வறுமையின் கொடுமையால் காணிகளை விற்கும் தமிழர்களும் போட்டி போட்டு வாங்கும் முஸ்லிம்களும் சிங்களவர்களும்

கிழக்கில் சட்ட ரீதியான குடியேற்றமும் நிலப்பறிப்பும்-வறுமையின் கொடுமையால் காணிகளை விற்கும் தமிழர்களும் போட்டி போட்டு வாங்கும் முஸ்லிம்களும் சிங்களவர்களும்.
[Sri-Lanka-Reuters.jpg]
வடகிழக்கில் உள்ள தமிழர் பிரதேச காணிகள் சிங்கள அரசால் நீர்ப்பாசன திட்டங்கள், மீள்குடியேற்ற திட்டங்கள் என்ற பெயரில் ஆரம்பத்திலிருந்து அபகரிக்கப்பட்டு வருகின்றமை வரலாறு என்பது அனைவருக்கும் தெரியும். இக் காணி அபகரிப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் முடிந்தவரை எல்லைக் கிராமங்களில் தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்து அவர்கள் விவசாயச் செய்கையை மேற்கொள்வதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்தி கொடுத்திருந்தனர். அத்துடன் இத்திட்டங்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அனைத்து உதவிகளை வழங்கி எல்லைக் கிராம மக்களது வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பியதுடன் எல்லைக் கிராம பிள்ளைகளின் போசாக்கை மேம்படுத்த போசாக்கு திட்டங்களையும், முன்பள்ளிகளையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தி வந்திருந்தனர். இவ்வாறான திட்டங்கள் த.வி.புலிகளாலும், த.பு.கழகத்தினாலும் மேற்கொள்ளப்பட்டதனால் காணி அபகரிப்பு மட்டுப்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது மேற்கூறப்பட்ட நிலை மாறி எல்லைக் கிராம தமிழ் மக்களும் உள்ளுரில் உள்ள தமிழ் மக்களும் வறுமையின் காரணமாக தங்களது காணிகளை விற்று வருகின்றமை அதிகரித்துள்ளது. இக் காணிகளை தற்போது போட்டி போட்டுக்கொண்டு சிங்களவர்களை விட முஸ்லிம்களே அதிகளவில் கொள்வனவு செய்து வருகின்றனார். குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சிங்கள அரசியல் வாதிகளால் பொப்ய விசாலமான கடற்கரை பிரதேச சுற்றுலா காணிகள் கொள்வனவு செய்யப்படுகின்றது. அத்துடன் தமிழ் மக்களது உள்ளுர் காணிகள் முஸ்லிம்களால் கொள்வனவு செய்யப்படுகின்றது.

முஸ்லிம்கள் இக்காணிக் கொள்வனவை இரு வகையில் நடைமுறைப்படுத்துகின்றனர் அதாவது முஸ்லிம் நபர் ஒருவர் தனிப்பட்ட ரீதியில் காணியை கொள்வனவு செய்கின்றனர் அடுத்து விலை கூடிய விசாலமான வயற்காணிகளை முஸ்லிம் பள்ளிவாசல்கள் சம்மேளனத்திற்கூடாக கொள்வனவு செய்துவருகின்றனர். பள்ளிவாசல் சம்மேளனம் அக்காணிகளை வறிய முஸ்லிம் குடும்பங்களுக்கு மிக குறைந்த விலையில் விற்று அவர்களை அங்கு மீள்குடியேற்றம் செய்கின்றனர்.

இவ்வாறு எத்தனையோ தமிழர் காணிகள் பறிபோய்யுள்ளது.மட்டக்களப்பில் முந்திரி செய்கைக்கு பெயர்போன காணிகள் முஸ்லிம்களின் பெயர்களிலும். பள்ளிவாசல் சம்மேளத்தின் பெயரிலும் உள்ளது. பாசிக்குடா சுற்றுலாக் காணி சிங்களவர்களின் பெயரில் உள்ளது. அம்பாறையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்களும், அடுத்து சிங்களவர்களும் சிறுபான்மையினராக தமிழர்களும் சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ளனர் நூறுவீதம் தமிழர்களைக் கொண்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முஸ்லிம்கள் காணிகளை வாங்கி ஊடுருவி வருகின்றனர்.

திருகோணமலையிலும் பல காணிகள் இராணுவத்தினரின் குடும்பங்களின் பெயர்களில் உள்ளது. இந்த நிலையே மன்னார், வன்னி, வவுனியா, யாழ் மாவட்டங்களிலும் காணப்படுகின்றது.

இவ்வாறு வறிய தமிழ் மக்கள் இக்காணிகளை விற்று பாரியதொரு பிரச்சனையை எதிர்காலத்தில் தமக்குத் தாமே உருவாக்கி கொண்டு வருகின்றனர். வயிற்றுப் பசியுடன் காணப்படும் எல்லைக்கிராம தமிழ் மக்களிடம் காணி விற்பதனால் ஏற்படும் எதிர்கால பிரச்சனைகள் தொடர்பாக பேசமுடியாத நிலையே உள்ளது. தங்களுக்கு ஓர் சிறுதுண்டு வளவு வாழ்வதற்கு போதும் என்று கூறிக்கொண்டு கஸ்டப்பட்டு காடுகளை துப்பரவு செய்து உருவாக்கிய வளம் மிக்க நெற்காணிகளை முஸ்லிகம்களுக்கு விற்கின்றனர்.

பேமிற் காணிகளை உறவுகளுக்கூடாகவே இடமாற்றக்கூடிய சட்டம் இருப்பினும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் தங்களது அரசியல் செல்வாக்குகளால் பிரதேச செயலாளர்களைக் கொண்டு தங்களை காணிக்கு உரித்துடையவர்களாக தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். எனவே, மேற்படி காணி அபகரிப்பை புலம்பெயர் தமிழ் உறவுகள் கவணத்தில் கொண்டு தமிழர் தாயகத்தில் விற்கும் நிலையில் உள்ள எல்லைக் கிராம காணிகளை தங்களது சொந்தங்களின் பெயரில் கொள்வனவு செய்வதற்கு முன்வரவேண்டும்.

அத்துடன் அவர்கள் விரும்பினால் அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் காணிகளை எல்லைக்கிராம மக்களின் பயிற்செய்கை, விவசாயச் செய்கைக்கு ஒரு சிறிய குத்தகையில் வழங்கலாம். அல்லது தாங்கள் கொள்வனவு செய்த காணியை தொண்டர் அமைப்புக்கு தெரியப்படுத்தி அவ் அமைப்புக்களுடன் இணைந்து திட்டங்களை அமுல்ப்படுத்தலாம். இதனால் நிதி உதவி செய்பவர்களுக்கு தமிழர் தாயகத்தில் ஒரு நிலையான காணிச்சொத்து இருப்பதுடன் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியேழுப்புவதோடு காணி அபகரிப்பையும் தடுத்து நிறுத்தி தமிழர் பிரதேசத்தை பாதுகாக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் இருந்து தேவன்,
(உள்ளூர் தொண்டர் அமைப்பில் பணியாற்றும் ஓர் பணியாளன்)

நன்றி ஈழம்5

Comments