போர்க்குற்றவாளிகளின் கூடாரமா ஐ.நா சபை?

சிறிலங்காவின் போர்க்குற்றங்ளுக்குக் காரணமாக இருந்தவர்கள் இப்போது ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் கைகோர்ப்பதைக் காணமுடிகிறது.


கடந்தவாரம் நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்செயலரின் செயலகத்தில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது.

சிறிலங்காவின் வெளிவிவகார செயலர் றெமேஸ் ஜெயசிங்க, சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் ஆகியோருடன் ஐ.நா பொதுச்செயலரைச் சந்திக்கச் சென்றிருந்த இருவர் போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள்.

ஒருவர் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன.

அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்ற இவர் சிறிலங்கா அரசுக்காக 2005ம் ஆண்டு தொடக்கம் பணியாற்றி வருகிறார்.

அடுத்தவர் ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா.

அவர் சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் கட்டளை அதிகாரியாக இருந்து மன்னாரில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரைக்கும் புலிகளுக்கு எதிரான போரை நடத்தியவர்.

இவர் போரை நடத்திய காலங்களில் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படையினரின் பீரங்கித் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

அதைவிட, போரின் இறுதியில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் மற்றும் போராளிகள் இவரது உத்தரவின் பேரிலேயே படுகொலை செய்யப்பட்டனர்.

இவருக்கு இந்த உத்தரவை வழங்கியது பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே என்று, இராணுவத் தளபதியாக இருந்த போது சரத் பொன்சேகா கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கத்தில், இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர்குழு விசாரணைகளை ஆரம்பிக்க, இன்னொரு பக்கத்தில் ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை அனுப்பியது சிறிலங்கா அரசாங்கம்.

ஐ.நா பொதுச்செயலருக்கே சவால் விடும் வகையில் இந்த நியமனம் அமைந்திருந்தது.

இவரது இந்த நியமனத்தை நிராகரிக்க வேண்டும் என்று வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்ட போதும் அதை ஐ.நா பொதுச்செயலர் கண்டு கொள்ளவில்லை.

அண்மையில் இவர் அமெரிக்காவிலுள்ள தேவாலயம் ஒன்றில் உரையாற்றிய போது- புலம்பெயர் தமிழர்கள் அவரைப் போர்க்குற்றவாளி என்று முழக்கமிட்டனர்.

அதற்குப் பதிலளித்த மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா- தான் போர்க்குற்றம் இழைக்கவில்லை என்றும் அப்படி போர்க்குற்றம் இழைத்திருந்தால் வன்னியில் தன் மீது மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பேன் என்றும் கூறியிருந்தார்.

போர்க்குற்றம் இழைத்திருந்தால் தான் தண்டிக்கப்பட்டிருப்பேன்- அதிலிருந்து தப்பியதால் போர்க்குற்றம் இழைக்கவில்லை என்று அவர் ஒரு மாயையை உருவாக்க முனைகிறார்.

அவர் கரும்புலித் தாக்குதலில் உயிர் தப்பியதாகக் கூறிய சம்பவம் நடந்தது- 2009 மே மாதம்.

ஆனால் இவர் போர்க்குற்றம் இழைத்ததாக பிரதானமாக குற்றம் சாட்டப்படும் சம்பவங்கள் நடந்தது- போரின் இறுதிக்கட்டமான 2009 மே மாதத்தில்.

இவையிரண்டுக்கும் இடையில் அவர் எப்படியோ முடிச்சுப் போட்டுத் தப்பிக்க முனைகிறார்.

அதைவிட, சுதந்திரபுரம் பகுதியில் தான் இவர் கரும்புலித் தாக்குதலில் உயிர் தப்பியதாகக் கூறப்படும் சம்பவம் நடந்தது.

இடைத்தங்கல் முகாம் ஒன்றில் படையினர் சோதனையிடும் போது பெண் கரும்புலி ஒருவர் குண்டை வெடிக்க வைத்திருந்தார்.

அது ஒரு தாக்குதல் அல்ல. அந்த இடத்தில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் இருக்கவில்லை.

இவரை இலக்கு வைத்தே அவர் சென்றிருந்தார் என்று கூறப்பட்டாலும்- அது ஒரு தற்செயலான சம்பவமே தவிர தாக்குதல் சம்பவம் அல்ல.

இவருக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியுயோர்க்கில் அடைக்கலம் கொடுத்துள்ளார்.

அதுமட்டுமன்றி இவர் கடந்த வாரம் ஐ.நா பொதுச்செயலரைச் சந்தித்து கைகுலுக்கிக் கொண்டுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலரை மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சந்தித்தது இதுவே முதல் முறையா என்று கேட்கப்பட்ட போது, அது பற்றித் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் பான் கீ மூனின் பேச்சாளர்.

