![](http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1103/10/images/img1110310038_1_1.jpg)
தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இன்று இரவுடன் என்ன தொகுதிகள் என்பது முடிவாகிறது. மொத்தத்தில் தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பகிர்வு முடிந்தாகி விட்டது.
ஆனால் அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. முதலில் சிறிய கட்சிகளான புதிய தமிழகம், குடியரசு கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றுக்கு தொகுதிகளை வழங்கிவிட்டார் ஜெயலலிதா. இடதுசாரிகள், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் 2 கட்டமாக அ.இ.அ.தி.மு.க தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை காக்க வைத்துவிட்டது. திடீரென இரவில் விஜயகாந்தை அழைத்து 41 தொகுதிகளை வழங்கி விட்டார் ஜெயலலிதா. இது தி.மு.க. - காங்கிரஸ் இடையே உரசல் ஏற்படுவதற்கு முன்பே நடந்தேறி விட்டது.
இலவு காத்த கிளி போல காத்திருக்கும் ம.தி.மு.க., இடதுசாரி கட்சிகளுக்கு இதுவரை அ.இ.அ.தி.மு.க தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது பற்றி விசாரித்தபோது இவர்கள் அதிக தொகுதி கேட்பதால்தான் தாமதம் என்கிறது அ.இ.அ.தி.மு.க வட்டாரங்கள்
![](http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1103/10/images/img1110310038_2_1.jpg)
ஆனால், அ.இ.அ.தி.மு.க தலைமையோ அத்தனை தொகுதிகளை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்குவதாக இல்லை என்று கூறப்படுகிறது. அதிக தொகுதிகளைக் கேட்கும் ம.தி.மு.க. போட்டியிடத் தகுதியான வேட்பாளர்கள் இருக்கிறார்களா என்று அ.இ.அ.தி.மு.க தலைமை கேள்வி எழுப்பியதாகவும், அதைக்கேட்டு வைகோ கோபப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வெற்றி பெறக்கூடிய 10 தொகுதிகளை ஒதுக்குவதாகவும், அந்த தொகுதிகளில் வைகோ முழுக்கவனத்தையும் செலுத்தி வெற்றியடையலாம் என ஜெயலலிதாவே நேரடியாக அவரிடம் தெரிவித்ததாகவும் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
இதனிடையே மார்க்சிஸ்ட் கட்சி கேட்டும் 15 தொகுதிகளை ஒதுக்க அ.இ.அ.தி.மு.க தலைமை தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தொகுதிகளின் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ள மார்க்சிஸ்ட் கட்சி, அதையாவது ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. 10 தொகுதிகளை கேட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என அ.இ.அ.தி.மு.க தெரிவித்துள்ளதாம்.
![](http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1103/10/images/img1110310038_3_1.jpg)
ம.தி.மு.க, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை எடுத்துக் கொண்டால் மொத்தத்தில் 6 சதவீதத்திற்கு மேல் கிடையாது என்று கருதும் ஜெயலலிதா, விஜயகாந்த் மட்டும் இருந்தாலே போதும் என்று நினைப்பதால்தான் இந்த தாமதம் என்கிறது அ.இ.அ.தி.மு.க வட்டாரங்கள்.
ஆனாலும் ம.தி.மு.க, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை விட்டால் பாதிப்பு ஜெயலலிதாவுக்குதான் என்றும் கூறுகிறது அ.இ.அ.தி.மு.க வட்டாரம். கடைசியாக ம.தி.மு.க.வுக்கு 15 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 11 இடமும், இந்திய கம்யூனிஸ்டுக்கு 10 இடமும் கொடுக்கப்படலாம் என்று கூறுகிறது அந்த வட்டாரம். பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
Comments