எது பயங்கரவாதம் உலகின் முன் எழும் புதிய கேள்வி...

பயங்கரவாத தாக்குதலுக்கு இரகசிய உத்தரவிட்ட ஆட்சித்தலைவர் முபாரக்கின் கடிதமும், சிறீலங்கா பிரதமர் உரையும் ஓர் ஒப்பீடு..


இன்று வெளியாகியுள்ள இரண்டு செய்திகள் பயங்கரவாதத்தின் முகமூடிகளை கிழித்தெறிவதாக இருக்கின்றன. ஒன்று சிறீலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரத்தினா ஆற்றிய உரை மற்றையது எகித்திய முன்னாள் அதிபர் கொஸ்னி முபாரக்கின் இரகசிய கடிதம். இந்த இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தால் உண்மையான பயங்கரவாதமா ? இல்லை பம்மாத்து பயங்கரவாதமா ? உலக ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்ற கேள்வி எழும் .

பொட்டம்மானின் சகாவின் உதவியுடன் தமிழகத்தில் புலிகளின் ஆயுதப் பயிற்சி மூன்று முகாம்களில் நடைபெறுவதாகக் கூறியுள்ளார் சிறீலங்கா பிரதமர். அத்தோடு தமிழக தலைவர்களை குறிவைத்து இது நடப்பதாகவும் கூறியுள்ளார். இவருடைய உரைக்கு கருத்துரைத்த ரணில் விக்கிரமசிங்க இப்படியான செய்திகள் மூலமாக மக்களை குழப்ப வேண்டாம் என்று கேட்டுள்ளார். ரஜீவ்காந்தி கொலை வழக்கு சந்தேக நபரான கே.பியை அரவணைத்து வைத்துக் கொண்டு, இந்தியாவில் புலிகள் முகாம்பற்றி எதற்காக பேசுகிறீர்கள் என்றும் வினவியுள்ளார் – இது சிறீலங்கா செய்தி

இவரது பேச்சு வெளியான தருணம் எகிப்தில் சில கடிதங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2005ம் ஆண்டு எகிப்திய நகரமான ஷாம் அல் ஷேக்கில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தனது உளவுப் பிரிவின் மூலமாக நடாத்தியது அந் நாட்டின் முன்னாள் அதிபர் கொஸ்னி முபாரக்கே என்று அந்தச் செய்தி கூறுகிறது. ஆட்சியை விட்டு விலகிப் போவதற்கு முன்னர் அவர் எரித்த பெருந்தொகையான இரகசிய ஆவணங்களில் தப்பியுள்ள ஓர் ஆவணம் இந்த இரகசியத்தை இன்று பரகசியமாக்கியுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக தாம் போராடுகிறோம் என்று உலக அரங்கிற்குக் காட்டுவதற்காக அந்த பம்மாத்து பயங்கரவாதம் அரங்கேறியுள்ளது. இது குறித்த விசாரணைகள் தொடர்கின்றன. பயங்கரவாதம் என்ற சொற் பிரயோகம் எப்படி தப்பாகவும், கச்சிதமாகவும் பயன்படுத்தப்பட்டு சிலரது ஆட்சிகள் நடைபெறுகின்றன என்பதற்கு எகிப்தில் ஓர் உதாரணம் கிடைத்துள்ளது. உண்மை நிரூபிக்கப்படுமானால் முபாரக் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரும்.

2001 செப் 11 உடன் ஆரம்பித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தற்போது மறு மதிப்பீடுகளை சந்திக்க ஆரம்பித்துள்ளது. வடஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளல் நடைபெறும் மக்கள் ஆர்பாட்டங்கள் பம்மாத்து பயங்கரவாத பொய்களை பரப்பி ஆட்சிக்கட்டிலில் இருந்தவர்களை இறக்கிக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள், ஐ.நா போன்றவற்றில் இந்த பம்மாத்து பயங்கரவாதம் புதிய ஆய்வுக்கு வந்துள்ளது. அந்த விவகாரம் அடுத்த அத்தியாயமாக கிளப்பப்படுவதற்காகவே எகிப்திலிருந்து ஓர் இரகசியம் அம்பலமாக்கப்பட்டுள்ளது. இதேபாணியில் மேலும் பல உண்மைகள் வெளிவரப்போவதை இன்றைய உலக நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

மக்களுக்கு பொய்யான பயங்கரவாதத் தகவலைக் கொடுத்தார். அதை ஆதாரமாக வைத்து நாட்டை போருக்குள் மாட்டினார் என்ற கோணத்திலான விசாரணைகள் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளேயர் மீது நடாத்தப்பட்டுள்ளன. சிறீலங்கா மட்டும் இதுபோன்ற விசாரணைகளுக்கு விதிவிலக்காக நாடல்ல. பயங்கரவாதம் என்பது மன்னிக்க முடியாத குற்றச்செயல்தான் ஆனால் பம்மாத்து பயங்கரவாதம் அதைவிட பெரிய குற்றச் செயலாகும்.

நுணலும் தன் வாயால் கெடும் – பழமொழி.

அலைகள்

Comments