பத்திரிகையாளர் கொலை – சந்தேக நபர் முன்னாள் உக்ரேன் அதிபர்

பத்திரிகையாளனை கொன்ற அதிபர் ஆயுள் தண்டனையின் பிடியில்

தராக்கி, லசந்த, நிமலராஜன் குடும்பங்கள் வடிக்கும் கண்ணீருக்கு உலகம் பதில் தரும் நாட்கள் வரும்..

இன்றைய உக்ரேன் நாட்டு செய்திப் பத்திரிகைகளின் காலைச் செய்தி :

உக்ரேன் நாட்டின் முன்னாள் அதிபர் லினோய்ட் குற்ஜ்மா சுமார் 12 வருடங்கள் சிறைத்தண்டனை பெறும் அபாயத்தை சந்திக்கவுள்ளார். இவர் கடந்த 1994 முதல் 2005 வரை உக்ரேன் நாட்டின் அதிபராக இருந்தவர். தேர்தல் மோசடி, ஊழல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களுக்கு சொந்தக்காரர். அக்காலத்தில் இவருக்கு எதிராக கடுமையான அரசியல் விமர்சனங்களை எழுதி வந்தவர் 31 வயதுடைய உக்ரேன் நாட்டு பத்திரிகையாளர் ஜோர்ஜி கொன்கேட்ஜ் என்பவராகும். இவருடைய எழுத்துக்கள் உக்ரேன் அதிபரின் சர்வாதிகார, ஜனநாயக மறுப்பு குடும்ப ஆட்சிக்கு பெரும் சவாலாக இருந்தது.

திடீரென ஒரு நாள் சிறீலங்காவின் புகழ் பெற்ற வெள்ளை வான் கடத்தல் போல இவரும் கடத்திச் செல்லப்பட்டார். கடத்திச் செல்லப்பட்ட சில நாட்களில் கழுத்து தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் இவருடைய உடலற்ற சடலம் ஒரு காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொலையின் பிரதான சந்தேகநபரான அதிபர் லினோய்ட் குற்ஜ்மா ஆட்சியில் இருக்கும்வரை இந்த விவகாரத்தை முன்னெடுக்காமல் சட்டம் உறங்கிக் கிடந்தது. ஆனால் இந்தப்படுகொலை விவகாரம் இப்போது சந்திக்கு வந்துள்ளது. இப்படுகொலைக்கும் உக்கிரேன் நாட்டின் அதிபருக்கும் தொடர்புள்ளது என்று நிரூபிக்க போதிய சாட்சியங்கள் கிடைத்துள்ளன. இந்த வழக்கில் அதிபர் 12 ஆண்டுகள் ஆயுள்தண்டனை அனுபவிக்க வேண்டிய அபாயம் உள்ளதாக இன்றய உக்ரேன் காலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரேன் இலங்கைத் தமிழர் வாழ்வில் முக்கியமான நாடு :

உக்ரேன் நாடு விமானங்களையும், ஆயுதங்களையும் சிறீலங்கா இனவாத அரசுக்கு வழங்கிய நாடு. அந்த நாட்டு விமானிகளில் சிலர் இலங்கையின் தமிழ் பகுதிகள் மீது குண்டு வீசிய குற்றச் செயலைச் செய்தவர்கள். பொதுமக்கள் வாழிடங்களில் குண்டுகளை வீசிய சர்வதேச குற்றச்சாட்டுக்குரியவர்கள். கடந்த காலங்களில் சிறீலங்கா அரசு புரிந்த யுத்த மீறல்களுக்கு உக்ரேனிய அதிபர் லினோய்ட் குற்ஜ்மாவின் பங்களிப்பும் இல்லாமல் இருந்திருக்காது.

இவரை மட்டும் ஏன் கைது செய்ய வேண்டும் ?

இப்போது உலகில் ஏற்பட்டுவரும் ஜனநாயகத்திற்கான புதிய மாற்றம் சர்வதேச நாடுகளை தவிர்த்து யாருமே ஆட்சியை நடாத்த முடியாது என்பதை தெளிவாக்கி வருகிறது. ஒரு நாடு தனது அரசியல் பொருளாதார நடவடிக்கைகளை சர்வதேச சமுதாய விழுமியங்களுக்கு அமைவாக முன்னெடுக்க வேண்டுமானால் சில நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும். அதில் முக்கியமானது இத்தகைய சர்வாதிகாரிகளின் விவகாரங்களை சட்டத்தின் முன் கொண்டு வருவதாகும். அவர்களுக்குரிய தண்டனை வழங்கி, இத்தகைய நாசகார செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் எதிர்கால அரசியலை எவருமே முன்னெடுக்க முடியாது. அப்படி செய்யாவிட்டால் கடாபிக்கு நடப்பதுதான் நடக்கும். கடந்த 1984 லண்டனில் போலீசார் ஒருவரை சுட்ட குற்றவாளி நேற்று லிபிய பெங்காஸி நகரில் மடக்கிப் பிடிக்கப்பட்டான். யாருமே தப்ப வழி இருப்பதாக தெரியவில்லை.. இது இன்றைய புதிய சர்வதேசக் காற்று..

