இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இந்தியா


இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது அப்பாவி மக்கள் லட்சக் கணக்கானோர் பலியானார்கள். ஆஸ்திரே லியாவில் இந்தியர் ஒருவருக்கு பாதிப்பு என்றால் அலறும் இந்தியா, இலங்கை விவகாரத்தை வேடிக்கை பார்த்ததாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத் தியிருக்கிறது ‘விக்கிலீக்ஸ்’ இணையதளம்.

உலகெங்கும் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி களிடமிருந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச் சருக்கும், அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப் படும் கேபிள்கள் எனப்படும் ரகசிய அறிக்கைகளை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வந்தது. இவ்வாறு வெளியான இந்தக் கேபிள்கள், உலக நாடு கள் பலவற்றுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால், அமெரிக்காவுக்கும் தலைவலியை ஏற்படுத்தியது.

இந்தக் கேபிள்கள் மிக ரகசியமானவை. அமெரிக்க தூதரகங்கள் அனுப்பும் இந்தக் கேபிள்களில், அந்தந்த நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களின் பழக்க வழக்கங்கள், பலவீனங்கள், அவர்களின் அந்தரங் கங்கள் உட்பட பல்வேறு தகவல்களைப் பரிமாறுவது வழக்கம். அவ்வாறு பரிமாறப்பட்ட கேபிளின் ஒரு பகுதியாக, இந்தியாவின் இலங்கை நிலைப்பாடு தொடர்பாக அமெரிக்க தூதரகங்கள் அனுப்பிய கேபிள்களைத்தான் ‘விக்கிலீக்ஸ்’ இணையதளம் வெளியிட்டுள்ளது.

போரின் இறுதிக் கட்டத்தில், இந்தியா தெளிவான நிலைப்பாடு இல்லாமல், அனைத்து தரப்பையும் திருப்திப்படுத்த முயற்சி செய்து வந்ததாகக் கூறுகிறது. ஈழத்தில் நடைபெற்று வந்த போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து கவலை யைத் தெரிவித்த இந்தியா, அதே நேரத்தில், சர்வதேச நாடுகள் தலையிடுவதை கவனமாகத் தவிர்த்தது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 2009-ல் கொழும்பு சென்ற பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசிடம், வன்னிப் பகுதியில் அப்பாவிப் பொதுமக்கள் உயிர்ப்பலி ஆவது குறித்து கவலை தெரிவித்ததாக கொழும்பு நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ராணுவ ரீதியான வெற்றி இலங்கை அரசுக்கு ஒரு அரசியல் வாய்ப்பை ஏற்படு த்தும் என்பதாலேயே போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரணாப் முகர்ஜி முன்வைக்கவில்லை என்றும் அந்த கேபிள் தெரிவிக்கிறது.

கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி அன்று அனுப்பப்பட்ட ஒரு கேபிளில், சிவசங்கரமேனனோடு இலங்கை வெளியுறவுச் செயலர் பேச்சு வார்த்தை நடத்தினார். இதன்பின்னர் கருத்துத் தெரிவித்த சிவசங்கரமேனன், ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் மூலமாக விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார். இலங்கை அரசை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருவது என்பது அழும் குழந்தையை அடித்து இழுத்து வருவது போல இழுத்து வரவேண்டியிருக்கும் என்றும் சிவசங்கரமேனன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் இந்தச் சூழ்நிலையில், இந்தியா தலையிடுவதற்கான வாய்ப்பு துளியும் இல்லை என்றும் மேனன் தெரிவித்துள்ளார்.

மே மாதம் இரண்டாவது வாரத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த இலங்கைக்கான இங்கிலாந்து சிறப்புத் தூதர் எம்.கே.நாராயணன், இந்தியாவுக்குள், போரை நிறுத்த வேண்டும் என்ற நெருக்கடி அதிகமாக இருந்தாலும், விடுதலைப் புலிகளை அழிப்பதில் இலங்கை அரசு வெற்றி பெறும் நிலையில் இருப்பதால், இந்த நேரத்தில் இந்தியா ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளார்.

மே மாதத்தில் ஜார்ஜ் என்ற அமெரிக்கத் தூதர் சிவசங்கரமேனனைச் சந்தித்த போது, மேனன் இலங்கையில் மிக மிக மோசமான சூழல் இருப்பதை ஒப்புக் கொண்டாலும், அப்பாவிப் பொதுமக்கள் உயிர்ப் பலி ஆகாமல் தடுக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிடுவதை விட, அருகாமையில் இருக்கும் நாடே (இந்தியா) பரஸ்பரமாக இந்த விஷயத்தை பேசித் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏப்ரல் 24 அன்று இலங்கை சென்று வந்த பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், ‘போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை ராஜபக்ஷே ஏப்ரல் 27 அன்று அந்நாட்டின் பாராளுமன்றத்தில் அறிவிப்பார் என்றும், அது வரை அமெரிக்கா அமைதி காக்க வேண்டும்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்ஷே போர் நிறுத்தம் என்று அறிவிக்காமல், கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்படும் என்று அறிவித்தார். அதே நேரத்தில், இலங்கை ராணுவ அமைச்சகம், இதைப் போர் நிறுத்தம் என்று கருதக் கூடாது என்று தெரிவித்தது.

போருக்குப் பின் நடக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கை களிலாவது இந்தியா பங்கு கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்தும், அமெரிக்காவும் விரும்பினாலும், இந்தியா அ துபோல பங்கேற்காமல், விலகியே இருந்தது என்று அந்த கேபிள்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு மறைமுகமாகவும், நேர்முகமாகவும் இந்திய அரசு உதவி செய்கிறது என்ற பல்வேறு அமைப்பினரின் குற்றச்சாட்டுகளை விக்கிலீக்ஸ் கேபிள்கள் உறுதி செய்கின்றன. சிவசங்கரமேனனும், எம்.கே.நாராயணனும், இலங்கை சென்று திரும்பிய போதெல்லாம், முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து விட்டுச் சென்றதையும், அவர்களின் சந்திப்பின் அடிப்படையில், இந்தியாவின் கவலை இலங்கையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் அறிக்கை வெளியிட்டார்.

இப்போது ‘விக்கிலீக்ஸ்’ வெளியிட்டிருக்கும் இந்த விவகாரங்கள் எல்லாம், ஏற்கெனவே ஈழத் தமிழருக்காக வீதியில் இறங்கிப் போராடிய பெரும்பாலானோருக்குத் தெரிந்த விவகாரம்தான் என்றாலும், அந்தத் தகவல்கள் விக்கிலீக்ஸால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எத்தனை தகவல்கள் வெளி வந்தாலும் என்ன? இழந்த உயிர்கள் மீண்டும் வரவா போகின்றன? ஏக்கமாகக் கேட்கிறார்கள் ஈழத் தமிழர்கள்.

Comments