குணத்தைக் காட்டிய ஜெயலலிதா! யார் கட்டுப்பாட்டில் அதிமுக?


ஒருவழியாக அஇஅதிமுகவில் ஏற்பட்ட கூட்டணி களேபர காட்சிகள் இன்று மாலைக்குள் சுமூக நிலையை எட்டக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், வெகு அருகில் நின்ற வெற்றியை சிக்கலுக்கு உள்ளாக்கியது யார் என்ற கேள்வி அதிமுக தொண்டர்களை உலுக்கி கொண்டிருக்கிறது.

திமுகவினரையே புருவம் உயர்த்த வைக்கும் விதமாக நேற்றுமுன்தினம் வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியல், கூட்டணி கட்சித் தலைவர்களின் மனதை ரண களமாக்கியிருக்கும் என்பதில் வியப்பேதும் இருக்க முடியாது.

மதிமுக தலைவர் வைகோவை ஒருபுறம் 5 சீட், 6 சீட் என்று நோகவைத்து அவரை 3ஆவது அணி பற்றி யோசிக்கும் நிலைமைக்கு தள்ளிவிட்டுவிட்டு, மறுபுறம் கம்யூனிஸ்ட் கட்சிகள், விஜயகாந்தின் தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவதாக ஒப்புக்கொண்ட தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிற்பதாக வெளியிட்ட வேட்பாளர் பட்டியல், கூட்டணி கட்சிகளை இந்த அளவுக்கு வெகுண்டு எழ வைத்திருக்கும் என ஜெயலலிதாவே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

உருவ பொம்மை எரிப்பு, அதிமுகவுக்கு எதிராக கோஷம் என தேமுதிக, கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக தொண்டர்கள் காட்டிய எதிர்ப்பை பார்த்து சாமான்ய அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் மிரண்டு போயினர்.

இதுவே மற்ற சமயங்களில் என்றால் அவர்களும் களமிறங்கி பதிலடி கொடுத்திருப்பார்கள் அல்லது தனது தலைவியின் உருவபொம்மை எரிக்கப்படுவதை தடுக்க முயற்சித்து மோதலில் ஈடுபட்டிருப்பார்கள்.

ஆனால் கூட்டணி கட்சியினரின் கோபத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்ததால் அவர்களும் அமைதியாகிவிட்டனர்.

இந்நிலையில்தான் நடந்த குளறுபடிகளுக்கு ஜெயலலிதா தோழி சசிகலா குடும்பத்தினரின் உள்ளடி வேலைகள்தான் காரணம் என்றும், ஜெயலலிதா தயாரித்த வேட்பாளர் பட்டியல் வேறு, வெளியானது வேறு என்று ஒரு புதுக் கதையை அதிமுக வட்டாரம் கசியவிட்டது.

அதாவது இந்த முறை வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்தவர் சசிகலாவின் உறவினரான ராவணனாம்.

ஜெயலலிதா 60 முதல் 70 இடங்களுக்கு ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருந்த நிலையில், சசிகலா தரப்பு உறவினர்களின் சிபாரிசுடன் கூடிய ஒரு முழு வேட்பாளர் பட்டியலையும் தனியாக தயாரித்து வைத்திருந்தாராம் ராவணன்.

அந்தப் பட்டியலில்தான் கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்ட தொகுதிகளும் இடம்பெற்றுவிட்டதாகவும், இவையெல்லாமே சசிகலா உறவினர்கள் பணம் வாங்கிக்கொண்டு சேர்த்த பெயர்களாக இருந்ததாகவும் கூறுகிறார்கள்.

அப்படியான ஒரு நிலையில்தான், நேற்றுமுன்தினம் வளர்பிறை என்பதால், "நான் தயாரித்த 60 முதல் 70 இடங்களுக்கான முதல்கட்ட பட்டியலை வெளியிடுங்கள். வைகோவுடன் பேசிக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதாவிடமிருந்து உத்தரவிட்டாராம்.

ஆனால் இந்த இடத்தில்தான் சசிகலா அண்ட் கோ உள்ளே புகுந்து ஆட்டையை குழப்பி, ஜெயலலிதா தயாரித்த பட்டியலை வெளியிடாமல், ராவணன் தயாரித்து வைத்திருந்த 160 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு விட்டதாகவும், இதுதான் குழப்பத்திற்கு காரணமாகிவிட்டது என்கிறார்கள்.

இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறதோ;ஜெயலலிதாவுக்கே வெளிச்சம்! ஆனால் கட்சியின் மூத்த தலைவர்களானாலும் சரி; கூட்டணி கட்சித் தலைவர்களானாலும் சரி...உண்மை என்ன என்பதை நெருங்கி சென்று கேட்டு விளக்கம் பெற முடியாத அளவுக்கு தன்னைத் தானே ஒரு மகாராணி உயரத்தில் வைத்துக்கொள்ளும் அவரது இந்த மமதைதான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் என்பதை மறுக்க முடியாது.

