முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இந்தியாவே முன்னின்று நடத்தியது: விக்கிலீக்ஸ்


வன்னியில் போர் உக்கிரமடைந்தபோது அதனை தடுப்பதற்கு அனைத்துலக சமூகம் முற்பட்டபோது அதனை தந்திரமாக இந்தியா தடுத்ததுடன், இறுதி நேரத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்கு இந்தியாவே காரணம் என விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

2009 ஆம் ஆண்டு வன்னியில் போர் உக்கிரமாக நடைபெற்றபோது அதனை நிறுத்துவதற்கு மேற்குலகம் முற்பட்டபோதெல்லாம் இந்தியா தடுத்துவிட்டது. அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் போரை நிறுத்துவதற்கு முற்பட்டிருந்தன. ஆனால் அதற்கு இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தது.

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் அமெரிக்க அதிகாரிகளை தொடர்புகொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் நாம் கூறும் வரை வாயை முடிக்கொண்டு இருக்குமாறு எச்சரிக்கையும் விடுத்திருந்ததாக அமெரிக்க தூதரகத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து அனுதாபம் தெரிவிப்பது போல இந்தியா நடித்தபோதும், அது சிறீலங்கா அரசின் போருக்கு ஊக்கம் அளித்தே வந்திருந்தது. ஐக்கிய நாடுகள் சபை ஊடாகவோ அல்லது வெளிநாடுகளின் பொதுமன்னிப்பு ஊடாகவோ விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் காப்பாற்றப்படும் ஒப்பந்தங்களை எதனையும் மேற்கொள்ளவேண்டாம் என இந்தியா மகிந்தாவுக்கு கடும் உத்தரவுகளையும் வழங்கியிருந்தது.

மேற்குலக இராஜதந்திரிகளை ஏமாற்றுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் ஆகியோர் சிறீலங்காவுக்கு சென்றதுடன், மனிதாபிமான நெருக்கடிகள் குறித்தும் அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.

ஆனால் இந்த அறிக்கைகள் மேற்குலகத்தை ஏமாற்றும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டவை. அவர்கள் இரகசியமாக சிறீலங்கா அரசுக்கு ஆதரவுகளை வழங்கியதுடன், ஐ.நாவோ அல்லது வெளிநாடுகளின் ஆதரவுடனோ போரை நிறுத்தும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவேண்டாம் என சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுக்கு கடும் உத்தரவுகளையும் இந்தியா விடுத்திருந்தது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிறீலங்காவுக்கு சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பயணம் தொடர்பான தகவல்களை சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் விக்ரம் மிஸ்ரி சிறீலங்காவில் உள்ள அமெரிக்க தூதுவருக்கு வழங்கியிருந்தார்.

விடுதலைப்புலிகளுடன் நடைபெற்றுவரும் போரை நிறுத்துவதற்கு ஐ.நாவின் உதவிகள் தேவையற்றது என சிறீலங்கா அரசு தம்மிடம் தெரிவித்துள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் மேனன், அமெரிக்க அதிகாரி பீற்றர் பேலேஜ் இற்கு 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார்.

போரை நிறுத்துவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற தோற்றப்பாட்டை அவர்கள் அமெரிக்காவுக்கு ஏற்படுத்த முனைந்திருந்தனர்.

அதனை தொடர்ந்து மூன்று வாரங்களின் பின்னர் சிறீலங்காவுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் டெஸ் பிரவுணி புதுடில்லிக்கு சென்றபோது, மேனன் மற்றும் நாரயணன் ஆகியோர் தாம் சிறீலங்கா மீது அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

போரில் மகிந்தா வெற்றிபெற்றால் அவர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை உடனடியாகவே முன்வைப்பார் என அவர்கள் பிறவுணியை சமாதானப்படுத்தியும் உள்ளனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 அம் நாள் இந்திய வெளிவிவகாரச் செயலாளரை தொடர்புகொண்ட அமெரிக்க அதிகாரி ஊடனடியாக மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தபோதும், அதனை இந்தியா நிராகரித்து விட்டதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments