்லை என்றே தெரிகிறது. சிலவேளை அரசியலில் எதுவும் நடக்கலாம். நாளையே தி.மு.க. காங்கிரசு கூட்டணி பலமாக உள்ளது. தமிழக சட்டமன்ற தொகுதிகள் அனைத்திலும்(234) அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என கூட்டாக அறிக்கைவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எது எப்படியோ எமது இனம் அழியும் போது தமது குடும்ப ஆட்சி சுகத்திற்கு ஊறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தமிழர்களை கொன்று குவித்த சிங்களத்திற்கு ஆயுதங்களையும் ராடார்களையும் படைகளையும் கொடுத்து சகலவழிகளிலும் துணையாக இருந்த சோனியா தலைமையிலான காங்கிரசு அரசிற்கு ஒத்துழைப்புக் கொடுத்துவந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வும் சிங்களத்துடன் சேர்ந்து தமிழர்களை வேட்டையாடிய சோனியா தலைமையிலான காங்கிரசும் பிரிவது துரோகிகள் தாமாகவே அழிவதற்கான அறிகுறியாகவே உள்ளது.

தி.மு.க.வும் காங்கிரசும் பிரிந்து எதிர் எதிர் களத்திற்கு வந்தால் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தமிழக அரசியல் அரங்கை திகைப்பூட்டுவார்கள் எனநம்பலாம். அண்மையில் விக்கிலீக் இணையத்தளம் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது போல் தி.மு.க. காங்கிரசு எதிரெதிர் களத்தில் நிற்கும் போது முள்ளிவாய்காலில் இனத்தை அழித்த போது திரைமறைவில் இவர்களுக்குள் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் உடன்பாடுகளும் வெளிவந்து தமிழ் உலகத்தை ஆச்சரியப்படுத்தலாம்.

நாம் சிந்திய இரத்தமும் இழப்பும் ஒருபோதும் வீண்போகாது. துரோகிகள் வீழ்த்தப்படுவதே இன்றைய காலத்தின் தேவையாக இருக்கின்ற போது அது தாமாகவே நிகழ்வது எமது தியாகத்தின் வெளிப்பாடே அன்றி வேறென்ன?

துரோகிகளை வீழ்த்தி எதிரிகளை நிர்மூலமாக்கி எமது தாயகமாம் தமிழீழத்தை வென்றெடுத்து தாயக விடுதலையினை உயிர்மூச்சாக கொண்டு களமாடி வீரச்சாவடைந்த நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மானமறவர்களான மாவீரர்களது கனவை நனவாக்குவோம்.

இதனையே தமிழகத்தில் இருக்கும் தமிழின விடுதலையை விரும்பும் சகோதரர்கள் தமது வேதவாக்காக எடுத்துக் கொண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் துரோகிகளை வீட்டிற்கனுப்பி தமிழ்த் தேசிய சிந்தனையுடன் உங்களை நாடிவரும் தலைவர்களை வெற்றிபெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.

தமிழக மக்களிற்கு தேசியத் தலைவரின் செய்தி.

news“காலமும் கடல் கடந்த தூரமும் எம்மை பிரித்து நிற்கின்ற போதும் எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்த வேளையிலே எமக்காக எழுச்சி கொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவரிற்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஏம் மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களிற்கும் தமிழகத் தலைவர்களிற்கும் இந்திய தலைவர்களிற்கும் இந்த சந்தர்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே நேரம் எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம் மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.” இவ்வாறு கடந்த 2008இல் மாவீரர்தின உரையில் தமிழக மக்கள், தலைவர்களை நோக்கி கூறியிருந்தார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

இவ்வாறு உரிமையோடு உங்களிடம் ஓப்படைத்த பணியை எவ்வளவு தூரம் நீங்கள் நிறைவேற்றி வருகின்றீர்கள் என்பது எமக்குக் கிடைக்கின்ற செய்திகளும் தகவல்களும் உறுதிப்படுத்துகின்றன. இந்த சட்டமன்ற தேர்தல் களத்தையும் நீங்கள் கையிலெடுத்து தேசியத் தலைவரது எதிர்பார்ப்பினை நிறைவேற்ற வேண்டும்.

எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையிலையே தமிழக மக்கள் இன்று உள்ளனர் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். இந்த தேர்தலில் உங்களிற்கான தற்காலிக விடியலோ உலகத்தமிழினத்திற்கான நிரந்தர மீட்சியோ ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

இப்போது யார் நல்லவர் என்பதை பார்ப்பதை விடுத்து எமது இனம் அழிந்தாலும் பரவாயில்லை தனது குடும்பம் செழித்தால் போதும் என்ற வக்கிர மனப்பாண்மையுடன் செயற்பட்ட ஆளும் தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்புவதோடு கூட்டுக் களவாணி காங்கிரசை வேரோடு அழித்து விரட்டியடிப்பதுமே அதி முக்கிய கடமையாகும்.

இன்றைய இந்த நிலைக்கு நீங்கள்தான் காரணம். கேவலம் ஒரு பிரியாணிப் பொட்டலத்திற்காகவும் மது பாட்டிலுக்காகவும் சில ஆயிரம் ரூபா தாளிற்காகவும் உங்களது பொன்னான வாக்குகளை மதிகெட்டு இட்டு இவர்களை ஆட்சிபீடம் ஏற்றி அழகு பார்தது யார் நீங்கள்தானே? இனியாவது சிந்தியுங்கள். இனமானமா, இன மீட்சியா அல்லது கவர்ச்சித் திட்டங்களா முக்கியமென்று.

இலவசங்களையும் பண நோட்டுக்களையும் பிரியாணிப் பொட்டலங்களையும் மதுப் பாட்டில்களையும் அள்ளவீசி கடந்த காலங்களில் செய்த இனத்துரோகத்தினை மறைத்துவிடலாம் என நப்பாசைகொண்டு வரும் துரோகிகளை அடையாளம் கண்டு தோல்வியடையச் செய்து தமிழுணர்வும் இன உணர்வும் மிக்கவர்களை சட்டமன்றம் அனுப்புவீர்கள் என தமிழ் ஈழ விடுதலைக்கான போரில் வீரச்சாவடைந்த உலகம் கண்டிராத மாவீரர்களோடும் களச்சாவடைந்த இரண்டரை இலட்சம் தமிழுறவுகளோடும் நாமும் காத்திருக்கின்றோம் அந்த வலிநிறைந்த மே மாதத்தை.

2009 மே-16 இந்திய மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாகும் நாள். இன்றுபோல் பன்மடங்கு எதிர்பார்புடன் உலகத் தமிழினமே தவியாய் தவித்திருந்த நேரம். இப்போது நிணைத்தாலும் ஏமாற்றம் தாங்கமுடியவில்லை.

ஆம் இனமே அழிந்து கொண்டிருந்த போது இனமான உணர்வு மேலிட்டதால் திரைப்படத்துறையில் தன் சீவியத்தை பார்த்துக் கொண்டிருந்த சீமான் செந்தமிழன் சீமானாக திரைத்துறை நண்பர்களுடன் இணைந்து தமிழக வீதிகளெங்கும் கொளுத்தும் வெய்யில் சுட்டெரிக்க காங்கிரசு தி.மு.க. கூட்டணியை பழிவாங்க ஓடி ஓடி வந்த போது திரும்பிப் பார்க்க மறுத்து துரோகிகளை மீண்டும் அரியணை ஏற்றி எம்மை ஏமாற்றிய நாளல்லவா?

மே-16 இந்தியாவில் காங்கிரசும் தமிழகத்தில் தி.மு.க.வும் வெற்றியீட்டிவிட்டார்கள் என்ற அதிர்ச்சி செய்தியும் முள்ளிவாய்காலில் எல்லாமும் முடிந்து விட்டதாகவும் இடியாய் வந்திறங்கியசெய்தியும் ஒருசேர கிடைத்து எம்மை உலுக்கியெடுத்த நாட்களல்லவா…! ஏப்படிதான் மறக்க முடியும்!?

எப்படி மறப்போம்..? இந்திய பாராளுமன்றத்திலும் உலக மன்றங்களிலும் தலைவன் பிரபாகரன் எண்ணங்களை வீரத்துடனும் துணிவுடனும் முழங்கிவந்த அன்பு அண்ணன் வைகோ அவர்களை அந்த மண்ணுக்கும் மொழிக்கும் சம்பந்தமில்லாத ஒருவனிடம் தோல்வியடைய வைத்ததை எப்படி மறக்க முடியம்? தாங்க முடியும்?

வலியையும் ஏமாற்றத்தையும் இழப்பையும் உலகத் தமிழர்களது வரலாற்றில் தந்து சென்ற மே மாதத்தில் துரோகத்தின் வீழ்ச்சியை எதிர்பார்பது உணர்வுபூர்வமானது மட்டுமல்ல உண்மையானதுமாகும்.


“தமிழரின் தாகம் தமிழ் ஈழத்தாயகம்”

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்(08-03-2011)

Comments