கோத்தபாயவின் நேரடி உத்தரவின் பேரில் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படும் போராளிகள்

இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் நேரடி வழிநடத்துதலிலேயே வெள்ளை வேன் கடத்தல் கும்பல், ஆட்களை கடத்திச் சென்று பணம் பறிப்பது மற்றும் கொலை செய்வது உள்ளிட்ட காரியங்களை செய்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

கடந்த காலங்களில் அப்பாவி தமிழர்கள்,முன்னாள் போராளிகள், எதிர்க்கட்சிகளின் முக்கிய செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரைக் கடத்திக் கொண்டு போய் சித்ரவதைக்குட்படுத்தியதும் இந்தக் குழுவே என்று அத்தகவல் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வேன் வெள்ளை நிற டொயட்டா வகை வேனாகும். அதன் முன்புற மற்றும் பின்புற வாகன எண் தகடுகள் ஒன்றுக் கொன்று மாறுபட்டதாக இருக்கும்.

ஒவ்வொரு கடத்தலுக்கு பின்னரும் அந்த எண்கள் மாற்றப்பட்டு விடும்.அதன் பராமரிப்பு மற்றும் எரிபொருள் வழங்குதல் உள்ளிட்டவை பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி உத்தரவின் பேரில் நடைபெறுகின்றது.

வேனின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றுபவர் பெரேரா என்றழைக்கப்படும் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஒருவராவார்.

கடந்த காலங்களில் அவர் பணியாற்றிய பல இடங்களில் அவருக்கு எதிராக ஏராளமான கொலைக் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.அந்தளவுக்கு கொலை செய்வதில் கல்நெஞ்சம் கொண்டவராக அவர் நடந்து கொண்டுள்ளார்.

வெள்ளை வேன் கடத்தலில் அவருடன் ஒரு சார்ஜண்ட் நிலை அதிகாரியும் மூன்று கான்ஸ்டபிள்களும் இணைந்து பணியாற்றுகின்றனர்.கடத்தல் நடவடிக்கையின் போது அவர்கள் அனைவரும் கறுப்பு நிற சிவில் உடையில் தான் பயணிக்கின்றனர்.

காவல்துறை சட்டதிட்டங்களை மீறி அவர்களுக்கு எந்தவித எழுத்துவடிவ பதிவுகளும் இல்லாதவாறு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.அவர்கள் ஐவருக்கும் தனித்தனியாக மினிஊஷி எனப்படும் மினி இயந்திரத் துப்பாக்கியும்,கைத்துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலத்தில் பாதுகாப்பமைச்சக செயலாளரின் தயவால் கர்னல் அந்தஸ்துக்கு பதவியுயர்வு பெற்ற பாதுகாப்பமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றும் இராணுவ அதிகாரியொருவரே இவர்களுக்கான கட்டளை அதிகாரியாகச் செயற்படுகின்றார்.

அவர்தான் கடத்தப்பட வேண்டிய நபர்கள், கடத்தப்பட வேண்டிய தினம் மற்றும் கடத்தப்படுகின்றவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் தீர்மானிக்கின்றார்.

பகலில் மறைத்து வைக்கப்படும் வேன்,நள்ளிரவில்தான் கடத்தல் நடவடிக்கைகளுக்காக வெளியில் எடுக்கப்படுகின்றது.அதன் பின் மீண்டும் அதிகாலைக்கு முன்னதாகவே அந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு விடும்.

கடந்த காலங்களில் கொழும்பில் இடம்பெற்ற பெரும்பாலான கடத்தல் நடவடிக்கைகளின்போது இந்த வேன் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சவின் முன்னாள் ஊடக அதிகாரி அஷ்ரப் அலி,அரசாங்கத்துடன் முரண்பட்டபோது அவரையும், அவரது குடும்பத்தையும் இதே குழுவினர் தான் கடத்த முயன்று தோல்வியைத் தழுவியிருந்தனர்.

அதன் காரணமாக வெள்ளை வேன் கடத்தல் தொடர்பான விபரங்களைச் சேகரித்து வெளியில் கொண்டு வரும் விடயத்தில் அவரும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

அரசாங்கத்தின் ரகசியங்கள் அவர் மூலமாக வெளியாகி விடும் என்ற அச்சம் காரணமாக அரசாங்கம் அவரைப் படுகொலை செய்ய முயன்றதன் காரணமாகவே, நாட்டை விட்டும் அவர் குடும்பத்துடன் வெளியேற நோ்ந்தததாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

நன்றி முத்தமிழ் வேந்தன்

Comments