காமன்வெலத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு அதில் சிறப்புரையாற்ற சோனியா காந்தி லண்டன் வந்திருந்தார். அவரின் சிறப்புரைக்கு முன்னதாக அவரிடம் சில கேள்விகள் உலகத் தமிழர் ஒன்றியத்தின் சார்பில் கேட்கப்பட்டது. சில கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படுமாயின் அதற்கு ஆதரவு வழங்குவீர்களா ? எனக் கேட்ட போது அது குறித்து கருத்து வெளியிட்ட முடியாது என மறுத்துள்ளார். எந்த ஒரு இடத்திலும் அவர் தான் தமிழர்கள் பக்கம் தான் இருப்பேன் என்ற கூற்றைக் கூறவில்லை.
ஆனால் சில இணையங்கள் இச் செய்தியை திரிவுபடுத்தி, சோனியா காந்தி அவர்கள் தாம் எப்போதும் தமிழர்கள் பக்கம் தான் இருப்பேன் என்று கூறியதாக செய்தி வெளியிட்டு உள்ளது. நடைபெற்ற இக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர், இதனை அதிர்வு இணையத்துக்கு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நாம் உலகத் தமிழர் பேரவையை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் சோனியா அப்படிக் கூறியதாக தெரிவித்தனர். இருப்பினும் கூட்டத்தில் கலந்துகொண்ட வேறு சிலரோ அப்படி சோனியா கூறவில்லை என்றும் கூறுகின்றனர்.
இந்தியாவுக்கு ஆதரவாக தமிழர்களை திசை திருப்பும் சில இணையத்தளங்களே இவ்வாறு செய்திகளை திரிவுபடுத்தி வெளியிட்டு உள்ளன என்று சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் விடையம் குறித்து எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள சோனியா காந்தி, சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை குறித்த வீடியோ காட்சிகள் சிலவற்றை தான் பார்த்ததாகவும் அது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் எனவும் கூறியுள்ளார் சோனியா காந்தி.
வடக்கில் படையினர் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் விடயம் குறித்து சோனியா காந்தியிடம் வினவப்பட்டபோது இலங்கையில் அவ்வாறானதொரு நிலை நடந்திருப்பின் அது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் என குறிப்பிட்டுள்ளார். வார்த்தைப் பிரயோகங்களைச் மிகவும் துல்லியமாகப் பாவித்த சோனியா காந்தி எல்லா இடங்களிலும், அப்படி நடந்தால், அப்படி நடந்தால் அதனைத் தான் கண்டிக்கிறேன் என்று கூறித் தப்பித்துள்ளார். அவ்வளவுதான். மற்றும் படி அவர் வேறு எந்த ஒரு இடத்திலும் தமிழர்கள் பக்கம் தான் இருப்பேன் என்று தெரிவிக்கவில்லை.
எமது சந்திப்பை சோனியா காந்தி எதிர்பார்க்கவில்லை: உலகத் தமிழர் பேரவை
இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை நாம் சந்தித்தது மிகவும் எதிர்பாரத ஒரு விடயம், ஆனால் நாம் தமிழ் மக்களின் நிலையை அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளோம் என உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர் சுரேன் சுரேந்திரன் நேற்று (19) தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய கருத்துரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த வியாழக்கிழமை (17) பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நிகழ்வில் கருத்துரை வழங்குவதற்கு வந்திருந்த சோனியா காந்தியுடன் நாம் கலந்துரையாடியிருந்தோம்.
இந்த சந்திப்பை அவர் எதிர்பார்க்கவில்லை. பார்வையாளர்களாகச் சென்ற நாம், கேள்வி நேரத்தில் இந்த கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தோம். தமிழ் மக்களின் நிலை, அங்கு மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் அவருக்கு விளக்கியிருந்தோம்.
