புரட்சியைத் தூண்டும் புதிய கருவிகள்

கடந்த இரண்டு மாதங்களில் உலகில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. அவற்றுள் முக்கியமானவையும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பவை வட ஆபிரிக்க நாடுகளில் நடைபெறும் சர்வாதிகார ஆடசிகளுக்கு எதிரான போராட்டங்கள். ரியூனிசியாவில் ஆரம்பித்த போராட்டங்கள், எகிப்தில் வெற்றி பெற்று, இப்போது லிபியாவில் நாற்பதாண்டு காலமாக நடைபெறும் அதிபர் அல் முகம்மர் கடாபிக்கு எதிராகத் திரும்பியுள்ளது. சில இலத்தீன் அமெரிக்க நாடுகளைத்தவிர, முழு உலகமும் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ள நிலையில், தனது ஆட்சியை தக்கவைக்க, அவர் மேலும் மேலும் மக்கள் விரோத நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார். இன்னும் சில நாட்களில் கடாபியின் கதை முடிந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வட ஆபிரிக்காவிலும், மத்திய கிழக்கிலுள்ள சில நாடுகளிலும், இதுவரைகாலமும் இல்லாத ஒரு மக்கள் எழுச்சி ஏன் இப்போது தோன்றியுள்ளது என்பது யாருக்கும் இயல்பாக வரும் ஒரு வினாவாக இருக்கிறது. இதற்கு, ஏற்கனவே இதுபோன்ற புரட்சி நடைபெற்று வெற்றி பெற்ற நாட்டு மக்களைப் பார்த்து, அண்டை அயலில் உள்ள நாட்டு மக்கள் எழுச்சி கொள்கிறார்கள் இன சாவகசமாக ஊடகங்கள் விளக்கமளிக்கின்றன. இது ஒரு மேலோட்டமான விளக்கம் என்பதில் ஐயமில்லை. இன்னும் சில தரப்பினர், இணைய வலையமைப்பு தொழிநுட்பத்தில், புதிதாக அறிமுகமாகியிருக்கும், சமூக வலைத்தளங்கள் ஜனநாயகத்திற்கான தேவையை உணர்த்துவதாகவும். அவையே மக்கள் புரட்சியை ஊக்குவிக்கும் ஊடகங்களாக உள்ளதாக கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

கட்டாரிலிருந்து இயங்கும் அல்ஜசீரா தொலைக்காட்சியே புரட்சியாளர்களை து}ண்டி விடுவதாக கடாபி உட்பட நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் அரச தலைவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒளிப்படங்களை தரவேற்றம் செய்து பரிமாறப் பயன்படுத்தப்படும் வலையமைப்பான Flicker இல் காணப்பட்ட ஒரு ஒளிப்படம் Facebook + Twitter + Al Jazeera = Revolution என வெளிப்படுத்துகிறது.

சமூகவலைத்தளங்கள் கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்த உதவுகின்றன என்பதும் இது முன்னெப்பொழுதும் காணப்படாத ஒரு நிலமை என்பதனையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அவை மக்கள் புரட்சியை ஏற்படுத்துகின்றனவா என்பது பெரும் ஆய்வுக்குரிய விடயமல்ல. அதனுடன் தொடர்புபட்ட விடயங்களை அலசிப்பார்த்தாலே இது தெரிந்துவிடும். இருப்பினும் இது தொடர்பான ஆய்வுகளும் விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வட ஆபிரிக்க நாடுகளில் நடைபெறும் மக்கள் புரட்சிக்கு முன்னதாக வேறு சில நாடுகளில் சமூக வலைத்தளங்கள், செல்பேசி குறுஞ்செய்தி சேவை போன்றவற்றின் ஊடாக அரசியல் செயற்பாடுகள் நடைபெற்றுருக்கின்றன. அவற்றில் சில வெற்றி பெறறிருகின்றன, சில தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. பொதுவில் இப்போராட்டங்கள் வெற்றி பெறுமா என்பதைக் காட்டிலும், இன்னமும் பல நாடுகளில் இவை தொடரப்போகின்றன என்பதனை இலகுவில் எதிர்வு கூறிவிட முடியும். ஏற்கனவே சீனாவில் பேஸ்புக் உட்பட பல சமூக வலையமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளமையை ஒரு கொசுறுச் செய்தியாக இங்கு இணைக்கிறேன்.

2009 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் மோல்டோவா நாட்டில், அந்நாட்டு இளைஞர்கள் நடாத்திய போராட்டத்தை “ரூவிற்றர் புரட்சி” என வர்ணிக்கிறார்கள். அந்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் கொம்யூனிஸ்ட்டுகள் வெற்றிபெற்று மீள ஆட்சிக்கு வந்தபோது, தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சுமத்திய அந்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள், (நாட்டிலிருந்தவர்களும், வெளிநாடுகளில் குடியேறியிருந்தவர்களும்) அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை ஏப்பிரல் 6ம் திகதி ஆரம்பித்தார்கள். இதற்குரிய அழைப்புகள் ரூவிற்றர் எனும் இருவரி பதிவு ஊடகத்தினு}டாக அனுப்பப்பட்டன. சில நாட்களே நடைபெற்ற இப்போராட்டம், அவர்களது கோரிக்கைக்கு மோல்டோவா நாட்டு அரசு செவிசாய்த்தமையால் வெற்றி கண்டது.

