ராஜபக்ஷேவின் நாடகமா?! நாகை மீனவர்கள் சிறைப்பிடிப்பு..

'நாகை மாவட்டம் அக்கரைப்​பேட்டை, கீச்சாங்குப்பம் மற்றும் காரைக்காலில் இருந்து, 18 படகுகளில் 112 மீனவர்கள் கடந்த 12-ம் தேதி கடலுக்குச் சென்றனர். 'எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள்!’ என்று 15-ம் தேதி மதியம், யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அவர்கள் பிடிக்கப்பட்டு, 16-ம் தேதி மாலை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்!’ என்று செய்தி வெளியானது.

அடுத்து, 'நாகை மீனவர்களை, ஈழத்து மீனவர்கள்தான் சுற்றிவளைத்துப் பிடித்து, உள்ளூர் போலீஸிடம் ஒப்படைத்தார்கள்..!’ என்று இலங்கைத் தரப்பில் செய்தி வந்தது. எப்போதும் இல்லாதவகையில், 'நாகை மீனவர்களை விடுதலை செய்ய வலி​யுறுத்தி இலங்கைத் துணை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்!’ என தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளி​யிட்டது. கனிமொழி முதலான சில தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகி விடுதலை ஆனார்கள். ஆனால், வழக்கமாக குரல் எழுப்பும், இன உணர்வு அமைப்புகளின் தலைவர்கள் யாருமே வாய்திறக்கவில்லை!

உண்மையில் நடந்தது என்ன?

இலங்கை வடமராட்சி வடக்குக் கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத் தலைவர் அந்தோணிப்​பிள்ளை எமிலியாம் பிள்ளையிடம் பேசினோம். ''சம்பவத்​தன்று, எங்கட ஆட்கள் முதல் நாள் கடலில் போட்ட வலைகளை எடுக்கப் போக... இந்திய இழுவைப் படகுகளால் வலைகள் நாசமாகிக் கிடந்திருக்கு. எங்கட ஆட்கள் கோபத்தில் பேச, இரு தரப்பிலயும் வாக்குவாதம்! தமிழக இழுவைப் படகுகளைக் கரைக்குக் கொண்டு வந்தோம். 30 வருடங்களா போரால் துன்பத்தை அனுபவிச்​ சுட்டு, இப்போதான் ஆழ்கடலில மீன்பிடிக்க அனுமதி கிடைச்சுது. போரில் குடும்ப உறவுகளை இழந்து, சொத்துகளை வித்தோ... கடன் வாங்கியோதான் மீன்பிடி சாதனங்களை வாங்கியிருக்கோம். இந்த நேரத்தில இழுவைப் படகைக் கொண்டுவந்து, எங்கட மீன்பிடி சாதனங்களை அழிக்கலாமா? வலை போட்டுப் பிடிச்சா, மேற்பரப்பில உள்ள மீன்களைப் பிடிக்கலாம், அடியில மீன்குஞ்சுகள் இருக்கும். தொடர்ந்து மீன்வளம் அழிக்கப்படாமல் இருக்கும். தமிழகத்தில் இருந்து வர்ற சகோதரர்களை எங்க கடற்பிரதேசத்தில மீன்பிடிக்கக் கூடாதுன்னு சொல்லல. எங்களப் போலவே வலையைப் போட்டு மீன்பிடிங்க. நீங்க இழுவைப் படகைப் பயன்படுத்துறதால எங்கட இயற்கை அழிஞ்சதுன்னா, இந்தத் தொழிலையே நம்பியிருக்கிற நாங்க எங்க அய்யா போக?' என்று கேட்டார் எமிலியாம்பிள்ளை.

''ஈழத் தமிழ் மீனவர்களின் இந்தக் குரலின் நியாயத்தை, தமிழக மீனவர்கள் தரப்பில் யாரும் மறுக்கவில்லை. இரு தரப்பு அரசாங்கங்களும் உயர்மட்ட அளவில் கறாராகப் பேசி, இதில் முடிவுகாண வேண்டும்!'' என்கிறார்கள், தமிழக மீனவர் சங்கங்களின் தலைவர்கள். இதையட்டி சொல்லப்படும் இன்னொரு கருத்துதான் முக்கியமானது. 'தமிழக மீனவர்களின் அத்துமீறலே பருத்தித்துறை சிறைப்பிடிப்புக்குக் காரணம் என்பது உண்மை அல்ல; சிங்கள ராஜபக்ஷே அரசின் சகுனித் திட்டம்தான் இது!’ என்கிறார்கள்.