போர்க்குற்ற காணொளியை தான் நேரிடையாக பார்த்ததாக தெரிவித்துள்ள சோனியா காந்தி தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றெடுக்க இந்தியா உதவும் எனவும், அவர்களின் மறுவாழ்வுக்கு இந்தியா உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா தமிழ் மக்களுடன் தான் நிற்கும் என அவர் பல தடவைகள் தெரிவித்தார். எனினும் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று கொண்டுவரப்படுவதற்கு இந்தியா ஆதரவு அளிக்குமா என கேட்டபோது அது தொடர்பில் தான் கருத்துக்கூற முடியாது, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் கமலேஸ் சர்மாவிடம் கேட்குமாறு தெரிவித்து, அவர் பின்வாங்கி விட்டதாக சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (17) இலண்டனில் நடைபெற்ற 14ஆவது பெது நலவாயக் கூட்டதில் கலந்து கெண்ட திருமதி காந்தி அவர்கள், 2011ஆம் ஆண்டின் பெது நலவாய கருப்பெருள் “மாற்றங்களின் செயலாளர்களாக பெண்கள்” என்பது தொடர்பில் பற்றி உரையாற்றியிருந்தார்.
தமிழர் பிரச்சனையில் சோனியாவுக்கு அக்கறையுள்ளது
http://www.alaikal.com/news/?p=61713காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இலங்கைப் பிரச்சனை தொடர்பாக உண்மையான கரிசனைகளை கொண்டிருப்பதாக தாம் கருதுவதாக இலண்டனில் அவரை சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
லண்டனில் உள்ள காமன்வெல்த் தலைமையகத்தில் உரையாற்ற வந்த சமயத்தில் சோனியா காந்தியை தாம் சந்தித்துப் பேசியதாக சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார்.
சோனியா காந்தியிடம் இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்கள், அங்கு தற்போது நிலவும் சூழல் குறித்து தாம் பேசியதாகவும் அப்போது சோனியா காந்தி ” அந்த வீடியோவை நானே நேரில் பார்த்தேன். மிகவும் கவலைப்படுகிறேன்” என்று தமது கண்ணை நேரில் பார்த்து கூறியதாகவும் சுரேன் தெரிவித்தார்.
தானும் தமது அரசாங்கமும் தமிழருடன் இருப்பதாகவும் சோனியா காந்தி கூறியுள்ளார்.
இலங்கையின் இறுதி கட்டப் போரில் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி புலம் பெயர் தமிழர்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
சோனியா காந்தியின் லண்டன் வருகையை கண்டித்துக் கூட ஒரு போராட்டம் லண்டனில் வியாழக் கிழமை நடைபெற்றது.
இருந்தும் இந்த சந்திப்பின் போது இலங்கை நிலவரம் குறித்து தமது கவலைகளை இந்திய அரசு இலங்கையிடம் தெரிவித்ததாக கூறிய சோனியா காந்தி, போர் குற்ற விசாரணைகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டதாகவும் சுரேன் சுரேந்திரன் கூறினார்.
டிரினிடாட் நாட்டின் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரதிநிதிகள் இருந்த அந்த சமயத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தம்மோடு சோனியா காந்தி, 11 நிமிடங்கள் பேசியதாக அவர் கூறினார்.
சோனியா காந்தியின் சந்திப்புக்கு பின் இலங்கை விடயத்தில் அவரது கருத்துக்கள் உண்மையாக இருப்பதாகத் தமக்குத் தென் படுவதாகவும் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார்.
நாங்கள் என்றும் தமிழ்மக்கள் பக்கம்தான்: சோனியா
http://www.puthinamnews.com/?p=21694
இலங்கையின் நிலவரம் குறித்து நான் ஆழ்ந்த மனக்கவலையுடன் தான் இருக்கின்றேன் என்று இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். நாங்கள் என்றைக்கும் தமிழ்மக்களின் பக்கம் சார்பாகத் தான் நடந்து கொள்வோம் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் அமர்வொன்றில் கலந்து கொண்டபோது தொடுக்கப்பட்ட வினாவொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே சோனியா காந்தி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். உலகத் தமிழர் பேரவை எனும் அமைப்பு பிரஸ்தாப வினாவைத் தொடுத்திருந்தது.
இலங்கையில் நடைபெற்றுள்ள போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு சோனியா காந்தி ஆதரவு வழங்குவாரா என்று அடுத்து முன்வைக்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. அதற்கான பதிலை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் வழங்குவார் என்று அவர் சமாளித்துவிட்டார்.
Comments