அவநம்பிக்கையில் ஆரம்பித்து, அவலத்திற்குள் நிற்கும் நாடு கடந்த தமிழீழ அரசு!

தமிழீழ மக்களது அவலங்களுக்கான இறுதி முயற்சியாகப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மிகப் பெரும் நெருக்கடிக்குள் சென்றுகொண்டுள்ளது.


நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற புதிய கருப் பொருளுக்குப் பலரும் உரிமை கோரினாலும், அதனை வெளிப்படையாக அறிவித்து, அதனை உருவாக்கும் பொறுப்பை திரு. ருத்திரகுமாரனிடம் வழங்கியது கே.பி. அவர்களே. முள்ளிவாய்க்கால் பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து புலம்பெயர் தமிழர்கள் மீண்டெழுவதற்கு முன்னர் கே.பி. அவர்கள் இதனை முன்மொழிந்த சம காலத்தில் இன்னொரு அதிர்ச்சிகரமானதொரு அறிவித்தலையும் விடுத்திருந்தார். தேசியத் தலைவர் அவர்களது இருப்புக் குறித்த அந்த அறிவித்தல் கே.பி. அவர்களது விம்பத்தைத் தகர்த்திருந்தது.

இந்த நிலையில், புலம்பெயர் தமிழீழ மக்கள் மத்தியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கருப் பொருள் சந்தேகத்துக்குரியதாகவும், அச்சத்திற்குரியதாகவும் நோக்கப்பட்டது. தேசியத் தலைவர் அவாகளது இருப்புக் குறித்த கே.பி.யின் அறிவித்தலும், அந்த வெற்றிடத்தை நோக்கிய அவரது நகர்வும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை உருவாக்கியது. கே.பி. சார்ந்த ஒரு சிலர் தவிர, அனைவரும் அவருக்கெதிரான நிலையையே எடுத்திருந்தனர்.

கே.பி. அவர்கள்மீதான சந்தேகமும் அவநம்பிக்கையும் உச்ச கட்டத்தை அடைந்திருந்த நிலையிலும், முள்ளிவாய்க்காலின் பின்னர் உருவான தமிழ்த் தேசிய கள நிலை மாற்றத்தை எதிர் கொள்ள புலம்பெயர் தளத்தில் ஒரு ஜனநாயகக் கட்டமைப்பின் அவசியம் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களில் விவாதத்திற்குள்ளானது. யாரால் முன்மொழியப்பட்டாலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ஜனநாயக போராட்ட வடிவத்தை மற்று முழுதாக, தமிழீழ மீட்பிற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானமும் எட்டப்பட்டது.அதற்கு, திரு. ருத்திரகுமாரன் அவர்களும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களால் உருவாக்கப்பட்ட மக்களவைகளுடன் தமிழீழ விடுதலைத் தளத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயற்படும் என்ற உறுதிமொழி திரு. ருத்திரகுமாரன் அவர்களால் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த வாக்குறுதியை அவரால் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்களை நடாத்தி முடிக்கும்வரையே காப்பாற்ற முடிந்தது.

திரு. ருத்திரகுமாரன் அவர்களது தேர்தலுக்குப் பிந்திய நிலை மாற்றமே, இன்றுவரை நாடு கடந்த தமிழீழ அராசாங்கத்தில் உருவாகி, உச்ச நிலையை அடைந்துள்ள குழப்பகரமான நிலையாகும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்த சந்தேகம் நீங்காத நிலையிலும், தேர்தலில் பங்கேற்பதா? இல்லையா? என்ற குழப்பத்தில் இருந்து விடுபடாத நிலையிலும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் பெருமளவில் பங்கேற்காத நிலையில், கே.பி. அவர்கள் சார்பானவர்களது ஆதிக்கம் அதில் மேலோங்கிய திரு. ருத்திரகுமாரன் அவர்களது மனமாற்றத்திற்குக் காரணமாகியது.

உருவாக்குனர் பொறுப்பிலிருந்து முதன்மை நிறைவேற்றுனர் பதவிக்கு உயர்ந்த திரு. ருத்திரகுமாரன் அவர்கள் பிரதமர் பதவியைக் குறி வைத்து காய் நகர்த்தல்களை மேற்கொண்டார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற தமிழீழ விடுதலை இலட்சியம் மாற்றம் பெற்று, ஒரு கட்சி அரசியலுக்குள் திரு. ருத்திரகுமாரன் தன்னைப் புதைத்துக்கொண்டார். தன்னைப் பலப்படுத்திக் கொள்வதற்காக, தனக்குச் சார்பானவர்களை அணி திரட்டிக்கொண்டார். இதுவே, தமிழ்த் தேசிய உணர்வாளர்களை எதிரணிக்கு வலு கட்டாயமாகத் தள்ளியது.

