சர்வதேச அனுசரணை பெற நாடுகடந்த அரசு சிறந்த அணுகு முறை ஆனால், நாடுகடந்த அரசின் பல விடயங்களில் நான் உடன்படவில்லை என்பது இரகசியம் அல்ல, பொங்கு தமிழில் வெளியான “சர்வதேச நியமங்களுக்கு முரணான நா.க அரசின் யாப்பு” தொடர்பான எனது கட்டுரை வெளிப்படுத்தி இருந்தது. நான் எந்த குழு சார்ந்தவனும் அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். நான் எந்த நிறுவனத்திலும் உறுப்பினன் அல்ல என்பதும் எல்லோருக்கும் தெரியும். சரியான கருத்து -செயல்பாடு அதுதான் நான் எல்லோரிடமும் எதிர் பார்ப்பது . இத்தனை ஆயிரம் படுகொலைகள் நடந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. உருப்படியாய் ஒன்றும் எவரும் செய்யவில்லை. நாம் பிரிந்து கொண்டும், சோர்வு ஏற்படுத்திக் கொண்டும் செல்கின்றோம். அறிக்கைகளுக்கு குறைவில்லை. கொம்பியுட்டர் முன்னாலை குத்தி முறிவாருக்கும் குறைவில்லை .
தாங்கள் இனப்படுகொலை, போர்குற்ற தடுப்பு தொடர்பான அமைச்சராக நியமிக்கப்பட்டபோது மகிழசியடைந்தவர்களில் நானும் ஒருவன். முள்ளிவாய்க்கால் காலத்துக்கு முன்பிருந்தே நீங்கள் தமிழரின் உரிமைகள் தொடர்பாகவும் , அங்கு இனப்படுகொலை நிகழ்கின்றது என்பதையும் வெளிக்க கொணர முயற்சிகள் செய்திருந்தீர்கள் என்பதும், பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஒன்றில் முக்கிய பதவி வகித்தவர் என்பதும், தலைமைத்துவ அனுபவம் பெற்ற பிரித்தானிய பட்டதாரி என்பதும் அதற்குக் காரணம். இதனால் தங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இனப்படுகொலை போர்க் குற்ற தடுப்பு தொடர்பான செயல்பாடுகளில் விருப்பம் தெரிவித்தேன்.
நீங்களும் இணங்கி ஒரு முழு நாள் சந்திப்புக்கு என்னையும் அழைத்தீர்கள். அமைச்சர் தயாபரன், அமைச்சர் சேகர், முதல் மேலும் பலர் கலந்து கொண்டோம். காலை முதல் மாலை வரை இருந்து தயார் படுத்தல்பற்றி பேசினோம். இறுதியில் கால எல்லைகள் குறிக்கப்பட்டு செயல்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு வேலைகளும் ஒதுக்கப்பட்டது. சரியான நிர்வாக முறைப்படி இவற்றை நகர்த்துவது எனவும் , வேலைகளின் முனேற்றம் குறித்து அடிக்கடி மதிப்பீடு செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. அடுத்த சந்திப்பு தொடர்பாக குறித்த உத்தேச திகதி கடந்து மாதங்களாகி விட்டது. பல மின் அஞ்சல்கள் அனுப்பினேன் , பலதடவை தொலை பேசி எடுத்தேன் பதில் இன்றி , தொடர்பின்றி இருக்கின்றேன். முக்கியமான வேறு ஒருவரும் எனக்குச் சொன்னார் , தனக்கும் மாதக் கணக்காக உங்களிடம் தொடர்பு கிடைக்கவில்லை என்று.
அமைச்சர் தயாபரனுடன் பேசினேன் அவர் தங்களிடம் தகவல் தந்திருப்பார் என நம்புகின்றேன். நா.க தேர்தல் குழு உறுப்பினர் வாசுகி ஊடாகவும் தகவல் அனுப்பினேன். பதில் இல்லை. அமைச்சரின் அதிகார எல்லைகள் தொடர்பாக எதுவும் உங்கள் யாப்பில் நான் பார்க்கவில்லை. அப்படி ஒன்று இல்லாவிட்டால் ஒன்றும் பாதகமில்லை. ஏதாவது ஒரு ஜனநாயக நாட்டின் அரசியல் அமைப்பை முழுமையாக தழுவி அப்படியே உபயோகிக்க உங்கள் மந்திரி சபை தீர்மானித்து செயல் படலாம். நா.க அரசு கூட ஏதாவது ஒரு ஜனநாயக நாட்டின் அரசியல் அமைப்பை நாடு என்ற மாற்றத்துடன் முழுமையாக தழுவுதல் இன்றைய சிகல்களுக்கு தீர்வாக அமையும் என நான் நம்புகின்றேன்.
மேலும் நா.க அரசின் முக்கிய செயல்பாடாளர் ஒருவர் அண்மையில் “தமிழன் என்று பெருமையாய் வாழ் -வாழும் நாடே தாயகம் ” என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை ஒன்று எழுதி உள்ளார். இது நா.க அரசு தொடர்பாக கவலை ஏற்படுத்துகின்றது.
பழசுகள் (நான் உடபட ) பல புறக் காரணிகளின் தாக்கத்துக்கு உள்ளாக கூடியவர்கள், ஆனால் சாதுரியமாக பேசி எல்லாரையும் சுழற வைக்க வல்லவர்கள். நிங்கள் ஒரு இளைஞர், இளைஞர் தான் சமூக மாற்றத்தை கொண்டுவரமுடியும் , மத்திய கிழக்கை பாருங்கள் , உலக வரலாற்றை பாருங்கள் . அவர்கள் தான் சமூக ஓட்டத்தின் திசையை மாற்ற வல்லவர்கள் . இனப்படுகொலை வழக்கு , போர்க்குற்ற வழக்கு தொடர்பாக என்ன நடக்குது ? எந்த வழக்கும் தொடர உத்தேசம் இல்லையா ? ஏன் இந்த மௌனம். இந்த தேக்க நிலைக்கு கலந்து கொண்ட அனைத்து அமைச்சர்களும் கூட்டு பொறுப்பு எடுக்க வேண்டும். நா.க அரசின் தற்போதைய 68 பிரதிநிதிகளும் 68 கதை சொல்கின்றார்களா ? அப்படியாயின் , இளைஞரான நீங்கள் ஒரு அமைச்சர் என்ற வகையில், துணிச்சலான முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டும் .
சரி பிழைகளுக்கு அப்பால் உங்கள் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் அதுதான் முதல் தேவை. என்னை அழைத்து மணித்தியாலக் கணக்கில் பேசி, வேலைத் திட்டங்களை முன்னெடுக்கச் சொல்லி அதனை நான் தற்போது சமர்ப்பிக்க, மற்றும் கலந்துரையாடத் தயாராக இருக்கும் வேளை பல வாரங்களாக தொடர்புகொள்ளாமல் நீங்கள் ஏன் இருக்கிறீர்கள் என்பதை எனக்கு தெளிவு படுத்துவீர்களா ?
இப்படிக்கு
சி.சந்திரமெளலீசன்.
Comments