தமிழர் இறைமையை ஏற்காத எந்தத் தீர்வும் ஏற்கப்படமாட்டா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் பதிவு செய்யப்படாததால் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகின்றது. அதற்காக தமிழரசுக் கட்சிக்குத் தான் மக்கள் வாக்களிக்கின்றார்கள் என்று கருதுவது தவறானதாகும்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்தால், தமிழரசுக் கட்சியின் வரலாறு புதைக்கப்பட்டு விடுமென்பது போல் கருத்துத் தெரிவித்த சீ. வீ. கே. சிவஞானத்தின் கூற்றினை, யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அதனை நிராகரித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

ஓரணியில் செயல்பட வேண்டிய காலத்தில், வரலாறு தொலைந்து விடும், புதைந்து விடுமென கருத்துக் கூறுவது மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய பாதைகளையும் திறந்து விடும்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழரசுக் கட்சியாக மாற்ற விரும்புகிறவர்களும் ஓரணியை இறுக்கமாகப் பேண உறுதி கொண்டவர்களும் அண்மைய நேர்காணல் ஒன்றில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் முன்வைத்த காத்திரமான கருத்தொன்றையும் கவனிக்க வேண்டும்.

அடிப்படைக் கோட்பாடுகளில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கும் கஜேந்திரகுமார் அணியினரை, கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ள வேண்டுமென அரியநேந்திரன் கூறியிருந்தார்.

பல கானல் நீர்களை நிஜமென்று நம்பி, அதைக் கடந்து சென்று, ஏதுமற்ற வெளிகளைத் தரிசித்த தமிழ் மக்கள், சரத்துக்கள் உதிர்ந்து போன, தமிழர் இறைமையை ஏற்றுக் கொள்ளாத, பட்டமரமான 13 ஆவது திருத்தச் சட்டத்தை, அரசியல் தீர்விற்கான சகல ரோக நிவாரணியாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோமென கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், செயலாளர் மாவை சேனாதிராஜாவும் பல தடவைகள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

ஆகவே எந்தத் தீர்வு திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறது என்பதனை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

“”நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசுகின்றோம்’” என்கிற கதையாடல்களையே சர்வதேச சமூகத்தின் முன்னால் அரசு கூறுகிறது.
மனித உரிமை மீறல், யுத்தப் போர்க் குற்றங்கள் போன்ற அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு, தமிழர் தரப்போடு பேசுகிறோம் என்ற கூற்று, தற்காப்பு அரணாக விளங்குமென அரசு கணிப்பிடுகிறது.

ஆனாலும் கூட்டமைப்போடு பேசுகிறோம் என்கிற கருவியை மட்டும் கையாண்டு, சர்வதேச அழுத்தத்தை தணித்து விட முடியாதென உணரும் அரசு, சட்டமா அதிபர் மோகான் பீரிஸையும், வெளிவிவகாரச் செயலாளர் ரொமேஷ் ஜெயசிங்கவையும் நியூயோர்க்கிற்கு அனுப்பி, இரகசிய சந்திப்பொன்றினை பான் கீ மூனுடன் ஏற்படுத்துகிறது.

இச் சந்திப்பு நிகழவில்லையென பிரதி வெளியுறவு அமைச்சர், நிராகரித்தாலும் இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்ட புகைப்படங்கள், இச்சந்திப்பின் நிஜத்தை அம்பலமாக்கியுள்ளன.

மனித உரிமை மீறல் தொடர்பாக, தற்போது பல முனைத் தாக்குதல்களை எதிர்கொள்கிறது இலங்கை அரசு.

இலங்கைக்கான ஐ. நா. சபையின் வதிவிடப் பிரதிநிதி பாலித்த கோகன்னாவைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த, புலம்பெயர் அமைப்புக்கள் காட்டும் தீவிரமும் பான் கீமூனால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கை எப்போதும் வெளியாகுமென்கிற அச்சமும், இந்த அரசை உயர்நிலை அதிகாரிகளின் திடீர் இரகசியப் பயணத்தின் பின்புலமாக இருக்கலாம்.

ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் உடனான சந்திப்பில் மோகான் பீரிஸ், ரொமேஷ் சிங்காவுடன் வதிவிடப் பிரதிநிதி பாலித்த கோகன்னவும், உதவிப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் இணைந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இப்பயணங்களும் சர்வதேச விசாரணை தொடர்பாக ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு றொபேர்ட் ஓ பிளேக் வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்களும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றச் செயல்கள் குறித்தான அனைத்துலக விசாரணை அவசியமென அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் ஒன்றோடொன்று தொடர்புள்ள விவகாரங்களே போல் தெரிகிறது.

இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை, பல தரப்புக்களும் முன் வைக்கும் போது பொறுப்புடைமை (அஞிஞிணிதண tச்ஞடிடூடிtதூ) அல்லது பொறுப்புக் கூறல் என்கிற சொற் பிரயோகமே அதிகளவில் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.

பொறுப்புடைமை பற்றிப் பேசுபவர்கள், ஐ. நா சபை நியமித்த நிபுணர் குழு, பொறுப்புக் கூற வேண்டியவர்களால் உருவாக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவோடு இணைந்து செயற்பட வேண்டுமென்கிற ஒவ்வாத விடயத்தையும் வலியுறுத்துகின்றனர்.
இவை தவிர, கடந்த மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள ஐ. நா. மனித உரிமைப் பேரவையின் 16 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த விவகாரம் எழுப்பப்படுமா என்பதையும் பார்க்க வேண்டும்.

192 நாடுகளை உள்ளடக்கிய இன்றைய ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 18 ஜூன் 2007 இல் உருவாக்கப்பட்டது இந்த மனித உரிமைப் பேரவை.
47 நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இச் சபைக்கு ஆலோசனை வழங்க, மதியுரைக் குழுவொன்றும் உண்டு.

இம்மாதம் 25 ஆம் திகதி வரை இக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் பல நாட்டு விவகாரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் கொழுந்து விட்டெரியும் லிபியா பிரச்சினை, மேலோங்கிக் காணப்படுகிறது.

இதில் லிபியா பங்குகொள்ள முடியாதென்கிற முடிவும் வெளியாகியுள்ளது. அத்தோடு ஐ. நா. மனித உரிமை அமைப்பிலிருந்து முதன் முதலாக இடைநிறுத்தப்பட்ட நாடு என்ற வரலாற்றுப் பதிவினை லிபியா பெற்றுள்ளது.

பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் போக்குவரத்துத் தடை, சொத்து முடக்கம் என்பன முக்கியமானவை.
ஆனாலும் தேவையற்ற விவகாரமென்று ரஷ்யா இதனை விமர்சித்தாலும் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

லிபியா தொடர்பாக மனித உரிமைப் பேரவையில் உரையாற்றிய சீனப் பிரதிநிதி வொங்குன் (ஙிச்ணஞ் கிதண) அவர்கள் குறிப்பிடும் போது, உலகப் பொருளாதார நெருக்கடியால் உருவாகியுள்ள வறுமையை ஒழிக்காமல், மனித உரிமையைப் பற்றி பேசுவது அர்த்தமற்ற சொல்லாடலாக அது அமைந்து விடுமென சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்தோடு தற்போது ஏற்பட்டுள்ள லிபிய நெருக்கடி, சமாதான வழியிலான பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
இதே தத்துவ விளக்கத்தை வன்னிப் பேரவலம் நிகழும் போது வலியுறுத்தாமல், எறிகணைகளையும் முப்பரிமாண ராடர்களையும் போர் விமானங்களையும் இலங்கை இராணுவத்திற்கு அன்று சீனா கொடுத்து உதவிய விவகாரத்தை தமிழ் மக்கள் இலகுவில் மறக்க மாட்டார்கள்.
அதேவேளை மனித உரிமைப் பேரவையின் இன்னுமொரு முக்கியமான விடயமொன்றும் பேசப்படுகிறது.

கடந்த 12 வருட காலத்தில் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் நடைபெற்ற 2 இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறை குறித்த விவகாரமாகும்.

இவை தவிர, இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்க, பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் தலைவரான மர்சூகி தருஸ்மான் (Mச்ணூத்தடுடி ஈச்ணூதண்ட்ச்ண) அவர்களிடம் கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசில் நிகழும் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படவுள்ளது.

ஆயினும் இலங்கை விவகாரம் குறித்து தருஸ்மான் தயாரித்துள்ள அறிக்கையை நடைபெறுகின்ற மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் அதன் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரிடம் பான் கீ மூன் சமர்ப்பிப்பாரா என்கிற சந்தேகம் எழுகின்றது.

ஏனெனில் பேரவை வெளியிட்டுள்ள உத்தேச நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் தொடர்பாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
ஆனாலும் லிபியா பிரச்சினை, ஏனைய விவகாரங்களின் முக்கியத்துவத்தை விழுங்கி விட்டது என்கிற கருத்தினையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
மியன்மாரில் நிகழும் மனித உரிமை மீறல்களை கவனித்து அறிக்கை தயாரிப்பதற்கு தோமஸ் ஒஜே குயின்ரன் (கூடணிட்ச்ண் Oடீஞுச் கிதடிணtச்ணண) என்பவரை விசேட பிரதிநிதியாக நியமிக்க, பேரவை முடிவு செய்துள்ளது.

அத்தோடு பாலஸ்தீனம் மற்றும் அதனை அண்டிய ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல் பற்றியும் பேசப்படப் போகிறது.

குறிப்பாக கிழக்கு ஜெருசலம் மற்றும் சிரியாவின் கோலன் மலைப் பிரதேசங்களில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்கள் பற்றி விவாதிக்கப்படும்.

இவை தவிர, நடைபெறும் 16 ஆவது கூட்டத் தொடரிலும் தீர்மானம் 13/6 க்கமைய, பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை குறித்து பரிசீலிக்க பேரவை தீர்மானித்துள்ளது.

ஆகவே அமெரிக்கத் தரப்பிலிருந்து காட்டமான அறிக்கைகள் வெளிவருவதும் செனட் சபைகள் தீர்மானங்களை நிறைவேற்றுவதும், ஏதோவொரு மாற்றம் நிகழ்வது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும் பேச வேண்டிய இடத்தில் பேசப் படாமல் இருப்பது சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.

– இதயச்சந்திரன்
நன்றி: வீரகேசரி

Comments