இலங்கையின் பரப்புரையில் வீழ்ந்துகிடக்கும் தமிழ் ஊடகங்கள்.

எமது ஊடகங்கள் சில சொற்பிரயோகங்களை அப்பிடியே சீறிலங்காவின் பரப்புரையில் உள்ளதுபோல பாவிப்பதன் மூலம் தெரிந்தோ தெரியாமலோ அப்பரப்புரைக்கு மறைமுகமாகத் துணைபோகிறார்கள்.


International commission of Jurists இன் Sri Lankas Mass detention of LTTE suspectsஎன்ற Sep. 2010 அறிக்கையில் சிறீலங்காவில் 8,000 பேர்களை குற்றச்சாட்டோ, விசாரணையோ இல்லாமல் 2005 ம் ஆண்டின் அவரசரகால சட்டத்தின் கீ ழ்அவர்களை புணர்வாழ்வுக்குள் உள்படுத்த உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர்கள் அதைக்குறிப்பிடும் போது Rehabilitation (புனர்வாழ்வு) என்ற பதத்தை மேற்கோள்குறிக்குள் போட்டிருந்தார்கள். அதாவது அவர்கள் அதை புனர்வாழ்வு என்று ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் சீறிலங்கா அரசாங்கம் சொன்னதை அப்பிடியே எழுதியிருப்பதாகப் பொருள்படும்.

ஆனால் பல இடங்களில் எமது தமிழ் ஊடகங்கள் சீறிலங்கா பாவிக்கும் அதே சொற்களை அப்படியே தாங்களும் பாவிப்பது அச்சொற்பதங்கள் சொல்லும் அர்த்தத்தை தாமும் ஏற்றுக்கொள்வதாக பொருள் படுகின்றது. செய்தி தொகுப்பாளர்களும், அவர்கள் தவறும் இடத்து செய்தி வாசிப்பாளர்களும், மற்றும் பத்திரிகை ஆசிரியர்களும் இது பொருந்தும்.

நலன்புரிகிராமங்கள் என்ற சிறீலங்கா அரச ஊடகங்கள் பாவிக்கும் அதே பதத்தை அப்பிடியே எமது ஊடங்களும் பாவிக்கின்றன. அப்பிடி என்ன நலன்களை தான் சிறீலங்கா அரசு எமது மக்களுக்குச் செய்து விட்டது? இரண்டு தகரத்தை போட்டு. நாலு கம்பை நாட்டி, அதை வீடு என்றும், அதற்குள் அவர்களை விட்டு விட்டு அதை நலன்புரிகிராமங்கள் என்கிறார்கள்.

அங்குள்ள மக்ககளின் நலன்களை பாராமரிப்பதற்கு ஏதாவது சர்வதேசப்பொது அமைப்புக்களை அமைத்திருக்கிறார்களா என்றால் இல்லை.

சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு கண்காட்சிக் கூடமாக ஒன்று இரண்டை வைத்து விட்டு மிகுதியில் மக்கள் அன்றாட கடமை செய்ய முடியாமலும், பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இன்றியும் மிகவும் துன்பப்படுகிறார்கள். ஆங்கில அறிக்கையில் Internal Displacement camp என்ற பதத்தை பாவிக்கிறார்கள்.

இடப்பெயர்தவர்களுக்கான தற்காலிகமுகாம் என்று பொருள்படும். பெரும்பாலன மக்கள் அவர்கள் முன்பு இருந்த இடங்களுக்கு, வளமான, அவர்களின் சொந்தக்காணிகளுக்கு போக அனுமதி மறுக்கப்பட்டு சிறீலங்கா அரசுக்கு நலன் தரும் பகுதிகளில் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

முள்ளுக்கம்பிக்குள் அடைபட்டிருந்தவர்கள் அக்கம்பிக்குள் இருந்து வெளியேறுவதற்கு கிடைக்கும் எந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொள்கிறார்கள். என்ன மாதிரி தன்தன்காலில் நின்ற மக்களை அடுத்த வேளை உணவை மட்டுமே சிந்திக்கும் படியான நிலைக்கு வைத்து விட்டு அதை நலன் புரிகிராமங்கள் என்கிறார்கள்.

மற்றும் செய்திகளிலும் சீறிலங்காவின் ஜனாதிபதி என்று சொல்வதற்கு பதிலாக ஜனாதிபதி என்று சொல்வது அவரை முற்றுமுழுதாக எமது ஜனாதிபதியாக நாம் ஏற்றுக்கொள்வதாகப்பொருள்படும். அதே நேரத்தில் சில ஊடகங்களில் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்கிறார்கள். என்ன இரண்டுமே உண்மையானவை, எதை பாவித்தாலும் சரி என்கிறார்கள். அவரை தேசியத்தலைவராக ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஆனால் ஜனாதிபதியை மட்டும் தமது ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தானே பொருள்படும்.

இவற்றை விளங்கி பாவித்தால் கூட அவரவர் ஊடக உரிமை என்று விட்டுவிடலாம் ஆனால் பலர் இவற்றின் கனதி விளங்காமலே பாவிக்கிறார்கள். இனி பிரதம மந்திரி என்றால் யாரைச்சொல்கிறீர்கள் சிறீலங்காவின் பிரதம மந்திரி Disanayaka Mudiyanselage Jayaratne வையா? அல்லது நாடுகடந்த அரசின் உருந்திரகுமாரையா? என்றெரு கேள்விக்கும் எதிர்காலத்தில் இடமுண்டு. எனவே இப்பவே சிறீலங்காவின் பிரதம மந்திரி சொல்லி பழக்கப்படுத்திக் கொள்வது நன்று.

இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால் இலங்கையை இலங்கை (Sri Lanka) என்று சொல்லாமல் இலங்கைத்தீவு (Island of Sri Lanka) என்று சொல்வதே பொருத்தமாகும். ஓரு தீவுக்குள் இரண்டு நாடு இருக்கலாம். ஆனால் ஒரு நாட்டுக்குள் இன்னெரு நாடு இருக்கமுடியாது. தமிழீழ தேசத்தை நோக்கி பயணிப்பதாக கூறிக்கொள்ளும் நாங்கள் இதனையும் கவனிக்க வேண்டும்.

சுந்தரி (நன்றி: ஒருபேப்பர்).

Comments