நாம் விசாரணையில் இறங்கியபோது, ''தமிழக மீனவர்​களை சிங்களக் கடற்படை படுகொலை செய்வதும், தாக்கிக் கொள்ளையடிப்பதும் ராஜபக்ஷே அரசின் மீதான இனப்படுகொலைக் குற்றச்சாட்டோடு சேர்க்கப்பட்டு, பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதில் உடனடியாகத் தப்பிக்கவேண்டிய கட்டாயத்துக்கு ராஜபக்ஷே தள்ளப்பட்டு உள்ளார். இதனால்தான் சமீபமாக தமிழக மீனவர் படுகொலை செய்யப்பட்டபோதெல்லாம், 'யாரோ மூன்றாவது சக்தியின் கைவரிசை’ என்று இலங்கை அரசுத் தரப்பில் மறுப்பு வெளியிடப்படுகிறது. 'தங்கள் மீது தவறு இல்லை என மட்டும் சொன்னால் போதாது, தமிழக மீனவர்கள்தான் தவறுக்குக் காரணம்!’ என்று நிரூபித்துக் காட்டவும் முடிவுசெய்தனர். அதன்படி, கடந்த செவ்வாயன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் இருந்த தமிழக மீனவர்களின் 18 படகுகளை, சிங்களக் கடற்படையின் அதிவேக டோரா தாக்குதல் படகுகள் சுற்றிவளைத்தன. மேலும் கடற்படையினர், கரையில் உள்ள மீனவர்களை வரவழைத்து அவர்களே தமிழக மீனவர்களைப் பிடித்ததாகக் கூறுமாறு கட்டாயப்படுத்தினர். அவர்களும் அப்படி​யே கூறுகின்றனர். இதன் மூலம் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கிறார்கள் என்று ஈழத்தமிழரை வைத்தே சொல்லவைக்கும் திட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். ஈழத்தமிழ் மீனவர்களின் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை ராஜபக்ஷேவுக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்வது எல்லாம் பொய். தமிழக இழுவைப் படகுகளால் ஈழ மீன்வளத்துக்கு பாதிப்பு என்பதற்காகவும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கவில்லை. ஏனென்றால், யாழ்ப்பாணத்தில் செல்வாக்குள்ள ஒரு அரசியல்வாதி தடைவிதிக்கப்பட்ட இழுவைப்படகு மூலம் அரசு ஆதரவுடனேயே அங்கு மீன்பிடித் தொழிலைப் பெரிய அளவில் செய்ய முயன்றார். பல தரப்பினரும் எதிர்த்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். எனவே, பருத்தித்துறை சம்பவம் என்பது முழுக்க முழுக்க ராஜபக்ஷே தரப்பு திட்டமிட்டு நடத்திய நாடகம்!' என்றனர் நம்மிடம்.

இன்னொரு புறம், ''ஒரு முறை தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் தாண்டி கிராமத்துக்குள் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுப் போனவர்கள்தான், சிங்களக் கடற்படையினர். இந்தியக் கடல் பகுதியில் புகுந்து நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை சுட்டுக் கொன்றவர்கள். அவர்களின் ஊருக்கு அருகில் தமிழக மீனவர்கள் போகும்போது, சும்மா பிடித்துக்கொண்டுபோய் நீதிமன்றத்தில் நிறுத்துவார்களா? பருத்தித்துறை பிடித்துவைப்பு நாடகத்தின் மூலம் சிலர் இனத்துரோகக் கறையை எளிதாகத் துடைக்க முயல்கிறார்கள். அது நடக்காது!' என்கிறார்கள், தமிழ் இன உணர்வாளர்கள்.

என்னதான் நடந்தது என்றாலும், இனிமேலும் இப்படி நடக்காமல் இருக்கட்டுமே!

- இரா.தமிழ்க்கனல்

Comments