நிலைமை விபரீதமான பின்னராவது கூட்டணித் தலைவர்களை அழைத்து பேசி விளக்கம் அளித்திருக்கலாம். ஆனால் அப்போது குளறுபடிக்கு தான் காரணம் அல்ல என்று ஜெயலலிதா கூறும் பட்சத்தில் கட்சி தனது பிடியில் இல்லை என்பதை தாமே ஒப்புக்கொண்டது போல் ஆகிவிடும் என ஜெயலலிதா யோசித்திருக்கலாம்.

அவ்வாறு நடந்த குளறுபடிக்கு சசிகலா குடுபத்தினர்தான் காரணம் என்றால் கட்சி யார் கட்டுபாட்டில் உள்ளது? ஜெயலலிதாவையும் மீறிய அதிகார சக்தியாக சசிகலா குடும்பம் திகழ்கிறாதா? இப்பொழுதே இப்படி என்றால்,நாளை அதிமுக ஆட்சிக்கு வந்தால் அதிகார மையம் யாரிடம் இருக்கும்?

இப்போது திமுக ஆட்சியில் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி மற்றும் கனிமொழி ஆகியோர் அதிகார மையங்களாக திகழ்வதாகவும், ஒரு அதிகார மையம் பிறப்பிக்கும் உத்தரவை மற்றொரு அதிகார மையம் ரத்து செய்கிறதாகவும், இதனால் அதிகாரிகள் யார் சொல்வதை கேட்டு நடப்பது என முழி பிதுங்கி நிற்பதால் அரசு நிர்வாகம் நொண்டியடிப்பதாகவும் ஜெயலலிதா மேடைகளில் முழங்கியும், அறிக்கை விட்டும் வந்தார்.

அதில் உண்மை இல்லாமலும் இல்லை.ஆனால்," தற்போதையை வேட்பாளர் பட்டியல் குளறுபடியை பார்த்தால் நாளை அதிமுக ஆட்சிக்கு வந்தாலும், திமுக ஆட்சி அதிகார மையங்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல், சசிகலா குடும்பத்தினரின் அதிகார மையங்கள் கடந்த காலங்களைப் போன்றே தலையெடுக்கும் ஆபத்து உள்ளதே?"
என்று அதிமுகவில் ஓரம்கட்டப்பட்ட பழைய எம்.ஜி.ஆர். காலத்து தலைவர்கள் கேட்கின்றனர்.

வாதத்திற்காக கட்சியில் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு இல்லை; ஜெயலலிதாவுக்கு தெரிந்தே அவரது முழு ஒப்புதலுடன்தான் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.கட்சி முழுவதும் அவரது கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று கூறப்படுமானால், வேட்பாளர் பட்டியல் விடயத்திலேயே இத்தனை ஆண்டு காலம் உடன் இருந்த வைகோ மற்றும் இதர கூட்டணி கட்சிகளை மதிக்காமல், அவர்களிடம் கலந்து பேசாமல் தன்னிச்சையாக பட்டியலை வெளியிட்டவர், நாளை ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்தால் கூட்டணி கட்சிகளை எட்டி உதைத்து வெளியே தள்ளுவது ஒருபுறம் இருக்கட்டும்.

மீண்டும் எஸ்மா, மதமாற்ற தடுப்புச் சட்டம், ஒரே நாள் இரவில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது போன்ற தனது பழைய தாண்டவத்தை ஆடமாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? என்ற கேள்வி, திமுக ஆட்சியில் வெறுத்து மாற்று கட்சிக்கு ஓட்டுபோட முடிவு செய்திருக்கும் வாக்காளன் மனதிலும்,கட்சிக்காக ஓட்டு கேட்க களமிறங்கி பாடுபடும் அதிமுக தொண்டன் மத்தியிலும் எழுவதை தவிர்க்க முடியாது!

கூடவே கூட்டணி கட்சித் தொண்டர்களிடையே இதுவரை நிலவி வந்த ஒரு சுமூக நிலை மீண்டும் தொடருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது கூட்டணி கட்சித் தலைவர்களை ஜெயலலிதா மீண்டும் அழைத்து பேசி வருவதாகவும், மதிமுவுக்கும் அவர்களை ஓரளவு திருப்திபடுத்துகிற விதமாக 16 தொகுதிகள் வரை தர முடிவு செய்துள்ளதாகவும், இன்று மாலைக்குள் சுமூக முடிவு எட்டப்படும் என்றும் அதிமுக இரண்டாம் மட்டத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடந்துபோனது தவறு என்று உணர்ந்ததால், கூட்டணி கட்சித் தலைவர்களை மீண்டும் அழைத்து பேசுகிறார் ஜெயலலிதா.

நாளை ஆட்சியை பிடித்த பின்னர் ஆட்சி நிர்வாகத்திலும் இதேப்போன்ற தடாலடி பாணியை காட்டினால், கூட்டணிக் கட்சித் தலைவர்களைப் போன்று வாக்களர்கள் ஜெயலலிதா கூறுவதை கேட்டுக்கொள்ள தயாராக இருக்கமாட்டார்கள்!

Comments