மேலை நாடுகளில் உள்ள தலைவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டா ?

மேலை நாடுகளின் தலைவர்களும் இந்தப் பிடியில் இருந்து தப்ப முடியாது. பிரான்சின் முன்னாள் அதிபர் ஜாக். சிராக் 1970 களில் பாரீஸ் மாநகசபை மேயராக இருந்தபோது ஊழல் செய்துள்ளார். உலகில் உயிர்வாழாத பெருந்தொகை நபர்கள் பாரீஸ் நகரசபையில் வேலை செய்வதாக பொய்க்கணக்கு காட்டி, சம்பளம் போட்டு தனது பாக்கட்டில் சுளை சுளையாகப் பணத்தைப் போட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இவருக்கு எதிரான வழக்கு நடைபெறுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் சிறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சிய முன்னாள் அதிபருக்கே இதுதான் கதி ! இத்தாலிய பலர்ஸ்கோனி இவரை அடுத்து நான்கு பெரிய வழக்குகளில் சிக்குண்டுள்ளார்.

அப்படியானால் சர்வாதிகார ரஸ்யாவில் நிலமை என்ன ?

ரஸ்யாவில் பல பத்திரிகையாளர் கொன்று தள்ளப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முன்னாள் அதிபர் விளாடிமிர் புற்றினுக்கு எதிராக பல குற்றச் சாட்டுக்கள் உள்ளன. ரஸ்யாவின் பெண் எழுத்தாளர் அனா பொலிற்றிக்கோவ் காஜா படுகொலையில் ரஸ்ய உளவுப் பிரிவுக்கு நேரடி தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. ( 07. அக்டோபர் 2006 சுடப்பட்டார் ) புற்றினின் ரஸ்யா என்று ரஸ்ய முன்னாள் அதிபரின் குடும்ப சர்வாதிகாரத்தை அம்பலப்படுத்திய காரணத்தால் இப்பெண்மணி சுடப்பட்டுள்ளார்.

ரஸ்ய அதிபர் பதவிக்கு பின்னர் பிரதமர் பதவியில் உள்ள புற்றின் மறுபடியும் அதிபராக வர முயல்வதும், அதிகாரத்தை விட்டு விலக மறுப்பதும் ஏன் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தற்போது அவருக்கும், அதிபருக்கும் இடையே ஏற்பட்டுள்ள முறுகல் ரஸ்ய பத்திரிகையாளர் படுகொலைகளில் ஒரு திருப்பத்தைத் தரலாம்.

சிறீலங்காவில் என்ன நடக்கும் ?

சிறீலங்காவில் தராக்கி, லசந்த விக்கிரமதுங்கா, விமலராஜன், கோவிந்தன் போன்ற பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களுடைய கொலைக்கு யார் பொறுப்பு.. ? சரியான விசாரணைகள் இல்லாவிட்டால் வரும் பொருளாதார மந்தத்தில் இருந்து சிறீலங்கா விடுபட முடியாது.

முன்னாள் உக்ரேன் அதிபர் கண் முன் தெரியும் சிறைக்கம்பிகளின் நிழல் இனி உலகம் முழுவதும் விழப்போகிறது. இதற்கு சிறீலங்கா மட்டும் விதிவிலக்கு ஆகாது. இந்தியாவால் உதவ முடியாத எல்லை கடந்த விவகாரம் இது.

இதற்கு சியோனிச இஸ்ரேல் கூட விதிவிலக்கல்ல..

இஸ்ரேலிய முன்னாள் அதிபருக்கு நேற்று முன்தினம் ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் தனது காரியாலயத்தில் பெண்மணி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கான தண்டனையை அனுபவிக்க உள்ளார்.

இன்றைய உலகம் தெளிவாக சொல்லும் செய்தி என்ன ?

நடந்தவை படுகொலைகள் என்றால் அனைத்து குற்றவாளிகளும் தண்டனை பெற வேண்டும். தமிழர் சிங்களவர் யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே ! இதுபோன்ற குற்றங்கள் செய்து ஆட்சியிலோ அதிகாரத்திலோ வருங்காலத்தில் இருக்க முடியாது என்பதையும் வேகமாக வரும் புதிய ஜனநாயக விசை உணர்த்துகிறது.

பத்திரிகையாளரை கொன்ற அனைவருக்கும் தண்டனை !

எதிர்கால ஜனநாயகத்தின் மேம்பாட்டுக்கு இதுஅவசியமென இன்றைய உலக சமுதாயம் கோருகிறது.. உக்ரேன் இதற்கு முதற் பலியாகப்போகிறது.

தராக்கி, லசந்த, விமலராஜன் போன்ற பல குடும்பங்கள் வடிக்கும் கண்ணீருக்கு உலகம் பதில் சொல்லும் என்ற மெல்லிய நம்பிக்கை பிறக்கிறது..

அலைகள் கிழக்கு ஐரோப்பிய பிரிவு 25.03.2011

Comments