இதன் மூலம் இவர்களுக்கு இடையில் முன்னரும் சந்திப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் வலுப் பெற்றுள்ளன.

அடுத்து போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்காப் படைகளிடம் சரணடைய முன்வரும் புலிகளின் தலைவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதாக சிறிலங்கா அரசின் சார்பில் உறுதி கூறியவர் பாலித கொஹன்ன.

ஆனால் அந்த உத்தரவாதம் நிறைவேற்றப்படவில்லை.

இவரது உறுதிமொழியை நம்பிச் சரணடைய முன்வந்த புலிகளின் முக்கிய தலைவர்கள் சிங்களப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்

இப்போது இவர் ஐ.நாவுக்கான வதிவிடப் பிரதிநிதியாக பான் கீ மூனின் சிறகின் கீழ் இருக்கிறார்.

இவருக்கு எதிராகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன.

இவர்களை விட இந்த விவகாரத்தில் தொடர்புடைய இன்னொருவரும் ஐ.நா பொதுச்செயலரின் நிழலில் இருக்கிறார்.

சரணடைய முன்வரும் புலிகளின் தலைவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் உரிய பாதுகாப்பு அளிக்கும் என்று ஐ.நாவின் சார்பில் வாக்குறுதி கொடுத்த விஜய் நம்பியார் தான் அவர்.

போர்க்குற்றங்களுக்கு துணை போனதால் இவரும் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவரும் சேர்ந்தே இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.

சர்வதேச அளவில் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள- அல்லது அத்தகைய விசாரணைகளை எதிர்நோக்கவுள்ள மூவருடன் இணைந்து ஒரு சந்திப்பில் பங்கேற்றுள்ளார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்.

சிறிலங்கா அரச பிரதிநிதிகளுடனான சந்திப்பு என்ற போதும்- போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய உலகளாவிய கரிசனைகள் அதிகரித்துள்ள நிலையில் அவரது இந்தச் சந்திப்பு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

அதைவிடப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், போர்க்குற்றங்கள் பற்றி விசாரிக்கும் ஐ.நா பொதுச்செயலரின் நிபுணர்குழு தொடர்பாக போர்க்குற்றவாளிகளுடனேயே பேச்சு நடத்தியிருக்கிறார் பான் கீ மூன்.

யாராக இருந்தாலும் போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் அதற்குப் பொறுப்புக் கூறியே ஆக வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் அவர் இந்த விடயத்தில் எந்தளவுக்கு வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கிறார் என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டே வருகிறது.

குறிப்பாக ஐ.நா பொதுச்செயலர் சிறிலங்கா விடயத்தில் போர்க்குற்றங்களைத் தட்டிக் கழிக்கப் பார்க்கிறாரா என்ற சந்தேகங்கள் வலுவடையத் தொடங்கி விட்டன.

சிறிலங்கா அரசு அவரது நிபுணர்குழு விடயத்தில் தீர்க்கமான முடிவை எடுத்திருந்த போதும்- ஐ.நா பொதுச்செயலர் அவ்வப்போது வெளியிட்ட குழப்பமான தகவல்கள் அவரைத் தரம் தாழ்த்தி விட்டதென்பதில் சந்தேகம் இல்லை.

இப்போதும் அவர் போர்க்குற்ற விசாரணைகளைச் சந்திக்கும் நிலையில் உள்ளவர்களுடன் போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகப் பேசியிருப்பதாகக் கூறியிருப்பது சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை ஐ.நா கவனிக்காது போனாலோ அல்லது கருத்திலெடுக்காது போனாலோ எல்லாப் பழியும் பான் கீ மூன் மீதே விழப் போகிறது.

இன்னொரு பதவிக்காலத்துக்கான எதிர்பார்ப்பிலுள்ள அவரை சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் படுகுழியில் தள்ளி விடக் கூடும்.

குற்றங்கள் நிகழ்த்தியவர்களுக்கு மட்டும் சட்டம் தண்டனை வழங்குவதில்லை. அதை மறைப்பவர்களையும் தண்டிக்கிறது.

போர்க்குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுடன் உறவாடும் பான் கீ மூனுக்கும் அந்த வகையில் மீண்டும் பொதுச்செயலராகும் வாய்ப்பு பறிபோனாலும் ஆச்சரியம் இல்லை.

அப்படியான நிலை ஏற்பட்டால் அது காலம் அவருக்கு அளித்த தண்டனையாகவே கருதப்படும்.

முகிலன்
ஈழநேசன்

Comments