இதே காலப்பகுதியில் அதாவது ஏப்பிரல் 6ம்திகதி லண்டனில் தமிழ் மக்களால் வெஸ்ற்மினிஸர்ர் பால முற்றுகைப் போராட்டம் நடாத்தப்பட்டமையையும், இதற்குரிய அழைப்புகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்பட்டமையையும் இங்கு கவனத்தில் கொள்க.

2009 ஜுன் மாதத்தில் ஈரானில் நடைபெற்ற தேர்தல்களைத் தொடர்நது அதன் அதிபர் மஹ்முத் அஹ்மதிநஜாத் மீளத் தெரிவு செய்யப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்வதிலும் ரூவிற்றர், யூரியுப், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இப்போராட்டம் தோல்வியில் முடிவடைந்ததுடன், இன்றுவரை அவர்களால் அஹ்மதிநஜாத் ஐ அசைக்க முடியவில்லை.

ருவிற்றர், மற்றும் குறும் செய்திகளினூடு பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு செய்தி பரிமாறும் தொழினுட்பம் crowdsourcing என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அண்மைக் காலமாக, இது தொடர்பான செயற்திட்டங்களும், பரீட்சார்த்த நடவடிக்கைகளும் பல்வேறு அரசுசாரா நிறுவனங்களால் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவை எல்லாவற்றையும் பார்க்குமிடத்து, ஒரு காலத்தில், கலாசினிகோவ் துப்பாக்கி எவ்வாறு புரட்சியின் அடையாளமான கருவியாகப் பார்க்கப்பட்டதோ அதே இடத்தில் சமூகவலைத்தளங்கள் இருப்பதான ஒரு தோற்றப்பாடு தெரியலாம், ஆனால் இது மேற்குலகின் உள்நோக்கம் கொண்ட செயற்பாடு அன்றி வேறொன்றுமில்லை.

தங்களுடைய நலன்களுக்கு இசைவாக நடந்துகொள்ளாத ஆட்சித்தலைவர்களை உள்நாட்டு கலவரங்களைக் கொண்டு அடக்குவதற்கு சமூக வலைத்தளங்கள் கருவியாகப் பயன்படுகின்றனவே தவிர, உண்மையில் அவை புரட்சியாளர்கள் ஏந்தும் கருவியாக எடுத்துக் கொள்ள முடியாது. தற்போது லிபியாவில் நடபெறும் விடயங்களே இதற்கு சாட்சியாக அமைகிறது.

லிபியாவில் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் சில நு}றுபேர் கொல்லப்பட்டவுடன் (இப்போது இத்தொகை இரண்டாயிரத்தை தாண்டிவிட்டது) விரைந்து லிபியாவை எச்சரித்த மேற்குநாடுகள் எல்லாச்சந்தர்ப்பத்திலும் அவ்வாறு நடந்து கொள்வதில்;லை என்பதை நாம் நன்கறிவோம்.

கடாபியின் பல பில்லியன் பவுண்ஸ் பெறுமதியான சொத்துக்களை பிரித்தானியா முடக்கியுள்ளதுடன், கடாபிக்கு எதிராக போர்க்குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடையாக இருக்கக்கூடிய இராசதந்திர கவசத்தையும் அகற்றியுள்ளது. கடந்த சனியன்று ஐநா மனிதவுரிமை கவுன்சிலிலிலுருந்து லிபியாவை வெளியேற்றுவதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இவை 2009 ல் இலங்கை விவகாரத்தில் மேற்குலகமும் மற்றய நாடுகளும் எடுத்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறானது.

இவற்றிலிருந்து மக்கள் புரட்சியின் வெற்றி கருவிகளில் தங்கியிருக்கவில்லை என்பதும், இங்கு சர்வதேச அபிப்பிராயம் மட்டுமே தீர்மானிக்கும் சக்தியாக அமைந்துள்ளது என்பதும் தெளிவாகிறது.

இருப்பினும், சனநாயகம், மனிதவுரிமை போன்ற விடயங்களை சர்வதேச சமூகம் இலகுவில் தட்டிக்கழிக்க முடியாதுள்ள நிலையில் இக்கருவிகளின் பயன்பாடு முக்கியம் பெறுகிறது என்பதனை மறுப்பதற்கில்லை. அதுவும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை (counter insurgency) போன்ற சாக்குப் போக்குகள் சொல்ல முடியாத நிலையில், சர்வதேச அபிப்பிராயத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகத் திருப்புவதிலும், குரலற்றவரின் குரலை வெளிக்கொணர்வதிலும் சமூக வலைத்தளங்களைக் கருவியாக உபயோகிக்க முடியும் என்பதை மட்டும் உறுதியாகக் கூறமுடியம்.

நன்றி: ஒரு பேப்பர், மார்ச் 4, 2011

Comments