மதிமுகவுக்கு எதிராக மாற்றுக் கட்சிகளுக்குப் பணம் கொடுத்த ஸ்டெர்லைட்-வைகோ

மதிமுக பிரதிநிதிகள் சட்டசபைக்குச் செல்லக் கூடாது என்று ஸ்டெர்லைட் நிறுவனம் சதி செய்துள்ளது. இதற்காக மாற்றுக் கட்சிகளுக்குப் பணம் கொடுத்து எங்களுக்கு எதிராக நடந்து கொண்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேற முக்கியக் காரணமே தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்டெர்லைட் நிறுவனமும், பெங்களூரைச் சேர்ந்த ஒரு முக்கிய தொழிலதிபரும், இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சேவின் மறைமுக நடவடிக்கை களுமே காரணம் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. தற்போது கிட்டத்தட்ட அது உண்மைதான் என்று வைகோ மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மக்கள் பாதக நடவடிக்கைகளுக்கு எதிராக மதிமுக உறுதியான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆத்திரத்தில்தான் அதிமுகவை விலை பேசி, கூட்டணியிலிருந்து வைகோவை வெளியேற்றி விட்டார்கள் என்பது குற்றச்சாட்டாகும்.

தற்போது இந்த பயங்கர சதிச் செயல்களை வைகோ அம்பலப்படுத்த ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

அதில் வைகோ பேசுகையில்,

சட்டசபையில் மதிமுக பிரதிநிதிகள் இடம் பெறுவதை ஸ்டெர்லைட் நிர்வாகம் தடுக்கிறது. மதிமுகவுக்கு எதிராக மாற்றுக்கட்சிகளுக்கு பணம் கொடுக்கிறது ஸ்டெர்லைட்.

ஸ்டெர்லைட் ஆலையை எதித்து மதிமுக வழக்கு தொடுத்திருப்பதால் ஸ்டெர்லைட் நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தலை புறக்கணிக்கும் முடிவிலிருந்து மதிமுக ஒரு போதும் பின்வாங்காது. தேர்தலை கண்டு பயந்து ஓடவில்லை. பதுங்குவது பாய்வதற்குத்தான் என்றார் வைகோ.

விரைவில் தனக்கும், தனது கட்சிக்கும் எதிரான பயங்கர சதித் திட்டங்கள், அதன் பின்னணியில் இருந்தது யார் என்பது உள்ளிட்ட தகவல்களை வைகோ அம்பலப்படுத்தக் கூடும் என்று தெரிகிறது

Comments