தனக்குச் சார்பானவர்களாக்க முடியாத சிலரது தேர்தல் முடிவுகள் பிற்போடப்பட்டது. சில இடங்களில் தேர்தலே நடாத்தாமல் தள்ளி வைக்கப்பட்டது. தேர்தலில் வென்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்கள்மீது கள்ள வாக்குக் குற்றச்சாட்டு சுமத்தி, களத்திலிருந்து அகற்றப்பட்டார்கள்.

சாதாரணமான சிறு விசாரணையுடன் தீர்த்து வைக்கப்பட வேண்டிய தேர்தல் பிணக்கு, சட்டம் பயின்ற ருத்திரகுமாரனால் பூதாகரமாக்கப்பட்டு, ஒன்பது மாதங்கள் கடந்த நிலையிலும் தீர்க்கவே முடியாத பிரச்சினையாகத் தொடர்ந்து செல்கின்றது. ‘சாதாரண தேர்தல் பிணக்கையே ஒன்பது மாதங்கள் கடந்தும் தீர்த்து வைக்க முடியாத திரு. ருத்திரகுமாரன் அவர்களால் தமிழீழம் என்ற தேசியப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமா?’ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் அவரே உருவாக்கினார்.

உலகின் ஜனநாயகக் கட்டமைப்பில், அரசியல் யாப்பை உருவாக்கும் சபை ஆட்சிக்கான தேர்தலில் பங்குபற்றுவதில்லை. அவ்வாறு பங்குபற்றும் நிலை உருவானால், அரசியல் யாப்பில் தமக்குச் சாதகமான அம்சங்களைப் புகுத்திவிடுவார்கள் என்பதனால், ஜனநாயகம் இந்த முறைமையை ஏற்படுத்தியுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதன்மை நிறைவேற்றுனராக இருந்து தயாரித்த அரசியல் யாப்பில் தனது எல்லையற்ற அதிகாரங்களுக்கான சில அம்சங்களைப் புகுத்த முற்பட்டதனாலேயே நாடு கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்களிடையே வெடிப்பு உருவானது. திரு. ருத்திரகுமாரன் அதனைச் சீர் செய்ய மறுத்த காரணத்தினாலேயே அந்த வெடிப்பு, பிளவாக மாற்றம் பெற்றுள்ளது.

தனி மனிதர் ஒருவரிடம் அதிகாரம் குவிக்கப்படுவது சர்வாதிகாரத்துக்கே வழிவகுக்கும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திலும் அதற்கான ஆரம்பமாகவே, இரண்டாவது அமர்வில் அங்கீகாரம் பெறாத யாப்பு மீது சத்தியப்பிரமாணம் எடுக்க நிர்ப்பந்திப்பது, அல்லாவிட்டால் வெளியேற்றுவதாக அச்சுறுத்துவது என ஜனநாயக மறுப்புகள் சிங்கள அரசு போலவே தொடர்கின்றது.

குழப்ப நிலை காரணமாக தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் முழுமையாகப் பங்குபற்றாத நிலையிலும், திட்டமிட்ட வகையில் தமக்கானவர்களைத் தெரிவு செய்வதில் தீவிரம் காட்டியதாலும் அங்கு தமிழ்த் தேசிய உணர்வாளர்களது பலம் குறைவாக இருந்தாலும், அவர்கள் பக்கம் நியாயமும், சத்தியமும் சேர்ந்தே நிற்கிறது.நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இதுவரை சில அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிட்டதைத் தவிர, உருப்படியாக எதுவுமே செய்ய முடியாமல் முடங்கியே போயுள்ளது. புலம்பெயர் தளங்களில் விடுதலைக்காகச் செயற்படும் அமைப்புக்களுடன் முரண்பட்ட போக்கினைக் கொள்வதனால், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் மக்களது கவனிப்புக்குள்ளாகாதவர்களாகவே தனிமைப்பட்டுப் போயுள்ளனர்.

மக்கள் மத்தியில் எந்தவொரு செயற்திட்டத்தினையும் கொண்டு செல்ல முடியாத சோர்வு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், திரு. ருத்திரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் குடிமக்கள அனைவருக்குமான பிரதமராகத் தன்னை ஜனநாயகப்படுத்த வேண்டும். கடந்த காலத் தவறுகளைத் திருத்தி, மே மாதத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது அமர்வில், முழுமைப்படுத்திய அவையில் அரசியல் யாப்பினை விவாதத்திற்கு எடுத்து, முழுமைப்படுத்தி, நிறைவேற்றிய பின்னர், அதன்மீதான சத்தியப்பிரமாணத்தை முன்மொழிய வேண்டும். தமிழ்த் தேசிய உணர்வாளர்களது நியாயமான அச்சங்கள் தீர்க்கப்பட்டு, அவர்களது கருத்துக்கள் செவிமடுக்கப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைக் குழிதோண்டிப் புதைத்த வரலாற்றுப் பழியை அவர் சுமக்க வேண்டிய நிலை உருவாகுவதைத் தடுக்க முடியாமல் போய்விடலாம்.

- இசைப்பிரியா

Comments